வெள்ளி, 6 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் வெள்ளி
பாரூக்கு 1:15-22. லூக்கா 10:13-16
உங்களைப் புறக்கணிப்பவர்
இயேசு எழுபத்திரண்டு பேரை அனுப்பும் நிகழ்வுக்கும், அனுப்பப்பட்டவர்கள் இயேசுவிடம் திரும்பும் நிகழ்வும் இடையே உள்ளது இன்றைய பாடப் பகுதி. திருந்த மறுத்த நகரங்களை இயேசு சபிக்கிறார். இயேசு சபிக்கும் நிகழ்வை அவருடைய கோபத்தின் அல்லது கையறுநிலையின் வெளிப்பாடு என எடுத்துக்கொள்ளலாம். நற்செய்தி வழங்குபவர் என்னதான் முயற்சிகள் எடுத்தாலும், அதை ஏற்று அதற்கேற்றாற்போல வாழ்வது மற்றவரை, அதாவது, நமக்கு வெளியிலிருப்பவரைச் சார்ந்தே அமைகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இயேசு வழங்கும் சாபங்களை எப்படிப் புரிந்துகொள்வது?
(அ) கொராசின், பெத்சாய்தா, கப்பர்நகூம் ஆகிய நகரங்கள் தங்களுடைய வளர்ச்சியை மையப்படுத்தியதாக இருந்தனவே தவிர, தங்கள் நடுவில் இருந்த இயேசுவையும் அவரை அனுப்பிய கடவுளையும் கண்டுகொள்ளவில்லை. ஆக, கண்டுகொள்ளாத்தன்மை அவர்களுடைய முதல் தவறு.
(ஆ) அவர்கள் தங்கள் முதன்மைகளைச் சரிசெய்யவில்லை. கடவுளையும் அவருக்கு உரியதையும் நாடாமல் தங்களுக்குரியதை – பெயர், புகழ், வளர்ச்சி – மட்டுமே நாடினார்கள்.
(இ) அவர்கள் குறுகிய பார்வை கொண்டிருந்தார்கள். தங்கள் முன்பாக நற்செய்தியை அறிவித்தவர்கள் சாதாரண மனிதர்கள் என்று பார்த்தார்களே தவிர, அவர்களை அனுப்பிய இயேசுவையும், அந்த இயேசுவை அனுப்பிய கடவுளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
இன்றைய முதல் வாசகத்தில், பாரூக்கு நூலில் உள்ள புலம்பல் பாடல் ஒன்றை வாசிக்கிறோம். இறைவாக்கினர் எரேமயாவின் செயலராக இருந்தவர் பாரூக்கு. நெபுகத்னேசர் பேரரசர் எருசலேம் நகரையும் ஆலயத்தையும் தீக்கிரையாக்கி மக்களை அடிமைகளாக பாபிலோனியாவுக்கு எடுத்துச்சென்றபோது எரேமியாவுடன் சென்றவர் பாரூக்கு. மக்கள் தங்களுக்குள்ளே, 'ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின்போக்கில் நடந்தோம். வேற்றுத் செய்வங்களுக்குப் பணி செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்' எனப் புலம்புகிறார்கள். இந்தப் புலம்பல் அவர்களுடைய துன்பத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. இந்தப் புலம்பலை அவர்கள் முன்னதாகவே எண்ணியிருந்தால் ஒருவேளை மனம் திரும்பியிருப்பார்கள். நேரம் கடந்த புலம்பலால் எந்தப் பயனுமில்லை. நேரம் கடந்த புலம்பல் பல நேரங்களில் நம் இழப்பின் வலியை அதிகரிக்கிறது.
'நம் வழிகளை ஆய்ந்தறிவதும் நம்மைப் படைத்தவரிடம் திரும்பி வருவதும் மனமாற்றம்' என்கிறது விவிலியம் (காண். புல 3:40). நாம் செல்லும் வழி பற்றிய தெளிவான பார்வை, விழிப்புநிலை, நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிய விமர்சனப் பார்வை, அவை வழியாகக் கடவுள் வழங்கும் செய்தியைத் திறந்த மனநிலையோடு ஏற்றல் ஆகியவை இருந்தால், நாம் ஆண்டவரையும் அவரை அனுப்பிய தந்தையையும் புறக்கணிக்காத வாழ்க்கையை வாழ்வோம்.
No comments:
Post a Comment