நம்ம எல்லாருக்குமே பிரச்சனை இருக்கு? இருக்குன்னு வச்சுக்குவோம். நம்ம பிரச்சனைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று, நாம் தலையிடக்கூடியது, இரண்டு, நாம் தலையிட முடியாதது. எடுத்துக்காட்டாக, நம்ம சட்டையில இங்க் கொட்டியிருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? முக்கியமான செவ்விக்கோ (இண்டர்வியூ) அல்லது ஒரு திருமண நிகழ்விற்கோ புறப்படும்போது இங்க் கொட்டி விட்டது. இதில் நாம் தலையிடலாம். வேறு ஒரு சட்டை அணிந்து கொள்வதன் வழியாக பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டலாம். அதே வேளையில் திருமண நிகழ்விற்குப் புறப்படும் நேரம் மழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம். மழை பெய்வதை நாம் நேரடியாகத் தலையிட்டுத் தடுக்க முடியாது. முடிந்த அளவு குடை பிடித்துக்கொள்ளலாம் அல்லது காரில் செல்லலாம்.
நம் வாழ்வில் வரும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு டெனிஸ் வெய்ட்லி என்ற Crisis Management ஆராய்ச்சியாளர் ஒரு ஃபார்முலா கொடுக்கின்றார்: அதுதான் 'CAR ஃபார்முலா'.
1. Change the changeable. மாற்ற இயல்வதை மாற்ற வேண்டும்.
2. Accept the unchangeable. மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.
3. Remove from the unacceptable. விரும்பத்தகாததிலிருந்து நம்மையே விலக்கிக் கொள்ள வேண்டும்.
நாம காலையில ஸ்கூலுக்கோ, கோவிலுக்கோ, கடைவீதிக்கோ, மருத்துவமனைக்கோ ஒரு ஆட்டோவில் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நாம் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிடம் ஆட்டோ டிரைவர் சிகரெட் பற்ற வைக்கிறார். நமக்கு சிகரெட் ஸ்மெல் அலர்ஜி. இதில் முதல் கட்டமாக நாம் என்ன செய்யலாம். டிரைவரைப் பார்த்து, 'தம்பி சிகரெட் பிடிக்காதீங்க! எனக்கு ஒத்துக்கொள்ளாது!' எனச் சொல்லலாம். இதுதான் மாற்ற இயல்வதை மாற்றவது. பல நல்ல உள்ளங்கள் உடனே 'ஸாரி' எனச் சொல்லி சிகரெட்டை அணைத்து விடுவார்கள். அப்படி அணைக்கவில்லையென்றால் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். இந்த ஆட்டோவை விட்டால் வேறு வழியே இல்லை. ஆகையால் நம்மிடமிருக்கும் கர்ச்சீப்பை எடுத்து முடிந்த அளவு நம்மையே காத்துக்கொள்ளலாம். இதுதான் மாற்ற முடியாததை ஏற்பது. அப்படியும் நம்மால் சமாளிக்க முடியவில்லை. 'நான் காசு கொடுத்து ஆட்டோவில் ஏறி நானே நோயைச் சம்பாதிக்கணுமா?' என நினைத்தால் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்ளலாம். இதுதான் விரும்பத்தகாததிலிருந்து நம்மையே விலக்கிக் கொள்வது.
நம்ம பாத்ரூமுக்குள்ள கரப்பான்பூச்சி வந்துவிட்டாலும் இதே ஃபார்முலாதான்.
1. அதை விரட்ட முயற்சிக்கலாம்.
2. கரப்பான்பூச்சிதான இருந்துட்டுப்போகுது என அதன் இருப்பை ஏற்றுக்கொள்ளலாம்.
3. அடுத்த பாத்ரூமுக்குச் செல்லலாம் (அதுக்காக குளிக்காம இருக்க முடியுமா?).
நம் பிரச்சினைகள் ஒருபோதும் நம்மைப் பாதிப்பதில்லை. எந்த மனநிலையோடு நாம் பிரச்சினைகளை அணுகுகிறோமோ அதுவே நம்மைப் பாதிக்கிறது. 'மாற்ற முடியாததை மாற்ற வேண்டும்' என நினைக்கும்போது நமக்கு ஏமாற்றமும், தோல்வியுணர்வும் வருகிறது. 'மாற்ற இயல்வதை மாற்றாமல் ஏற்றுக்கொள்ளும்போது' தேவையற்ற சுமைகளுக்கு இடம் தரத் தொடங்கிவிடுகிறோம். 'விரும்பத்தகாததிலிருந்து விலகாமல் நிற்கும்போது' நம்மை நாமே தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டேயிருக்கின்றோம்.
நம் உறவுகளிலும், நட்பிலும் பிரச்சனைகள் வந்தால் பிரச்சனைகளுக்குக் காரணமான இருவரும் மனம் விட்டுப் பேசி 'இதெல்லாம் மாற்ற முடியும்', 'இதெல்லாம் மாற்ற முடியாது' எனப் பகுத்தாய்ந்து இரண்டும் சரிசெய்ய முடியாத பட்சத்;தில் ஒருவரையொருவர் தொடர்ந்து காயப்படுத்தாமல் 'விலக்கிக் கொள்வதும்' நாம் உறவை சரியாக அணுகுவதற்கு வழி செய்யும்.
பல நேரங்களில் நம்மோட பெரிய கவலை நாம் கண்ட்ரோல் செய்ய முடியாத காரியங்களைப் பற்றித்தான். 'கிரிக்கெட்டில் யார் ஜெயிப்பார்கள்?', 'நாளைக்கு மழை பெய்யுமா?' 'அப்படி நடக்குமா?' 'இப்படி நடக்குமா?' என நடப்பதற்கு முன்னே நாம் ஆராய்ச்சி செய்து பயப்படத் தொடங்கிவிடுகிறோம். 'நமக்கு வரும் துன்பத்தை விட அந்தத் துன்பத்தைக் குறித்த பயமே நமக்கு அதிக வருத்தத்தைத் தருகிறது' என்பார் பவுலோ கோயலோ.
இரண்டு நாட்களுக்கு முன் 'தீயா வேல செய்யணும் குமாரு!' திரைப்படம் பார்த்தேன். தனக்குத் தன் காதலி கிடைப்பாளா? கிடைக்க மாட்டாளா? என்ற பயத்தில் இருக்கும் கதாநாயகன் சித்தார்த்தைப் பார்த்து சந்தானம் ஒரு எடுத்துக்காட்டுச்சொல்வார்:
'குமாரு...
எனக்கு நாகூர் பிரியாணின்னா ரொம்பப் பிடிக்கும்.
பிரியாணியை வாங்கி பஸ்ல ஏறினேன். தண்ணியடிச்ச மப்புல நல்லா தூங்கிட்டேன்.
திடீர்னு எந்திரிச்சுப் பார்த்தா விடிஞ்சிருச்சு.
பஸ் உளுந்தூர்பேட்டை வந்துடுச்சு.
பல் விலக்குற நேரத்துல எதுக்கு பிரியாணி சாப்பிடன்னு நினைச்சுட்டு
அங்க இருந்த குப்பத் தொட்டியில பிரியாணி பார்சலைப் போட்டுட்டேன்.
அங்க பசியோடு நின்னுகிட்ட இருந்த ஒரு நாய் ஓடி வந்து அதைச் சாப்பிட ஆரம்பிச்சுடுச்சு.'
தொடர்ந்து சொல்வார்:
'நாகூர் பிரியாணியாவே இருந்தாலும்
அது உளுந்தூர்பேட்டை நாய்க்குத்தான்னு எழுதி வச்சிருந்தா
அத யாராலயும் மாத்த முடியாது...'
இதையே பிரகாஷ்ராஜ் 'மொழி' படத்தில் மிகவும் பாசிட்டாவாகச் சொல்வார்:
'வாழ்க்கையின் சில விஷயங்கள வெள்ளைப்பூண்டால கூட மாற்ற முடியாது!'
நாம என்னதான் டெய்லி ஃபோன் பண்ணி, பீட்சா, பர்கர்னு வாங்கிக் கொடுத்து உஷார் பண்ணினாலும், அஞ்சு ரூபாய்க்கு அயர்ன் பண்ண சோக்காவ மாட்டிட்டு வந்து நம்ம கேர்ள்பிரண்ட ஒருத்தன் கூட்டிட்டுப் போகும்போது,
நாம நமக்கு நாமே சொல்லிக்கிடணும்: 'நாகூர் பிரியாணி...'
நம் வாழ்வின் பிரச்சனைகளை மட்டுமல்ல, நம்மால் மீண்டு வரமுடியாத ஒருசில விடுபட ஒரு நல்ல செபம்:
"God, grant me the serenity to accept the things I cannot change,
The courage to change the things I can,
And wisdom to know the difference."
(Reinhold Niebuhr)
***
[இந்த இறைவேண்டலின் காணொளி: Serenity Prayer]
No comments:
Post a Comment