இன்று மாலை மதுரை பெரியார் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சர்வோதயா இலக்கியப் பண்ணைக்குச் சென்றேன். புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து என் பைக்கை எடுக்கலாம் என நினைத்தபோது அங்கே அதை மறைத்துக்கொண்டு ஒரு மாருதி 800 நின்றது. காரின் ஓனர் வரும்வரை நிற்போம் என அதே இடத்திலேயே காத்திருந்தேன்.
எனக்கு 10 அடிகள் தள்ளி ஒரு வயதான தாத்தா 'மேஜிக் குதிரை' விற்றுக்கொண்டிருந்தார். சீனத் தொழில்நுட்பத்தில் தயாரான குதிரைகளின் படங்கள் அடங்கிய புத்தகமே 'மேஜிக் குதிரை'. படங்களை வேகமாகப் புரட்டினால் குதிரை புல்வெளியில் ஓடுவது போல் தெரியும். இதன் விலை ரூ 20. பாதையில் நின்றுகொண்டு வருவோர், போவோரையெல்லாம் பார்த்து 'மேஜிக் குதிரை', 'மேஜிக் குதிரை' எனக் கத்திக்கொண்டிருந்தார். யாரும் அவரைச் சட்டை செய்யவேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வழிநடந்தனர் சிலர். தங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் செய்யப்பட்ட 'வாசக்டமி' அறுவைச் சிகிச்சை பற்றி அரட்டை அடித்துக்கொண்டு நடந்தனர் இரு பெண்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயதானவர்கள் என எண்ணற்றோர் கடந்து சென்றனர்.
பொறுமையிழந்த நம் 'குதிரை' வியாபாரி பச்சைச் சட்டை போட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை நிறுத்தியே விட்டார். 'இதுதான் மேஜிக் குதிரை' என எக்ஸ்ப்ளைன் பண்ணத் தொடங்கினார் அவர். கேட்டு முடித்துவிட்டு பச்சைச் சட்டை மனிதர் சொன்னார்: 'இதனால் என்ன பயன்?' குதிரை வியாபாரிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. விரக்தியுடன் 'மேஜிக் குதிரையை' டேபிளில் போட்டார்.
'இதனால் என்ன பயன்?'
நாம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது:
கணவனால் என்ன பயன்?
மனைவியினால் என்ன பயன்?
குழந்தைகளால் என்ன பயன்?
பெற்றோர்களால் என்ன பயன்?
பேருந்து இங்கே நிற்பதால் என்ன பயன்?
நாம் குடிப்பதால் என்ன பயன்?
குடிக்காமல் இருப்பதால் என்ன பயன்?
இலை பச்சையாய் இருப்பதால் என்ன பயன்?
சூரியன் வெப்பமாய் இருப்பதால் என்ன பயன்?
கடலால் என்ன பயன்?
மலையால் என்ன பயன்?
நம் கேள்விகள் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன.
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் நம்மால் விடை கண்டுபிடித்தவிட முடியாது. 'ஒரு சில இருப்பது இருப்பதற்காகவே!' அவைகளின் பயன்பாட்டுத்தன்மையை நாம் அளவிட முடியாது.
எல்லாவற்றையும் பயன்பாட்டின் அடிப்படையில் பார்ப்பதால் தான் வாழ்க்கையில் வரும் 'மேஜிக் குதிரைகளை' இனங்கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது.
நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் மேஜிக்தானே.
நாம் பத்திரமாய் வீடு திரும்புவதும்,
நாம் அழைக்கும் நபர் லைனில் கிடைப்பதும்,
நாம் உண்ணும் உணவு,
நாம் உடுத்தும் உடை,
நாம் வசிக்கும் வீடு,
அனைத்துமே மேஜிக்தான்.
அந்த மேஜிக்கை நாம் கண்டுகொள்வதில்லை அல்லது அதைப் பயன்பாட்டு நிலைக்குக் குறுக்கிவிடுகிறோம்.
நாளையும் அந்த முதியவர் 'மேஜிக் குதிரைகள்' விற்க வருவார்!
No comments:
Post a Comment