Monday, July 1, 2013

பாபிலோனின் ஆறுகளருகே


பைபிளில் உள்ள திருப்பாடல்களில் மிகவும் சோகமான பாடல் திருப்பாடல் 137. 'பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்' என்று தொடங்கும் இப்பாடலில் இஸ்ராயேல் மக்கள் அனுபவித்த சோகம், விரக்தி, தோல்வி, ஏமாற்றம் அனைத்தும் எதிரொலிக்கின்றது. 

இப்பாடலின் பின்புலம் என்னவென்றால் கிமு 587ஆம் ஆண்டு நெபுகத்னேசர் என்ற பாபிலோனிய அரசன் எருசலேமின் மீது படையெடுக்கின்றான். எருசலேம் யூதா என்ற அரசின் தலைமையிடம். சாலமோன் அரசர் வரை ஒருங்கிணைந்த அரசாக இருந்த இஸ்ராயேல் இனம் சாலமோனுக்குப் பின் வடக்கே இஸ்ராயேல், தெற்கே யூதா என்று இரண்டாகப் பிளவுபடுகின்றது. இஸ்ராயேல் அரசு கிமு 722 ஆம் ஆண்டு இரண்டாம் சார்கன் என்ற அரசன் தலைமையில் முற்றுகையிடப்பட்டு தோல்வியுற்ற மக்கள் அசீரியாவுக்கு அடிமைகளாக எடுத்துச்செல்லப்படுகின்றனர். 'தங்களுக்கு ஒன்றும் நடக்காது' என்று எண்ணியிருந்த யூதாவின் மக்களுக்கு பாபிலோன் வழியாக வருகிறது அழிவு. தங்கள் மண், தங்கள் கோவில், தங்கள் கடவுள் என்று வாழ்ந்த மக்கள் நாடுகடுத்தப்படுகின்றனர். இறைவன் தங்களுக்கு உரிமையாகத் தந்தார் என்று நினைத்த நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. தாங்கள் பார்த்துப் பார்த்துக் கட்டிய கோவில் தீக்கிரையானது. 'இவ்வளவும் நடக்கிறதே, கடவுள் எங்கே போனார்? அவர் செய்த உடன்படிக்கையை மறந்துவிட்டாரா?' என அவர்கள் உள்ளத்தில் கடவுள் நம்பிக்கையும் இருளடைந்து போகிறது.

மண், கோவில், கடவுள் என அனைத்தையும் இழந்து தங்கள் நாட்டைவிட்டு பாபிலோனியாவிற்கு அடிமைகளாக அழைத்துச்செல்லப்படும்போது அவர்கள் கடக்கின்ற ஒரு ஆற்றங்கரையில் நடக்கும் நிகழ்வே இப்பாடல். இந்தப்பாடலில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: அமர்ந்து, அழுதோம், யாழ்களை மாட்டி வைத்தோம், பாடும்படி, கேட்டனர், கடத்திச் சென்றோர், இசைக்குமாறு, பாடுவோம், மறந்தால், சூம்பிப்போவதாக, நினையாவிடில், கருதாவிடில், ஒட்டிக்கொள்வதாக, வீழ்ந்த, இடியுங்கள், தள்ளுங்கள், சொன்னார்கள், பாழாக்கும், திருப்பிச் செய்வோர், பிடித்து, மோதி, அடிப்போர் என அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார் இதன் ஆசிரியர். இந்தப் பாடலை வாசித்தால் அதில் உள்ள வேகம் கண்கூடாய்த் தெரியும்.

 'ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்' - இவையே இந்தப் பாடலின் மையமாக உள்ள வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தங்கள் இறைவனின் மேல் அவர்கள் கொண்டிருந்த அளவில்லாத பற்றையும், தாங்கள் 'அந்நியப்படுத்தப்பட்ட' நிலையையும் மிக அழகாகப் பிரதிபலிக்கின்றது. இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைவது இதுதான்: alienation. இந்த வார்த்தையை தமிழாக்கம் செய்ய முயன்றேன். 'அந்நியப்படுத்தப்படுதல்', 'தனிமைப்படுத்தப்படுதல்' போன்ற வார்த்தைகள் இதற்கான ஒரு அர்த்தத்தைத்தான் தருகின்றன. 'திக்கற்ற நிலை' என்ற வார்த்தை ஏறக்குறைய இதற்கொட்டிய அர்த்தத்தைத் தருகின்றது. 

இப்பாடலில் காட்டப்படும் இஸ்ராயேல் மக்களின் உணர்வு இதுதான்: திக்கற்ற நிலை. இன்று அகில உலகெங்கும் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை 'புலம்பெயர்தல்'. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக 'காலனியாக்கம்' என்ற வார்த்தையின் வழியாக தங்கள் செயல்பாட்டைச் சரியெனக் காட்டிய மேலைநாட்டு வெள்ளைக் கலாச்சாரம் இன்று மற்றவர்கள் செய்யும் செயல்களுக்கு 'புலம்பெயர்தல்' என்ற வார்த்தையைச் சொல்லி அது தவறு எனச் சொல்லுகிறது. புலம்பெயர்தல் இன்று மிக இயல்பான ஒரு செயலாக மாறிவிட்டது: படிப்பிற்காக, பணிகளுக்காக, மருத்துவத்திற்காக, பொழுதுபோக்கிற்காக என மனிதர்கள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு அன்றாடம் புலம்பெயர்கின்றனர். இயற்கைப் பேரழிவுகளாலும், போர்களாலும், வன்முறையாலும் 'புலம்பெயர்தல்' சிலர்மேல் திணிக்கப்படுகின்றது. தங்கள் சொந்த நாட்டிலே இருந்தாலும் 'புலம்பெயர்' மக்களாகவே வாழ வேண்டிய கட்டாயமும் ஒரு சிலர்மேல் திணிக்கப்படுகின்றது. இஸ்ராயேல் மக்களின் புலம்பெயர்தல் அவர்கள்மேல் திணிக்கப்பட்ட ஒன்று. 

இஸ்ராயேல் மக்களின் திக்கற்ற நிலையும், அவர்களின் அழுகையும் நமக்குச் சொல்லும் பாடம் என்ன? நாம் எப்போது அழுகிறோம்? அதிக மகிழ்வையும், அதிக துன்பத்தையும் நம் கண்கள் மொழிபெயர்க்கும் முயற்சியே 'அழுகை'. 

நம் தனிமைப்படுத்தப்பட்ட நிலை நமக்கு அழுகையைத் தருகின்றது. கருவறையின் சுகத்தை அனுபவித்த குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. ஏனெனில், இந்த உலகம் அதற்குத் தனிமையாகத் தெரிகிறது. வீட்டில் ஓடியாடி விளையாடும் குழந்தை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதும் அழுகிறது. தனிமை. பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து வேலை என்று சென்றால் அங்கும் முதல்நாள் தனிமை. தன் பெற்றோர், உடன்பிறப்புக்களை விடுத்து புதிய திருமண வாழ்க்கைக்குள் நுழையும்போது அங்கேயும் தனிமை. பத்து ஆண்டுகள் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு குருத்துவ அருட்பொழிவிற்குப்பின் பங்குத்தளத்திற்கும் செல்லும் அருள்பணியாளரின் கண்களிலும் கண்ணீர். ஒவ்வொரு வருடம் புதிய பங்குத்தளத்திற்குச் சென்றபோதும் நான் அழுதிருக்கிறேன்! (முதல் நாள் மட்டும்தான்...அடுத்த நாளிலிருந்து நம்மால் அடுத்தவங்கதான அழுவாங்க!?) 

இதுதான் நமக்கு எல்லாம் என்று பற்றிக்கொண்டிருக்கும் ஒன்று நம்மை விட்டுப் பறிபோகும்போது நம்மையறியாமலேயே அழுது விடுகிறோம். நமக்கு மிக நெருக்கமானவரின் பிரிவு, இறப்பு, தேர்வில் தோல்வி, உறவுகளில் விரிசல், ஏமாற்றம் என பல நிலைகளில் நாம் தனித்துவிடப்படுகிறோம். 

இது ஒரு வாழ்க்கை எதார்த்தம். இந்த அழுகை நீடிக்கக் கூடாதென்றால் நாம் கொள்ள வேண்டிய மனநிலை: 'Master Complex' (இதற்கு எதிர்மறை 'Victim Complex'). என்ன நடந்தாலும் அதற்குப் பொறுப்பு நான்தான் என்று அந்தச் சூழலிற்குப் பொறுப்பேற்கும்போது நாம் அதிலிருந்து விடுபட வழி பிறக்கின்றது. அப்படியில்லையென்றால் 'எல்லாம் விதி! எனக்கு அப்படித்தான் நடக்கும்! என் நேரம் சரியில்லை!' என்று சொல்லத்தொடங்கி நாமே நம் அழுகையின் பலிகடாவாக மாறிவிடுவோம்.

இதுதான் இஸ்ராயேல் மக்களின் வாழ்விலும் நடந்தது. தங்கள் அழுகைக்கும், நாடுகடத்தப்பட்டதற்கும் தாங்கள் உடன்படிக்கையை மீறியதே காரணம் என அவர்கள் உணர்ந்தனர். இறைவன் அனுப்பும் மெசியா வருவார் என நம்பி;க்கையோடு காத்திருந்தனர். பெர்சிய நாட்டின் சைரஸ் வழியாக வருகின்றது அவர்களுக்கு மீட்பு. மகிழ்வோடு தங்கள் நாடு திரும்புகின்றனர்.

வாழ்வில் என்ன நடந்தாலும், என்னதான் திக்கற்றநிலை வந்தாலும், என்னதான் தனிமைப்படுத்தப்பட்டாலும் அதற்குக் காரணமான நபர்களைத் தேடி பழிதீர்ப்பதை விடுத்து, 'எங்கே நடந்தது தவறு?' என்று ஆராய்ந்தால் அதுவே புதிய வாழ்க்கையின் முதற்படி.

நாம் அனைவருமே தீவுகள்தாம். தனிமரங்கள்தாம். நாம் அனைவரும் பாபிலோனின் ஆறுகளருகே அமரத்தான் வேண்டும். என்னதான் உறவுகளில் இணைந்திருந்தாலும், நம் வயிற்று வலிக்கு நாம்தான் மருந்து சாப்பிட வேண்டும்! கருவறையில் தொடங்கிய நம் தனிமை கல்லறை வரை தொடரும். தனிமையைத் தவமாக்கினால், தனிமைப்படுத்தப்படுதலை வேரூன்றுதலாக மாற்றினால் நம் கண்கள் அழுவதில்லை!

[திருப்பாடல் 137ன் காணொளி: Boney M: By the Rivers of Babylon]



No comments:

Post a Comment