'என்னைச் சுற்றி எப்போதும் எதிர்மறையான நிகழ்வுகளே இருக்கிறது. என் குடும்பம், வேலை எல்லாமே கஷ்டமா இருக்கு. நான் இதை எப்படி சமாளிப்பேன்?' என்று பல நேரங்களில் நாம் புலம்பியிருப்போம். இந்த புலம்பலுக்கு இயேசு தரும் பதில்:
நான் ஒருநாள் திபேரியக் கடலுக்கு அருகில் போதித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி ஒரே கூட்டம். ரெண்டு மூன்று நாளா என்னைப் பின்தொடர்ந்து வந்துக்கிட்டேயிருந்தாங்க. அவங்கள பார்த்தா பரிதாபமா இருந்துச்சு. பசி, பட்டினி, அலைச்சல். இந்த எதிர்மறையான நிகழ்வை சமாளிக்க நான் அவர்களுக்கு உணவு கொடுக்க நினைத்தேன். 'நீங்களே உணவு கொடுங்க' என்று சீடர்களுக்குச் சொன்னேன். அவங்க உடனே 'இவ்ளோ ஆகும், அவ்ளோ ஆகும்' என்று கணக்குப்பார்த்தாங்க. உங்ககிட்ட என்ன இருக்குன்னு கேட்டேன். 'ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் இருக்குன்னு சொன்னாங்க. எல்லாரையும் புல்தரையில உட்காரச் சொல்லி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தேன். எல்லாரும் வயிறார சாப்பிட்டபின் மீதித்துண்டுகளை பன்னிரண்டு கூடைகளில் எடுத்தாங்க. (காண்க: மத்தேயு 14.13-21. மாற்கு 6.30-34. லூக்கா 9.10-17. யோவான் 6.1-15)
இதை நிர்வாகம் அல்லது மேலாண்மை அடிப்படையில் பகுத்தறிந்தால், மக்களின் பசி என்பது ஒரு எதிர்மறை நிகழ்வு. இதை என் சீடர்களும், நானும் எதிர்கொண்ட முறை:
சீடர்கள்: 'ஐயயோ, அவங்கள அனுப்பி விடுங்க...' என்று எதிர்மறையாக இருந்தாங்க (reactive)
நான்: 'நீங்களே உணவு கொடுங்க'. நான் நேர்மறையாகச் சொன்னேன். (proactive)
சீடர்கள்: எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சனையாகப் (problem) பார்த்தாங்க.
நான்: எதிர்மறை நிகழ்வை ஒரு வாய்ப்பாகப் (opportunity) பார்த்தேன்
சீடர்கள்: வெறுங்கை முழம் போடுமான்னு கேட்டாங்க. இருநூறு தெனாரியம் வேண்டுமே என்று கணக்குப் போட்டாங்க. (emptiness syndrome)
நான்: வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் ஐந்தும் மூலதனம்னு. அவங்ககிட்ட இருக்கிற ஆற்றலைப் பயன்படுத்தச் சொன்னேன் (making use of the resources)
உங்க தனிநபர் வாழ்வில், குடும்ப உறவில், பணியிடத்தில் எதிர்மறை நிகழ்வு வந்தால்...
1. அதை பூதக்கண்ணாடி போட்டு பெரிதாக்கி பயந்து ஓடிட வேண்டாம். கஷ்டம் வராம இருந்தா நல்லா இருக்குமேன்னு ஆகாயக் கோட்டையும் கட்ட வேண்டாம். கஷ்டம் வந்திடுச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க. அதுதான் 'being proactive''.
2. பிரச்சினையாப் பார்த்தா பிரச்சினைதான். அதையே மாற்றத்திற்கான 'வாய்ப்பாகப்' பார்த்தால் வித்தியாசமான தீர்வுகளைக் காண முடியும். சிற்பியோட உளி கல்லுக்கு வலியாகத் தெரிந்தால் உடைந்துவிடும். ஆனால் அந்த வலிதான் அதுதான் சிற்பமாக மாறுவதற்கான வாய்ப்பு.
3. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் நம்மிடம்தான் இருக்கின்றது. கையில் இப்போது இருக்கின்றவற்றை வைத்து முயற்சி செய்வதை விடுத்து நாளை விடியாதா? நலமுடன் மலராதா? என்று காத்திருந்தால் வெறுமைதான் மிஞ்சும். நம் இறைவனே இருக்கின்றவராகத்தானே இருக்கின்றார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு இருக்க வேண்டியது நான் மக்கள் கூட்டத்தின் மீது கொண்ட பரிவு (compassion - empathy). இவங்களுக்கு ஹெல்ப் பண்ணினா நமக்கு என்ன கிடைக்கும்னு நினைப்பது இழிவு. இவங்களுக்கு நாம் ஹெல்ப் செய்யலன்னா அவங்களுக்கு என்ன நடக்கும் என்று கேட்பது பரிவு. மனித குலம் ஒருத்தர் மத்தவங்ககிட்ட தேடுறது இந்த 'பரிவு' என்று ஒற்றைச் சொல்தான்.
அப்பம் என்கிற உங்கள் வாழ்க்கை பலுகிப் பெருகி பலரோட பசியைப் போக்கனும்னா பரிவு கொண்டு வாழுங்க. பாரம் குறையும் உங்கள் வாழ்வில்!