Wednesday, July 17, 2013

மாறுவதன் மதிப்பு

'நம்மால் முடியாது' என்பதல்ல உண்மை
'நாம் செய்வதில்லை' என்பதே உண்மை.
நம்மிடம் எவ்வளவு இருக்கிறது
என்பது முக்கியமல்ல.
நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாம்
என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நம்மிடம் இருப்பவற்றை நம்மால்
அவ்வளவாக மாற்ற முடியாதிருக்கலாம்
ஆனால் நம்மிடம் இருப்பவற்றை உபயோகிக்கும்
விதத்தை நிச்சயமாக நம்மால் மாற்ற இயலும்.
செம்மையாக உபயோகித்தால்
ஒரு சிப்பாய்கூடி ராணியாக மாறலாம்.
ஓர் இரும்புத் துண்டின் விலை 250 ரூபாய்.
அதை ஒரு குதிரை லாடமாக உருவாக்கும்போது அதன் மதிப்பு 1000 ரூபாய்.
ஊசிகளாக மாற்றும் போது அதன் மதிப்பு 10,000 ரூபாய்.
கடிகாரத்திற்கான கம்பிச்சுருளாக மாற்றும்போது அதன் மதிப்பு 1,00,000 ரூபாய்.
உங்கள் சொந்த மதிப்பு நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ
அதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.
ஆனால், உங்களிலிருந்து நீங்கள் எதை உருவாக்குகிறீர்களோ அதைக்கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது.
 

Tuesday, July 16, 2013

கூட்டாஞ்சோறு

என் குழந்தைப் பருவத்தின் தடங்களாக இன்றும் என் உள்ளத்தில் பதிந்திருக்கும் ஒன்று 'நிலாச்சோறு'. நகரங்களின் இரைக்காக கிராமங்கள் மின் பட்டினி கிடந்தது அந்தக் காலம். பள்ளி முடிந்து சாயங்காலம் வருவோம். கடற்கரை, சிவகாமி, சங்கர், கோமதி, மகாலட்சுமி, சுப்பு, செல்வி அக்கா, சுப்பிரமணி அண்ணன் என தெருவிளக்கின் வெளிச்சத்தி;ல் அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வோம். நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யிற ஹோம் ஒர்க்க அடுத்த நாள் கண்டுக்கவே மாட்டார் முருகேசன் வாத்தியார். ஹோம் ஒர்க் முடிந்தவுடன் கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். அதற்கு பெரிய தயாரிப்பே நடக்கும். எங்கள் தெருவைச் சுத்தம் செய்வோம். தண்ணீர் தெளிப்போம். சாணி கொண்டு மொழுகுவோம். பின் சாணியால் ஒரு சாமி செய்வோம். அந்தச் சாமிக்குப் பெயரெல்லாம் கிடையாது. ஆனால் அந்தச் சாமிக்கு துத்திப்பூவினால் மாலை செய்வோம். பூசணிப்பூவை அதன் தலையில் வைப்போம். அன்னைக்கு தெருவிளக்கு எரிந்ததென்றால் அதற்கு நாங்கள் வைக்கும் பெயர் 'கூட்டாஞ்சோறு'. தெருவிளக்கு இல்லையென்றால் அதன் பெயர் 'நிலாச்சோறு'.

நாங்கள் மட்டுமல்ல. அங்கே எங்கள் வீட்டாரும் வரலாம். அவரவர் வீட்டில் சமைத்ததை எடுத்துக்கொண்டு வந்து மொத்தமாக சாமி முன்னால் வைப்போம். அங்கே இந்து, கிறிஸ்தவர் பிரிவு வந்ததே கிடையாது. சுப்புவும், சிவகாமியும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பரிமாறுவர். சாப்பிட்டு முடித்தவுடன் 'ஐஸ் போல்' என ஒளிந்து விளையாடுவோம். ஒளிய இடம் காண இயலாமல் அடிக்கடி 'அவுட்' ஆனது நான்தான்.

அவங்க அவங்க அப்பா வீடு திரும்பும் சைக்கிள் சப்தம் கேட்டவுடன் நாங்களும் எங்கள் வீடு திரும்புவோம். அடுத்தநாள் பள்ளிக்குப் புறப்படும்போது தெருவில் சாமி முகம் வாடிக்கிடக்கும். ஆனால் எங்கள் உள்ளத்தில் நிலாச்சோற்றின் நினைவுகள் மடிப்புக் களையாமல் இருக்கும்.

இன்று என் ஊரின் தெருக்களில் 8 மணிக்குமேல் யாருமே இருப்பதில்லை. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு 'சீரியல்' அழுகையும், குழந்தை அழுகையும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. எல்லாமே மாறிவிட்டது. தெருவிளக்குகளக்கடியில் இன்று யாரும் அமர்ந்து அந்த நெறு நெறு மணலில் அமர்ந்து யாரும் வீட்டுப்பாடம் எழுதுவது கிடையாது. துத்திச் செடிகள் இன்று இல்லை. சாணியில் சாமி செய்ய வழியில்லை. மாடுகள் வைத்திருந்த வண்டிக்காரரும் மாடுகளை விற்று இன்று 'குட்டி யானை' வாங்கி விட்டார். ஓடி விளையாடும், ஒளிந்து விளையாடும் சுகங்களை இன்றைய ஜெட்டிக்ஸ் சேனலோ, பவர் ரேஞ்சர்ஸோ, டோராவோ தருவதில்லை.

கூட்டாஞ்சோறு வெறும் உணவுப் பரிமாற்றம் மட்டும் அல்ல. அது உறவுப் பரிமாற்றம். உணவைப் பகிர்தலையும், தம்பதியினர் உடலைப் பகிர்தலையும் சமம் என்கிறது அகநானூறு. ஏனெனில் இரண்டிலும் பகிரப்படுவது உயிரும் உறவும் தான். அதனால்தான் நாம் யாரிடமாவது சண்டை போட்டால் 'உன் வீட்டில் கை நனைக்க மாட்டேன்' என சவால் விடுகிறோம்.

உணவின் அர்த்தம் உழைப்பு. 'உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது' என்கிறது பைபிள். நம் உழைப்பின் கனியே நம் உணவு. நாம் உழைக்க ஆற்றல் தருவதே உணவு. உணவும் உழைப்பும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

உணவு நம்மிடம் தூண்டும் உணர்வு நன்றி. எங்கோ விளைந்த நெல்மணி நம் உள்ளங்கையில் இன்று உணவாய் நிற்கின்றது. இது கடந்த வந்த பாதையும், கைகளும் எத்தனை எத்தனை. உணவைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும், சக மானிடருக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கச்செய்கிறது உணவு. பசியால் வாடும் சக மானிடரை நினைக்கத் தூண்டுவதும் உணவுதான்.

'உன்னால எனக்கு ஒரு வேளை சோறு போட முடியுமா?' என்ற அங்கலாய்ப்புகள் இன்றும் நம் நடு வீட்டில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

நெடுநாட்களுக்குப்பின் 'நிலாச்சோறு' சாப்பிட்ட திருப்தி இன்று. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ படித்து என இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் எட்டு உள்ளங்கள் இணைந்து இன்று நான் உண்ட உணவு என்னைக் குழந்தைப் பருவத்திற்கே கூட்டிச்சென்றது.

எட்டு உள்ளங்களும் எட்டும் கனவுகள் இனி தூரமில்லை என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இனி எல்லாம் சுகமே!

Friday, July 12, 2013

பஸ்டாப் கனவுகள்


ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் ஒரு கனவுத் தொழிற்சாலை. பூ விற்கும் மல்லிகா அக்கா. வடை விற்கும் கோவிந்தன் அண்ணன். செருப்பு தைக்கும் முருகேசன். 'என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே' படுத்திருக்கும் 'பெயர்தெரியா' பெரியவர். இவர்கள் அனைவருக்கும் பேருந்து நிறுத்தம்தான் முகவரி.

தங்கள் முகவரிகளிலிருந்தும், தங்கள் முகவரிகளுக்கும் பயணம் செய்யும் எத்தனையோ பேர் அங்கே வருவர், போவர்.

ஒவ்வொருவரின் கண்களிலும் ஏதோ ஒரு ஏக்கம், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.

'நான் உனக்காகக் காத்திருக்கிறேன்' என்ற வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்களையும் நிறுத்தத்தில் காணலாம்.

நினைத்தவுடன் நினைத்த இடத்திற்குப் புறப்பட வீட்டில் பைக், கார் இருந்தும் பஸ் ஸ்டாப் தரும் சுகங்களை அவை தருவதில்லை. 'காத்திருத்தல்' பற்றி கடுப்படிக்காதவருக்கு, 'தாமதத்தை' ரசிக்கத் தெரிந்தவருக்கு பஸ் ஸ்டாப் ஒரு சொர்க்க பூமி. நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைத் தூண்கள்தாம் பேருந்து நிறுத்தங்கள்.

'இவர் எங்க வேலைக்குப் போவார்?'

'இந்த நகை என்ன விலை இருக்கும்?'

'இவர் எப்படித்தான் இப்படியெல்லாம் அழகாக புடவை செலக்;ட் பண்ணுகிறாரோ?'

'சின்னப் பையனா இருக்கான். இவ்ளோ பெரிய டிபன் கேரியர் தூக்கிட்டுப்போறான்!'

'அந்தப் பொண்ணு இன்னைக்காவது என்னைப் பார்ப்பாளா?'

'இவன் எந்தக் காலேஜ்ல படிக்கிறான்?'

'இது எந்த ஸ்கூல் யூனிஃபார்ம்!'

'பஸ் வருமா? வருதா?'

என நமக்குள் ஆச்சர்யக்குறிகளையும், கேள்விக்குறிகளையும் எழுப்புவன பேருந்து நிறுத்தங்கள்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் பேருந்திற்காகக் காத்திருக்கும்போதும் ஏதோ ஒரு கனவோடுதான் காத்திருக்கின்றார். கனவுத் தொழிற்சாலைகளைச் சுமந்தபடி பேருந்து சாலைகளில் போய்க்கொண்டேதான் இருக்கின்றது.

பேருந்துப் பயணம் எப்போதும் இருவழிதான்.

புறப்படுகிற அனைவரும் திரும்ப வேண்டும்.

செல்வதும் வருவதும்தான் பயணத்தின் எதார்த்தம்.

இந்த இருதுருவங்களுக்கிடையே நமக்கு எத்தனை கனவுகள்!

Thursday, July 11, 2013

மேஜிக் குதிரை

இன்று மாலை மதுரை பெரியார் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சர்வோதயா இலக்கியப் பண்ணைக்குச் சென்றேன். புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து என் பைக்கை எடுக்கலாம் என நினைத்தபோது அங்கே அதை மறைத்துக்கொண்டு ஒரு மாருதி 800 நின்றது. காரின் ஓனர் வரும்வரை நிற்போம் என அதே இடத்திலேயே காத்திருந்தேன்.

எனக்கு 10 அடிகள் தள்ளி ஒரு வயதான தாத்தா 'மேஜிக் குதிரை' விற்றுக்கொண்டிருந்தார். சீனத் தொழில்நுட்பத்தில் தயாரான குதிரைகளின் படங்கள் அடங்கிய புத்தகமே 'மேஜிக் குதிரை'. படங்களை வேகமாகப் புரட்டினால் குதிரை புல்வெளியில் ஓடுவது போல் தெரியும். இதன் விலை ரூ 20. பாதையில் நின்றுகொண்டு வருவோர், போவோரையெல்லாம் பார்த்து 'மேஜிக் குதிரை', 'மேஜிக் குதிரை' எனக் கத்திக்கொண்டிருந்தார். யாரும் அவரைச் சட்டை செய்யவேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வழிநடந்தனர் சிலர். தங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் செய்யப்பட்ட 'வாசக்டமி' அறுவைச் சிகிச்சை பற்றி அரட்டை அடித்துக்கொண்டு நடந்தனர் இரு பெண்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயதானவர்கள் என எண்ணற்றோர் கடந்து சென்றனர்.

பொறுமையிழந்த நம் 'குதிரை' வியாபாரி பச்சைச் சட்டை போட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை நிறுத்தியே விட்டார். 'இதுதான் மேஜிக் குதிரை' என எக்ஸ்ப்ளைன் பண்ணத் தொடங்கினார் அவர். கேட்டு முடித்துவிட்டு பச்சைச் சட்டை மனிதர் சொன்னார்: 'இதனால் என்ன பயன்?' குதிரை வியாபாரிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. விரக்தியுடன் 'மேஜிக் குதிரையை' டேபிளில் போட்டார்.

'இதனால் என்ன பயன்?'

நாம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது:

கணவனால் என்ன பயன்?
மனைவியினால் என்ன பயன்?
குழந்தைகளால் என்ன பயன்?
பெற்றோர்களால் என்ன பயன்?
பேருந்து இங்கே நிற்பதால் என்ன பயன்?
நாம் குடிப்பதால் என்ன பயன்?
குடிக்காமல் இருப்பதால் என்ன பயன்?
இலை பச்சையாய் இருப்பதால் என்ன பயன்?
சூரியன் வெப்பமாய் இருப்பதால் என்ன பயன்?
கடலால் என்ன பயன்?
மலையால் என்ன பயன்?

நம் கேள்விகள் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன.

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் நம்மால் விடை கண்டுபிடித்தவிட முடியாது. 'ஒரு சில இருப்பது இருப்பதற்காகவே!' அவைகளின் பயன்பாட்டுத்தன்மையை நாம் அளவிட முடியாது.

எல்லாவற்றையும் பயன்பாட்டின் அடிப்படையில் பார்ப்பதால் தான் வாழ்க்கையில் வரும் 'மேஜிக் குதிரைகளை' இனங்கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது.

நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் மேஜிக்தானே.

நாம் பத்திரமாய் வீடு திரும்புவதும்,
நாம் அழைக்கும் நபர் லைனில் கிடைப்பதும்,
நாம் உண்ணும் உணவு,
நாம் உடுத்தும் உடை,
நாம் வசிக்கும் வீடு,
அனைத்துமே மேஜிக்தான்.
அந்த மேஜிக்கை நாம் கண்டுகொள்வதில்லை அல்லது அதைப் பயன்பாட்டு நிலைக்குக் குறுக்கிவிடுகிறோம்.

நாளையும் அந்த முதியவர் 'மேஜிக் குதிரைகள்' விற்க வருவார்!

Friday, July 5, 2013

உன் திரு யாழில் என் இறைவா!

“உன் திரு யாழில் என் இறைவா பல ண் தரும் நரம்புண்டு... என்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில் இணைத்திட வேண்டும் இசை அரசே......
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்.

இந்த பாடலை நான் பாடும் பொழுதெல்லாம் என்னுள் எழும் சிந்தனை, “யாழின் நரம்பாக நானும் இருக்கிறேனா?” 

யாழ் என்பதற்கு நரம்புகளால் இணைக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். சாதாரணமாக எல்லா நரம்புகளும் யாழினை உருவாக்கப் பயன்படுத்தப் படுவது இல்லையாழினை உருவாக்க வலிமையான, உறுதியான நரம்புகளை மட்டுமே பயன்படுத்துவார்கள்அதாவது, ஒரு நேர்முகத் தேர்வு என்றால் எப்படி தேர்வு செய்கிறார்களோ, அப்படி தான் நரம்பும் தேர்வு செய்யப்பட்டு, யாழ் வடிவமைக்கப்படுகிறது.

ஆகையால், யாழினை வடிவமைக்க நரம்பு தான் மிக முக்கியம் என்பது திண்ணம். யாழ் பண்டைய இசைக் கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. யாழில் இருந்து எழும் இசை அனைவரையும் மெய் மறக்கச் செய்யும். பல நரம்புகள் இணைந்து உருவான யாழானது எவ்வாறு இனிமையான இசையைத் தருகின்றதோ, அதைப் போல் நானும் என் சமூகத்துடன், குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் இணைந்துள்ளேனா? இதனால், என்னால் இனிமையை கொண்டு வர முடிகிறதா?

யாழாக என் சமூகம், என் குடும்பம், என் உறவினர்கள், என் நண்பர்கள் இருக்க, நான் அதில் ஒரு நரம்பாக, அதாவது அவர்களுடன் ஒன்றித்து, இசையை, அதாவது வாழ்வில் இனிமையை கொண்டு வர உதவியாக இருக்கிறேனா?
கேள்விகுறியிலேயே வாழ்க்கை முடிந்து விடும் போலிருக்கிறது.........

என்னால் என் சமூகத்திற்கு எப்படி இனிமையைத் தர முடியும்? முடியும் கண்ணா.... என் நேரத்தை தரலாம், என் அன்பை தரலாம், என் பாசத்தை தரலாம், என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம், அவர்களுக்கான என் உடனிருப்பை என்  செயல்களால் உணர்த்தலாம், நம்பிக்கை வார்த்தைகளை தரலாம், புன் சிரிப்பை தரலாம், முடிந்தால் என் உடைமைகளை தரலாம்..... இவற்றில் நான் எதைத் தர தயாராக உள்ளேன்?

சிந்தித்துக் கொண்டே என்னுடைய அயலானை சந்திக்க கிளம்புகிறேன்..
என்றும் அன்புடன்....

Thursday, July 4, 2013

வண்ண ஓவியத்தூரிகையின் கதை

சிறுவன் தன் பாட்டி எழுதுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டி என்ன தான் எழுதுகிறார்கள் என்று பார்க்க அவனுக்கு ஆர்வம்! அருகில் சென்று, "என்ன பாட்டி எழுதுற? என்னைப் பற்றியா?" என வினவுகிறான்.  
பாட்டி எழுதுவதை நிறுத்தி விட்டு, தன் பேரனை மடியில் அமர வைத்து, “உன்னைப் பற்றி தான் எழுதுகிறேன் கண்ணா.....இங்கே பார். இது தான் பென்சில். வருங்காலத்தில் இந்த பென்சில் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.”
பேரன் பாட்டியிடம்," என்ன பாட்டி சொல்ற? இதுல அப்படி என்ன விசேஷம்? எனக்கு அப்படி ஒன்னும் தெரியல!".. தன் அறியாமையால் கேட்கிறான். பாட்டி புன் சிரிப்புடன், "ஒரு பொருளை நீ பார்க்கும் விதத்தில் தான் அதன் தன்மை மாறுபடுகின்றது. இதோ பார்... இது வெறும் எழுதுகோல் தான்... ஆனால் இது நமக்கு கற்று தரும் பாடம் சிந்திக்கக்கூடியது!! அதை நீ உணர்ந்து கொண்டால் உன் வாழ் நாளெல்லாம் அமைதியுடன் வாழலாம். "
இந்த எழுதுகோலுக்கு ஐந்து தன்மைகள் உண்டு.
முதலாவதாக:
இந்த பென்சிலைக் கொண்டு நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், உதாரணமாக எழுதலாம்,  ஓவியம் வரையலாம், அருகில் இருப்பவரை கூர் முனையால் குத்தலாம்... இன்னும் நிறைய செய்யலாம். அது உபயோகிப்பவரைப் பொறுத்தது. உன்னை உபயோகிப்பவர் இறைவன். அவர் உன்னை எப்பொழுதும் நன்மையானவற்றையே செய்ய உபயோகப்படுத்துவார். அழகான ஓவியத்தைத் தீட்ட பென்சில் பயன்படுவதைப் போல்அற்புதமான உன் வாழ்க்கையைத் தீட்ட, இறைவன் உன்னை உபயோகப்படுத்துகிறார்.
 இரண்டாவதாக:
 பென்சில் இருப்பவர்களிடம் கட்டாயம் அதை கூர்மையாக்குவதற்கு sharpener இருக்கும். எழுதிக்கொண்டிருக்கும் போதே பென்சில் முனை  உடைந்து விட்டால் என்ன செய்வோம்? பென்சிலைத் தூக்கி எறிந்து விடுவோமா? இல்லை. அதைக் கூர்மையாக்குவதற்கு   விரிசில் சீவியை(sharpener)ப் பயன்படுத்துகிறோம்நம் வாழ்விலும் பல தடைகள் வரலாம். நாம் வலுவிழந்து போகலாம். அந்த தருணங்களில் நம்மைக் கூர்மையாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அதாவது, என்னால் முடியும். நான் அனைவருக்கும் உபயோகமானவன். நான் பலசாலி. என்னால் எதையும் செய்ய முடியும், என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தடைகள் நம்மை வடிவமைப்பதற்கே..... வலுவிழக்கச் செய்ய அல்ல.
மூன்றாவதாக:
எழுதும் போது பிழை ஏற்பட்டு விட்டால், அழிப்பானைக் கொண்டு அழிக்கிறோம். நம் வாழ்வில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் கூட இப்படி தான். தவறு செய்து விட்டோமே என்று வருந்துவதை விட செய்த தவறை மறந்து விட்டு, இனி அந்த தவற்றை செய்யாமல் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
நான்காவதாக:
பென்சிலின் வெளிப்புறம் அழகாகவும் பல விதமான தோற்றத்துடனும் இருக்கும். ஆனால் அதன் உட்புறம் graphite இல்லை என்றால் அது எதற்கும் உதவாது. அதைப் போல் நம் வெளிப்புறம் தூய்மையாக இருந்தாலும், மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
ஐந்தாவதாக:
பென்சில் தன் தடயத்தை அதைக் கொண்டு எழுதும் ஒவ்வொரு இடத்திலும் விட்டுச் செல்கிறது. அதைப் போல் நாமும் நம்முடைய தடயத்தை, அதாவது நம் நல்ல செயல்களை, நம் நல்ல எண்ணங்களை, நம் அன்பை நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் தடயங்களாக விட்டு செல்வோம்.
[ என்னை சிந்திக்க வைத்த காணொளி : The Story of the Pencil ]