Friday, November 12, 2021

இறைவேண்டலும் நம்பிக்கையும்

இன்றைய (13 நவம்பர் 2021) நற்செய்தி (லூக்கா 18:1-8)

இறைவேண்டலும் நம்பிக்கையும்

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொல்கின்றார். இரண்டாம் பகுதியில், 'மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்று தன் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

உவமையில் வரும் நடுவர் கதையின் முரணாக இருக்கின்றார். அதாவது, மற்ற கதைமாந்தர்களின் இருத்தலை நேர்முகமாகக் காட்டுவதற்காக, இந்த நபரை எதிர்மறையாகப் பயன்படுத்துகின்றார் ஆசிரியர். இந்த நபர் தவறான மனப்பாங்கும், பிறழ்வான செயல்பாடும் கொண்டிருக்கின்றார். 'கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் இருப்பதே' இவருடைய மனப்பாங்கு. மேலும், கைம்பெண் ஒருவர் தன்னிடம் நீதி கேட்டு வந்தபோது, நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் இருக்கின்றார். ஆக, இவருடைய செயல்பாடும் பிறழ்வுபட்டதாக இருக்கிறது. 

இருந்தாலும், தொடர்ந்து வரும் தொல்லையின் பொருட்டு செயல்படுகின்றார். நீதி வழங்குகின்றார். இதையொட்டிய இன்னொரு உவமையே நள்ளிரவில் அப்பம் கேட்கும் நண்பர் எடுத்துக்காட்டு. 

இங்கே, கைம்பெண் தனக்குரிய நீதியைப் பெற உரிமைகொண்டிருக்கின்றார். ஆனால், அவருடைய உரிமை மறுக்கப்படுகின்றது. எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத ஒருவர்கூட இறுதியில் மற்றவருக்குரிய உரிமையை வழங்கத் தயாரகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் நமக்கு உரிமைகள் இல்லை என்றாலும், நமக்கு உடனடியாகச் செவிசாய்க்கின்றார். கடவுளின் நன்மைத்தனம் பொறுப்பற்ற நடுவரின் முரண் எனக் காட்டப்படுகிறது. 

தொடர்ந்து, மண்ணுலகில் நம்பிக்கை மறைந்து வருவதையும் இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

இறைவனிடம் மன்றடும்போது, நாம் விண்ணப்பம் செய்யும்போது நம் மனப்பாங்கு நம்பிக்கை கொண்டதாகவும், நம் செயல்பாடு மனந்தளராமலும் இருத்தல் வேண்டும்.