என் குழந்தைப் பருவத்தின் தடங்களாக இன்றும் என் உள்ளத்தில் பதிந்திருக்கும் ஒன்று 'நிலாச்சோறு'. நகரங்களின் இரைக்காக கிராமங்கள் மின் பட்டினி கிடந்தது அந்தக் காலம். பள்ளி முடிந்து சாயங்காலம் வருவோம். கடற்கரை, சிவகாமி, சங்கர், கோமதி, மகாலட்சுமி, சுப்பு, செல்வி அக்கா, சுப்பிரமணி அண்ணன் என தெருவிளக்கின் வெளிச்சத்தி;ல் அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வோம். நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யிற ஹோம் ஒர்க்க அடுத்த நாள் கண்டுக்கவே மாட்டார் முருகேசன் வாத்தியார். ஹோம் ஒர்க் முடிந்தவுடன் கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். அதற்கு பெரிய தயாரிப்பே நடக்கும். எங்கள் தெருவைச் சுத்தம் செய்வோம். தண்ணீர் தெளிப்போம். சாணி கொண்டு மொழுகுவோம். பின் சாணியால் ஒரு சாமி செய்வோம். அந்தச் சாமிக்குப் பெயரெல்லாம் கிடையாது. ஆனால் அந்தச் சாமிக்கு துத்திப்பூவினால் மாலை செய்வோம். பூசணிப்பூவை அதன் தலையில் வைப்போம். அன்னைக்கு தெருவிளக்கு எரிந்ததென்றால் அதற்கு நாங்கள் வைக்கும் பெயர் 'கூட்டாஞ்சோறு'. தெருவிளக்கு இல்லையென்றால் அதன் பெயர் 'நிலாச்சோறு'.
நாங்கள் மட்டுமல்ல. அங்கே எங்கள் வீட்டாரும் வரலாம். அவரவர் வீட்டில் சமைத்ததை எடுத்துக்கொண்டு வந்து மொத்தமாக சாமி முன்னால் வைப்போம். அங்கே இந்து, கிறிஸ்தவர் பிரிவு வந்ததே கிடையாது. சுப்புவும், சிவகாமியும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பரிமாறுவர். சாப்பிட்டு முடித்தவுடன் 'ஐஸ் போல்' என ஒளிந்து விளையாடுவோம். ஒளிய இடம் காண இயலாமல் அடிக்கடி 'அவுட்' ஆனது நான்தான்.
அவங்க அவங்க அப்பா வீடு திரும்பும் சைக்கிள் சப்தம் கேட்டவுடன் நாங்களும் எங்கள் வீடு திரும்புவோம். அடுத்தநாள் பள்ளிக்குப் புறப்படும்போது தெருவில் சாமி முகம் வாடிக்கிடக்கும். ஆனால் எங்கள் உள்ளத்தில் நிலாச்சோற்றின் நினைவுகள் மடிப்புக் களையாமல் இருக்கும்.
இன்று என் ஊரின் தெருக்களில் 8 மணிக்குமேல் யாருமே இருப்பதில்லை. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு 'சீரியல்' அழுகையும், குழந்தை அழுகையும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. எல்லாமே மாறிவிட்டது. தெருவிளக்குகளக்கடியில் இன்று யாரும் அமர்ந்து அந்த நெறு நெறு மணலில் அமர்ந்து யாரும் வீட்டுப்பாடம் எழுதுவது கிடையாது. துத்திச் செடிகள் இன்று இல்லை. சாணியில் சாமி செய்ய வழியில்லை. மாடுகள் வைத்திருந்த வண்டிக்காரரும் மாடுகளை விற்று இன்று 'குட்டி யானை' வாங்கி விட்டார். ஓடி விளையாடும், ஒளிந்து விளையாடும் சுகங்களை இன்றைய ஜெட்டிக்ஸ் சேனலோ, பவர் ரேஞ்சர்ஸோ, டோராவோ தருவதில்லை.
கூட்டாஞ்சோறு வெறும் உணவுப் பரிமாற்றம் மட்டும் அல்ல. அது உறவுப் பரிமாற்றம். உணவைப் பகிர்தலையும், தம்பதியினர் உடலைப் பகிர்தலையும் சமம் என்கிறது அகநானூறு. ஏனெனில் இரண்டிலும் பகிரப்படுவது உயிரும் உறவும் தான். அதனால்தான் நாம் யாரிடமாவது சண்டை போட்டால் 'உன் வீட்டில் கை நனைக்க மாட்டேன்' என சவால் விடுகிறோம்.
உணவின் அர்த்தம் உழைப்பு. 'உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது' என்கிறது பைபிள். நம் உழைப்பின் கனியே நம் உணவு. நாம் உழைக்க ஆற்றல் தருவதே உணவு. உணவும் உழைப்பும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
உணவு நம்மிடம் தூண்டும் உணர்வு நன்றி. எங்கோ விளைந்த நெல்மணி நம் உள்ளங்கையில் இன்று உணவாய் நிற்கின்றது. இது கடந்த வந்த பாதையும், கைகளும் எத்தனை எத்தனை. உணவைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும், சக மானிடருக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கச்செய்கிறது உணவு. பசியால் வாடும் சக மானிடரை நினைக்கத் தூண்டுவதும் உணவுதான்.
'உன்னால எனக்கு ஒரு வேளை சோறு போட முடியுமா?' என்ற அங்கலாய்ப்புகள் இன்றும் நம் நடு வீட்டில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
நெடுநாட்களுக்குப்பின் 'நிலாச்சோறு' சாப்பிட்ட திருப்தி இன்று. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ படித்து என இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் எட்டு உள்ளங்கள் இணைந்து இன்று நான் உண்ட உணவு என்னைக் குழந்தைப் பருவத்திற்கே கூட்டிச்சென்றது.
எட்டு உள்ளங்களும் எட்டும் கனவுகள் இனி தூரமில்லை என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனி எல்லாம் சுகமே!
No comments:
Post a Comment