Tuesday, August 20, 2013

ழான் பால் சார்த் (சார்த்தர்)


நான் மெய்யியல் பயின்றபோது எனக்கு மிகவும் பிடித்த மெய்யியலார்களில் ஒருவர் சார்த்தர் (1905 – 1980). பிரெஞ்சு நாவலாசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், தத்துவ அறிஞர். எக்ஸிஸ்டன்சியலிசம் என்ற புதிய சிந்தனைக்கு வித்திட்டவர்களில் ஒருவர். இவரிடம் எனக்கு அதிகம் பிடித்தது என்னவென்றால் 1964ல் இவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டபோது, 'நீ யாருடா எனக்கு பரிசு கொடுக்க? என் அருமை எனக்கு எப்பவோ தெரியும்' என்றும் 'ஒரு எழுத்தாளர் தன்னை யாருக்கும் அடிமையாக்கிவிடக் கூடாது' என்றும் சொல்லி அதை 'வேண்டாம்' என்று நிராகரித்தவர்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பாவம் மிகவும் மோசமானதாக (நம் பார்வையில்!) இருந்தது. இவரின் இலக்கிய ஆர்வம் பிடிக்காமல் வந்த மனைவியர்கள்(!) எல்லாம் ஓடிச் சென்றனர். இறுதியில் சிமோன் தே போவா என்ற பெண்ணியவாதியோடு இணைந்து வாழ்ந்தார். நம் வாழ்வில் நாம் கொள்ளும் நட்பையும் உறவையும் சேடிசம் (மற்றவர்களுக்கு வலி கொடுத்து அதில் இன்பம் காண்பது) அல்லது மேஸோகிசம் (தனக்குத் தானே வலி கொடுத்து அதில் இன்பம் காண்பது) என அழைத்தார். மனித உறவுகள் நம்மைச் சுற்றி நாமே இட்டுக்கொள்ளும் மின்சார வேலி என்றும் அந்த வேலி மற்றவர்களை நம் அருகில் விடுவதில்லை. நம்மையும் ஒரு கட்டத்தில் அது நெறித்து விடுகிறது. தன் உறவுகளில் எழுந்த சிக்கல்களால் இப்படிப்பட்ட சிந்தனைக்கு அவர் தள்ளப்பட்டார் என்பது அவரது நண்பர்களின் கருத்து.

இவரின் இந்தச் சிந்தனையிலிருந்து உருவானதுதான் ஒரு புதுமொழி: 'நமக்கு அருகில் இருப்பவர் நம் நரகம்' (ஹெல் இஸ் த அதர்). இவர் கூறும் எடுத்துக்காட்டு இதுதான். ஒரு ஆணையும், இரண்டு பெண்களையும் ஒரு அறைக்குள் அடைத்து விடுங்கள். அவர்களில் யாரும் தவறு செய்யவே முடியாது. ஒரு ஆண் மற்றொரு பெண்ணோடு பேசினால் மற்றவள் பொறாமைப்பட்டு பேச விட மாட்டாள். இரண்டு பெண்களும் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆணுக்கு பேச வாய்ப்பே கிடைக்காது. இங்கே 'ஹெல் இஸ் த அதர்'. இதைச் சொல்லிவிட்டு இதை அப்படியே நம் உலக வாழ்க்கையோடு ஒப்பிடுவார். நம்மை யாரோ எப்போதுமே சாவித்துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே நாம் நினைக்கிறோம். அதனால் தான் நாம் 'நல்லவர்களாக' இருக்க நினைக்கிறோம். நமக்குக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு 'சிரிக்க' முயற்சி செய்கிறோம். 'நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்' அந்த நபரும் நமக்கு ஒரு நரகம். 

இரண்டாவதாக, 'மனிதர்களின் சுதந்திரம் அவர்களின் சாபக்கேடு'. மனிதர்கள் சுதந்திரமாக வாழப் பிறந்தவர்கள் என்று நினைப்பது நல்லதுதான். ஆனால் 'இதுவா – அதுவா' என நம்முன் இருக்கும் சாய்ஸ் நமக்கு வரம் என்றாலும், தேர்ந்தெடுத்தபின் 'இதை எடுத்திருக்கலாமோ – அதை எடுத்திருக்கலாமோ' என நினைப்பது சாபமாக மாறுகின்றது. ஒவ்வொரு பொழுதுமே நாம் முடிவெடுக்கிறோம். காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை நாம் முடிவுகள் எடுக்கிறோம். 'எழுந்தவுடன் கட்டிலுக்கு இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்ற சாய்ஸ். பின் கழிவறையில் லைட் போடவா, வேண்டாமா என்ற சாய்ஸ். இந்தப் பற்பசையா, அந்தப் பற்பசையா என்ற சாய்ஸ். குளிக்கவா, வேண்டாமா என்ற சாய்ஸ். வேலைக்குப் போகவா, வேண்டாமா என்ற சாய்ஸ். சாப்பாட்டில் சாய்ஸ். பேருந்தில் சாய்ஸ். டிரெயினில் சாய்ஸ். நண்பர்களில் சாய்ஸ். சிகரெட்டுகளில் சாய்ஸ். டிடெர்ஜன்டுகளில் சாய்ஸ்'. இந்த எல்லா சாய்சுகளிலும் நமக்குத் துன்பமும் வரலாம், இன்பமும் வரலாம். 

No comments:

Post a Comment