Sunday, August 18, 2013

கொஞ்சம் நடிங்க பாஸ்!


நான் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்ற போது அதிகமாக ரசித்துப் பார்த்த சேனல் 'ஆதித்யா'. அது ஒன்னுதான் பார்க்குற மாதிரி இருக்கு! ஒவ்வொரு நிகழ்ச்சியின் இடையிலும் வந்த ஒரு 'கேப் ஃபில்லர்' எனக்கு மிகவும் பிடித்தது. அந்த கேப் ஃபில்லருக்காகவே நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினேன். அந்த 'கேப் ஃபில்லரின்' பெயர் 'கொஞ்சம் நடிங்க பாஸ்'. சன் டிவி காம்பியர் ஆதவன் அவர்களின் புதிய முயற்சி. தொடங்கி ஏறக்குறைய ஐந்து மாதங்கள் ஆகியிருக்கிறது என்பதை நான் பின்பு அறிந்து கொண்டேன்.

சாதாரண மக்களிடம் ஒரு நடிகனைத் தேடும் புதிய முயற்சி இது. ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோவோ அல்லது ஹீரோயினோ பேசுவதையோ, ஒரு பஞ்ச் டயலாக்கையோ, ஒரு சிட்டுவேஷன் டயலாக்கையோ முதலில் பேசிக் காட்டுவார் ஆதவன். பின் அன்றைய தினத்தில் யாரைச் சந்திக்கிறாரோ – குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பிக்னிக் வந்தவர்கள், ஷாப்பிங் செய்பவர்கள் மற்றும் பலர் – அவர்களைப் பேசச் சொல்லுவார். 'ஷாட். கேமரா. ரோலிங். ஆக்ஷன். கொஞ்சம் நடிங்க பாஸ்' எனத் தொடங்கி பலர் டயலாக்கைப் பேச முயற்சி செய்வர், சிலர் வெட்கப்படுவர், சிலர் மறைந்து கொள்வர், சிலர் சம்பந்தமேயில்லாமல் பேசுவர். அனைவரின் நகைச்சுவை நடிப்போடு சேர்த்து ஆதவனின் 'டைமிங்' கமெண்ட்ஸ் வேறு.

இதே ஆதவன் இன்று என்னிடம் வந்து 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்று சொன்னால் நான் எப்படி நடிப்பேன் என்று பார்ப்பதற்காக நானாக மூன்று சினி டயலாக்குகளை எடுத்து முயற்சி செய்தேன்.

டயலாக் 1: விக்ரம் அணுஷ்காவிடம் தன்னிலை விளக்கும் 'தெய்வத்திருமகள்'

நிலா...

கிருஷ்ணா...

சாக்லட் ஃபேக்டரி...

அவிலான்ச்சி...

அங்க நிறைய ஆடெல்லாம் இருக்கும்...

நெறைய மாடு...

இல்ல..ல...

பெரிய ரோடு இருக்கும்...

பெரிய மரமெல்லாம் இருக்கும்...

அப்புறம்...


டயலாக் 2: விஜய் ஜெனிலியாவிடம் பேசும் 'சச்சின்' லவ் டயலாக்.

இந்தக் கன்னம் கின்னமெல்லாம் செவக்க...

இவ்ளோ கிட்ட வந்து...

உம் மூச்சு என்மேல பட...

என் கண்ணுல நீ தெரிய...

ஐ லவ் யூ...

ஐ லவ் யூ சச்சின்னு நீ சொல்லல...

சொல்லுவ...

வர்றேன்...


டயலாக் 3: சிவாஜியும், கமலும் 'தேவர்மகனில்'

வெத வெதச்சவுடனே பழஞ் சாப்பிடனுன்னு நெனைக்க முடியுமோ?!

இன்னைக்கு நான் வெதைக்கிறேன்...

நாளைக்கி நீ பழஞ் சாப்பிடுவ...

அப்புறம் ஒன் மகன் சாப்பிடுவான்...

அதுக்கப்பறம் அவன் மகன் சாப்பிடுவான்...

அதெல்லாம் இருந்து பார்க்கிறதுக்கு நான் இருக்க மாட்டேன்...

ஆனா வெத நான் போட்டது...

இதெல்லாம் என்ன பெருமயா ... கடம ...


என் மூன்று முயற்சிகளுமே தோற்று விட்டன. டயலாக் மறந்து விடும். அல்லது பாதியிலே கூச்சம் வந்துவிடும். அல்லது நானாகச் சிரித்து விடுவேன். டயலாக் வரும் ஆனால் ஆக்ஷன் வராது. நான்கு வரி டயலாக்கையே நடிக்க முடியவில்லையே என நொந்து கொண்டேன். 

'கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சி எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்: 'யாரும் யாரையும் காப்பி பண்ண முடியாது' என்பதுதான். எங்க ஊருக்குப் போகும்போதெல்லாம் பிஞ்சைகளில் (புன்செய் என்பதன் மரூஉ) பாத்தி கட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கும். உழுது கிடக்கும் நிலத்தை ஒரே நபர் பாத்தி பாத்தியாகப் பிரிப்பார். எந்த அளவுகோலும் இருக்காது. பழைய பாத்தி இருந்த தடமும் இருக்காது. ஆனாலும் அவ்வளவு அழகாகப் பாத்தி பிரிப்பார். அனைத்துப் பாத்திகளும் ஒரே அளவாக இருக்கும். அனைத்துப் பாத்திகளும் தண்ணீர்க் கிணற்றோடு வாய்க்கால்களாக இணைக்கப்பட்டிருக்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் விண்டோஸின் பெரிய மனிதர் என்றால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் பெரிய மனிதர் என்றால், எங்கள் ஊரில் பாத்தி கட்டும் முனியாண்டியும், மாடசாமியும் பெரிய மனிதர்கள்தாம். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நடிக்கும் கதாப்பாத்திரத்தில் ஒவ்வொருவருமே பெரிய மனிதர்கள்தாம். யாரும் யாரையும் 'போல' இருக்கத் தேவையில்லை. யாரும் யாரையும் போலவும் இருக்க முடியாது. அப்படி இருக்க முயற்சி செய்தால் நாம் ஒரு 'காமெடி பீஸாகத்தான்' இருப்போம்.

நம்ம வீட்டுலயும், ஸ்கூல்லயும் நம்ம குழந்தைகள நாம இப்படிச் சொல்லித்தான வளர்க்கிறோம். 'நீ வளர்ந்து பெரிய ஆளானதும் அவரைப் போல இருக்கணும், இவரைப் போல இருக்கணும்' எனத் தொடங்கும் இந்த 'போல' நாம் வளர்ந்தாலும் நம்மை விடுவதில்லை. வாழ்க்கை முழுவதுமே நாம பிறரைப் போலவே வாழ முயற்சிக்கிறோம். பிறரைப் போலவே 'நடிக்க' முயற்சிக்கிறோம். 

ரோஜா தான் நிலவைப் போல இல்லையே என்றோ, நிலவோ தான் சூரியனைப் போல இல்லையே என்றோ, கன்றுக்குட்டி தான் பூனை போல இல்லையே என்றோ, தென்னை மரம் தான் தேக்கு மரம் போல இல்லையோ என்றோ, ஆறு தான் மலைபோல இல்லையே என்றோ வருத்தப்படுவதில்லை. இந்த வருத்தம் வருவது மனிதர்களுக்கு மட்டும்தான்.

பிறரைப் போலவே மாற வேண்டும் என நினைத்து நம்மைப் போல நாம் மாறாமலே இறுதி வரை இருந்து விடுவதுதான் மிகவும் கொடுமையானது.

ஓஷோ அழகாகச் சொல்வார்: 'நீ உன்னைப் போல இருப்பதே போதும். அதுவே பெரிய கஷ்டம். அப்படி இருக்கவே நீ உன் படிப்பு, கலாச்சாரம், வளர்ப்பு அனைத்தோடும் போராட வேண்டும். ஏனெனில் இந்த மூன்றுமே 'உன்னை உன்னைப் போல இருக்க விடாது''.

ரொம்ப சீரியஸாக வேண்டாம்...

டு மேக் தெ லாங் ஸ்டோரி ஷார்ட்...

நம்ம அடுத்தவங்கள மாதிரி பேசணும், செய்யணும்னு நினைச்சாலே அங்க காமெடிதான்...

ஹலோ...

உங்களத்தான்...

'கொஞ்சம் நடிங்க பாஸ்...!'

No comments:

Post a Comment