“உன் திரு யாழில் என் இறைவா பல பண் தரும் நரம்புண்டு... என்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில் இணைத்திட வேண்டும் இசை அரசே......”
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்.
இந்த பாடலை நான் பாடும் பொழுதெல்லாம் என்னுள் எழும் சிந்தனை, “யாழின் நரம்பாக நானும் இருக்கிறேனா?”
யாழ் என்பதற்கு நரம்புகளால் இணைக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். சாதாரணமாக எல்லா நரம்புகளும் யாழினை உருவாக்கப் பயன்படுத்தப் படுவது இல்லை. யாழினை உருவாக்க வலிமையான, உறுதியான நரம்புகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். அதாவது, ஒரு நேர்முகத் தேர்வு என்றால் எப்படி தேர்வு செய்கிறார்களோ, அப்படி தான் நரம்பும் தேர்வு செய்யப்பட்டு, யாழ் வடிவமைக்கப்படுகிறது.
ஆகையால், யாழினை வடிவமைக்க நரம்பு தான் மிக முக்கியம் என்பது திண்ணம். யாழ் பண்டைய இசைக் கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. யாழில் இருந்து எழும் இசை அனைவரையும் மெய் மறக்கச் செய்யும். பல நரம்புகள் இணைந்து உருவான யாழானது எவ்வாறு இனிமையான இசையைத் தருகின்றதோ, அதைப் போல் நானும் என் சமூகத்துடன், குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் இணைந்துள்ளேனா? இதனால், என்னால் இனிமையை கொண்டு வர முடிகிறதா?
யாழாக என் சமூகம், என் குடும்பம், என் உறவினர்கள், என் நண்பர்கள் இருக்க, நான் அதில் ஒரு நரம்பாக, அதாவது அவர்களுடன் ஒன்றித்து, இசையை, அதாவது வாழ்வில் இனிமையை கொண்டு வர உதவியாக இருக்கிறேனா?
கேள்விகுறியிலேயே வாழ்க்கை முடிந்து விடும் போலிருக்கிறது.........
என்னால் என் சமூகத்திற்கு எப்படி இனிமையைத் தர முடியும்? முடியும் கண்ணா.... என் நேரத்தை தரலாம், என் அன்பை தரலாம், என் பாசத்தை தரலாம், என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம், அவர்களுக்கான என் உடனிருப்பை என் செயல்களால் உணர்த்தலாம், நம்பிக்கை வார்த்தைகளை தரலாம், புன் சிரிப்பை தரலாம், முடிந்தால் என் உடைமைகளை தரலாம்..... இவற்றில் நான் எதைத் தர தயாராக உள்ளேன்?
சிந்தித்துக் கொண்டே என்னுடைய அயலானை சந்திக்க கிளம்புகிறேன்..
என்றும் அன்புடன்....
No comments:
Post a Comment