Tuesday, July 2, 2013

மூன்று மெழுகுதிரிகள்


கூடல் மாநகரிலிருந்து மலைகளின் மாநகருக்கு வந்து இன்றோடு 15 மாதங்கள் நிறைவு பெறுகின்றன. இன்று என் உள்ளமும், உதடும் உச்சரிக்கும் ஒரே வார்த்தை: நன்றி. இன்று எங்கள் கோவிலுக்குச் சென்று மூன்று மெழுகுதிரிகள் ஏற்றினேன். நான் எந்தக் கோவிலுக்குப் புதிதாகச் சென்றாலும் அந்தக் கோவிலில் மூன்று திரிகள் ஏற்றுவது வழக்கம். முதல் திரி எல்லாருக்காகவும் (for all people). இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களுக்காக. நம் வாழ்வு எப்போதும் இந்தப் பிரபஞ்சத்தின் வழிநடத்துதலில்தான் இருக்கிறது என் நம்பிக்கை. இரண்டாம் திரி சிலருக்காக (for some people). இறைவனாய்க் கொடுத்த பெற்றோர், உடன்பிறப்பு, நானாகத் தேர்ந்து கொண்ட நண்பர்கள், இறைவனையும், என்னையும் கடந்த 'எப்படித் தொடங்கினோம்? எப்படிப் பழகினோம்?' என்று எந்நேரமும் என்னை வியப்பிலும், மகிழ்விலும், நன்றியிலும் ஆழ்த்தும் பூர்வ ஜென்ம பந்தங்களுக்காக. மூன்றாம் திரி: எனக்காக (for I people). என்னுள் இருக்கும் பல்வேறு மனிதர்கள் - நல்லவர், கெட்டவர், இனியவர், இன்னாதவர் என அனைத்தும் ஒருங்கிணைவதற்கு. நாம் அனைவருமே 'பலராகத்தான்' வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மெழுகுதிரி ஏற்றிவைத்துவிட்டு எனக்குப் பிடித்த 'செபிக்கும் கரங்கள்' ஓவியம் உருவான நிகழ்வை எனக்குள் சிந்தித்தேன்.

15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனி நாட்டில் நுரம்பெர்க் என்ற கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் 18 பேர். இந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற இவர்களின் தந்தை கிடைக்கும் எந்தத் தொழிலும் பரவாயில்லை என்று எல்லாத் தொழிலையும் நாளுக்கு 18 முதல் 20 மணிநேரம் செய்தார். இந்த 18 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு பெரிய ஓவியராக மாறவேண்டும் என்ற கனவு. ஆனால் இப்படிப்பட்ட குடும்பச் சூழலில் தந்தையால் படிப்பிற்கு பணம் கொடுக்க முடியாது என்று எண்ணுகின்ற இந்தச் சிறுவர்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்கின்றனர். என்னவென்றால் ஒருவர் படிக்கச் செல்லவேண்டும். அவர் படிக்கச் செல்கின்ற அந்த நான்கு ஆண்டுகள் மற்றவர் கல்குவாரியில் வேலைசெய்து அதற்குப் பணம் கட்டவேண்டும். அவர் படிப்பு முடித்தவுடன் மற்றவரின் படிப்பிற்கு பணவுதவி செய்ய வேண்டும். ஒரு ஞாயிறு காலை திருப்பலி முடிந்து வீடு திரும்பியவுடன் 'பூவா – தலையா!' என்று போட்டுப்பார்க்க ஆல்பிரட் டியூரர் வெற்றி பெற்று படிக்கச் செல்கின்றார். மற்றவர் கல்குவாரிக்குச் செல்கின்றார். இவர் அனுப்புகின்ற பணத்தில் அவர் சிறப்பாகப் படிக்கத் தொடங்குகின்றார். அவரின் ஓவிய ஆற்றலையும், படைப்புத்திறனையும் குறித்து பேராசிரியர்கள் வியந்து போகின்றனர். மிகப்புகழ்பெற்ற ஓவியராக தன் கிராமம் திரும்புகின்ற ஆல்பிரட் தன் அனைத்துச் சகோதரர்களுக்கும் விருந்து வைக்கின்றார். விருந்தில் எல்லாரும் மகிழ்ந்து கொண்டிருக்க, தான் இந்த அளவிற்கு உயர்வதற்கு உழைத்த தன் சகோதரனைத் தேடுகின்றார். ஒரு மூலையில் இருந்த மேசையில் தலைகுனிந்து அமர்ந்திருக்கின்றார் அவர். ஓடிச்சென்று 'இனி நீ படிக்கச் செல்லலாம்' என்று சொல்லிக்கொண்டே அவரின் கைகளைப் பிடித்துக் குலுக்குகின்றார். அப்போதுதான் தெரிகிறது. அவரது சகோதரினின் கை கல்குவாரியில் வேலைசெய்ததால் சூம்பிப்போய் உருக்குலைந்திருப்பது. 'என்னால் இந்தக் கரண்டியைக் கூட பிடிக்க முடியவில்லை. ஓவிய தூரிகையை எப்படிப் பிடிப்பேன்? பரவாயில்லை. நீ படித்ததே போதும். வாழ்த்துக்கள்' என்று ஆரத்தழுவுகின்றார். ஆல்பிரட் கண்ணீர்விட்டு அழுகின்றார். 'என் கனவை நனவாக்க நீ உன்னையே அழித்துக்கொண்டாயே' என்று அண்ணனின் கைகளை ஓவியமாக வடிக்கின்றார். 'கரங்கள்' என்று அவர் படைத்த ஓவியம்தான் இன்று 'செபிக்கும் கரங்கள்' என்று பல இடங்களில் அரங்கேறியுள்ளன. இந்தப் படத்தை இனி நீங்கள் பார்க்கும்போதெல்லாம் நினைவிற்கொள்ளுங்கள்: 'தனியாய் எவரும் சாதிப்பதில்லை.'

தனியாய் எவரும் சாதிப்பதில்லை!

இது இந்த ஓவியம் காட்டும் பாடம் மட்டுமல்ல. இந்த வருடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.

நடந்த அனைத்திற்கும் நன்றி! நடக்கவிருக்கும் அனைத்திற்கும் ஆமென்!

***


[என் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும் டோன் மோவனின் பாடல்: Don Moen: Thank You Lord]

No comments:

Post a Comment