Friday, July 12, 2013

பஸ்டாப் கனவுகள்


ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் ஒரு கனவுத் தொழிற்சாலை. பூ விற்கும் மல்லிகா அக்கா. வடை விற்கும் கோவிந்தன் அண்ணன். செருப்பு தைக்கும் முருகேசன். 'என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே' படுத்திருக்கும் 'பெயர்தெரியா' பெரியவர். இவர்கள் அனைவருக்கும் பேருந்து நிறுத்தம்தான் முகவரி.

தங்கள் முகவரிகளிலிருந்தும், தங்கள் முகவரிகளுக்கும் பயணம் செய்யும் எத்தனையோ பேர் அங்கே வருவர், போவர்.

ஒவ்வொருவரின் கண்களிலும் ஏதோ ஒரு ஏக்கம், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.

'நான் உனக்காகக் காத்திருக்கிறேன்' என்ற வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்களையும் நிறுத்தத்தில் காணலாம்.

நினைத்தவுடன் நினைத்த இடத்திற்குப் புறப்பட வீட்டில் பைக், கார் இருந்தும் பஸ் ஸ்டாப் தரும் சுகங்களை அவை தருவதில்லை. 'காத்திருத்தல்' பற்றி கடுப்படிக்காதவருக்கு, 'தாமதத்தை' ரசிக்கத் தெரிந்தவருக்கு பஸ் ஸ்டாப் ஒரு சொர்க்க பூமி. நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைத் தூண்கள்தாம் பேருந்து நிறுத்தங்கள்.

'இவர் எங்க வேலைக்குப் போவார்?'

'இந்த நகை என்ன விலை இருக்கும்?'

'இவர் எப்படித்தான் இப்படியெல்லாம் அழகாக புடவை செலக்;ட் பண்ணுகிறாரோ?'

'சின்னப் பையனா இருக்கான். இவ்ளோ பெரிய டிபன் கேரியர் தூக்கிட்டுப்போறான்!'

'அந்தப் பொண்ணு இன்னைக்காவது என்னைப் பார்ப்பாளா?'

'இவன் எந்தக் காலேஜ்ல படிக்கிறான்?'

'இது எந்த ஸ்கூல் யூனிஃபார்ம்!'

'பஸ் வருமா? வருதா?'

என நமக்குள் ஆச்சர்யக்குறிகளையும், கேள்விக்குறிகளையும் எழுப்புவன பேருந்து நிறுத்தங்கள்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் பேருந்திற்காகக் காத்திருக்கும்போதும் ஏதோ ஒரு கனவோடுதான் காத்திருக்கின்றார். கனவுத் தொழிற்சாலைகளைச் சுமந்தபடி பேருந்து சாலைகளில் போய்க்கொண்டேதான் இருக்கின்றது.

பேருந்துப் பயணம் எப்போதும் இருவழிதான்.

புறப்படுகிற அனைவரும் திரும்ப வேண்டும்.

செல்வதும் வருவதும்தான் பயணத்தின் எதார்த்தம்.

இந்த இருதுருவங்களுக்கிடையே நமக்கு எத்தனை கனவுகள்!

No comments:

Post a Comment