Wednesday, July 3, 2013

அன்புள்ள அம்மாவுக்கு...


(நற்செய்தி நூல்களில் இயேசு பாராட்டும் ஏழைக் கைம்பெண்ணுக்கு ஒரு கடிதம்)

அன்புள்ள அம்மா, வணக்கம்! நலமா?

இன்று காலை எருசலேம் ஆலயத்திற்கு நீங்கள் வந்திருந்தபோது, அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். காணிக்கை செலுத்தும் நேரம் வரும்போது நீங்கள் முன்னே செல்ல, நான் உங்கள் பின்னாலேயேதான் வந்தேன். வரும்போது என் காசுகளை எண்ணிக்கொண்டே வந்தேன். என் எண்ணங்களைக் கொஞ்சம் எண்ணிப்பார்க்கிறேன். 'வர்ற வாரம் என்ன செய்வது? பால் வாங்கனும். காய்கறி வாங்கனும். ஊருக்குப் போகனும். நிலம் வாங்கனும். மாடு வாங்கனும். தங்கம் வாங்கனும். கல்யாணத்திற்கு மொய் செய்யனும். திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சுனா மருந்து வாங்கனும்.' நான் அப்படியே பின்வாங்குகிறேன். காணிக்கை சம்பளம் வரும்போது போட்டுக்கொள்ளலாம். போன வாரம்தான நிறைய போட்டேன். எனக்கே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். கொஞ்ச நேரத்தில் எல்லாரும் காணிக்கை போட்டு முடிச்சுட்டாங்க. அப்பதான், அந்த நாசரேத்தூர் இயேசு எழுந்து நின்னு சொல்றார், 'இந்தக் கைம்பெண் மற்றெல்லாரையும் விட அதிகம் போட்டார். அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறையிருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டார்'.

உடனே அங்கே சலசலப்பு. சிலருக்கு கோபம். பலருக்கு எரிச்சல். 'என்ன பெரிசா அந்த லேடி போட்டுறுச்சு - இரண்டு செப்புக்காசுகள். இதை வச்ச நாலு குருவிகள்தாம் வாங்க முடியும். நான் எவ்வளவு போட்டேன் தெரியுமா? இவருக்குக் கணக்குத் தெரியலயே' என்று இயேசுவைக் கேலி பேசுகின்றனர். எனக்கு ஒரே ஆச்சர்யம். 'எப்படிமா உங்களால் இதைச் செய்ய முடிந்தது? காலையில சாப்பிட்டீங்களா? மதியச் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டுறீங்களா? உங்க பொண்ணுக்கு எப்பக் கல்யாணம்? கொஞ்சம், கொஞ்சமா பணம் சேர்த்தாத்தானமா இவையெல்லாம் செய்ய முடியும்?' என்று உங்களிடம் அப்பொழுதே கேட்க ஆசை. ஆனால், பயம். அம்மா, நீங்கள் ஒரு ஆச்சர்யம். உங்களிடம் எனக்குப் பிடிச்சது மூன்று: 1) துணிவு, 2) இறைநம்பிக்கை, 3) மனச்சுதந்திரம்.

உங்க இந்தச் செயலுக்குக் காரணம் உங்க துணிச்சல்: 'என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்? கணவனை இழந்தாயிற்று, வழக்காடி சொத்தை இழந்தாயிற்று, பெயரை இழந்தாயிற்று. இனி இழக்க என்ன? என்ற துணிச்சல் உங்களிடம் பிடித்திருக்கிறது. 'நாளை, நாளை மறுநாள் எப்படி இருந்தாலும் இருக்கட்டு;ம். இன்று நான் நன்றாக இருக்கிறேன். இறைவா நன்றி' என்று துணிந்தாய். ஆனால் எனக்கு எல்லாம் இருக்கு – குடும்பம், நட்பு, சொத்து, நிலம்;, தனிமையாக இருக்கிறேன் என நினைத்தால் சினிமா, டிவி, பேஸ்புக், யூடியூப், சுற்றுலா. ஆனால் எனக்கு துணிச்சல் இல்லையேமா? பணம் இல்லையேனு கவலைப்படுறேன். பணம் வந்தவுடன் அதை எப்படி சேமிப்பது? எப்படி முதலீடு செய்வது என்று அடுத்த கவலை வந்துவிடுகிறது. 'எப்போதாவது தேவைப்படும்' என்று நான் வாங்கி வைத்த புத்தகங்கள், சிடி-கள், உணவுப்பொட்டலங்கள், அழகுசாதனப் பொருட்கள் இன்னும் கவர் பிரிக்காமலேயே காலமாகின்றன. அப்புறம் ஏன் நான் எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படுறேன்?

இரண்டாவது, உங்களிடமுள்ள இறைப்பற்று. 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று இறைவனை மட்டுமே நீ பற்றிக்கொண்டாய். எல்லாப் பற்றும் கைவிட்டால்தான் எனக்கு இறைவனையே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், உனக்கு முதற்பற்று இறைப்பற்றாக இருக்கின்றது. அவரின் விரல் பிடித்து ரோட்டைக் கடப்பதால் அது உனக்கு எளிதாக இருக்கிறது. ஆனால், நானே கடந்து விடுவேன் என்று என்னை மட்டும் பற்றிக் கொண்டிருப்பதால் ரோட்டில் உள்ள எல்லாமே எனக்குப் பயத்தைத் தருகின்றது.

மூன்றாவது, உன்னிடமுள்ள மனச்சுதந்திரம். மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி உள்ளவர்கள்தாம் மனச்சுதந்திரத்தோடு இருக்க முடியும்னு சொல்வாங்க. அது எப்படிமா இருக்கிற எல்லாத்தையும் உங்களால கொடுக்க முடிஞ்சது? ஆனால், எதுவுமே எனக்கு நிரந்தரமாகச் சொந்தமில்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும் என்னால விரிச்சுக் கொடுக்க முடியலையே. கையை மூடிக்கிட்டியிருக்கேனே. அது போயிருமோ? இது போயிருமோ? என்று அங்கலாய்க்கிறேனே. 'அந்த மாடலைவிட இந்த மாடல் நல்லாயிருக்கே' என்று அடுத்தடுத்த கிளைக்கு என் மனம் தாவுகின்றது.

என் கண்ணீரை தினந்தினம் நான் சாதாரண பொருள்களுக்குத்தான் சிந்துகிறேன். என் கண்ணீர் நிற்குமா? இறைவனுக்காக, இறைவன் முன்னிலையில் நீர் கொட்டிய இரண்டு செப்புக்காசுகளும், இரண்டு சொட்டுக் கண்ணீரும் என் கண்ணீரைப் போக்குமா?

கண்ணீருடன், அன்பு மகன், மகள்.

No comments:

Post a Comment