ஞாயிறு, 8 அக்டோபர் 2023
பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு
எசாயா 5:1-7. பிலிப்பியர் 4:6-9. மத்தேயு 21:33-43
கைமாறிய திராட்சைத் தோட்டம்
அது ஓர் அழகிய தோட்டம். அந்தத் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆணும் ஒரு பெண். தோட்டத்தின் உரிமையாளரின் உருவிலும் சாயலிலும் இருந்த அவர்கள் தோட்டத்தின் கண்காணிப்பாளர்களாகவும், அதைப் பண்படுத்தவும் நியமிக்கப்பட்டனர். தோட்டத்தில் இருந்த கனிகளைப் பறித்து உண்டு வாழ்ந்த அவர்களுடைய கண்கள் விலக்கப்பட்ட இரு மரங்கள்மேல் இருந்தன. பாம்பின் சூழ்ச்சியால் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் பிடுங்கித் திண்கிற பெண், ஆணுக்கும் அதைக் கொடுக்கிறார். உரிமையாளர் மாலையில் வந்தபோது இவர்கள் இருவரும் ஒழிந்துகொள்கிறார்கள். மரத்தின் கனி குறைவுபடுவதை அறிவார் அவர். 'கனியை நீ உண்டாயா?' எனக் கேள்வி கேட்கிறார் உரிமையாளர். ஆண் பெண்ணையும், பெண் பாம்பையும் விரல் நீட்டிக் காட்டித் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள். பாம்பு, பெண், ஆண் என மூன்று பேரும் சபிக்கப்பட்டு, ஆணும் பெண்ணும் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். தோட்டம் மீண்டும் உரிமையாளரின் கைக்கு மாறுகிறது.
விலக்கப்பட்ட கனியின்மேல் ஆசை, கடவுளைப் போல ஆக வேண்டும் என்னும் செருக்கு, எதிரியின் சொல்லைத் தேர்ந்து தெளிந்து பார்க்காத மந்த உள்ளம் ஆகியவற்றால் தோட்டத்தை இழக்கிறார்கள் நம் முதற்பெற்றோர்.
திராட்சைத் தோட்டம் கைமாறிய இரு கதையாடல்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கிறோம்.
முதல் கதையாடல் எசாயா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கினரின் பணித்தளத்தை வரையறுக்கிறது கவிதைபோல அமைந்துள்ள இப்பாடம். ஏனெனில், இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில்தான் எசாயா ஆண்டவராகிய கடவுளால் பணிக்கு அழைக்கப்படுகிறார்.
'படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே. அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே. நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார். ஆனால், விளைந்ததோ இரத்தப்பழி. நேர்மை தழைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் தழைத்ததோ முறைப்பாடு' என்று பாடல் நிறைவுபெறுகிறது.
ஓர் உரிமையாளர் தோட்டத்துக்குக் களையெடுத்து, கன்றுகளை நட்டு, கோபுரம் அமைத்து அதைக் காத்து, திராட்சைப் பழம் பிழிய ஆலையும் அமைக்கிறார். அதுபோல, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை மற்ற இனத்தாரிடமிருந்து தேர்ந்தெடுத்து, அவர்களைக் கால் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்து, சீனாய் மலையில் கூட்டி வந்து அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்' என அவர்களை அரவணைத்துக்கொள்கிறார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை அவர்கள் உரிமையாக்குமாறு அளிக்கிறார். அவர்களும் தாங்கள் கட்டாத வீடுகளில் குடியிருக்கிறார்கள், நடாத மரங்களின் கனிகளை உண்கிறார்கள், தோண்டாத கிணறுகளில் நீர் பருகுகிறார்கள். ஆனால், கடவுளின் உடன்படிக்கையை மறந்துவிட்டு, சிலைவழிபாட்டின் வழியாக அவருக்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள்.
திராட்சைக் குலைகளை எதிர்பார்த்திருந்த உரிமையாளருக்குக் கிடைத்ததோ காட்டுப் பழங்களே!
'எனக்கும் என் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையே நீதி வழங்குங்கள்!' எனக் கேட்கிறார் உரிமையாளர். தோட்டம் உரிமையாளருக்கு அநீதி இழைத்தது. ஏனெனில், உரிமையாளரின் நேரம், ஆற்றல், பணம், வளம் அனைத்தும் விரயமாகிவிட்டது. விரயமாகிவிட்ட எதுவும் ஈடுசெய்யப்பட வேண்டும் என்பதே நீதி.
உரிமையாளர் கோபம் கொண்டு வேலிகளை பிய்த்தெறிந்து தோட்டத்தைத் தீக்கிரையாக்குகிறார்.
ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை பாபிலோனிய அடிமைத்தனத்துக்கு விற்றுவிடுகிறார்.
உரிமையாளர் தான் விரும்பியதைத் தன் தோட்டத்துக்குச் செய்கிறார். உரிமையாளரின் நற்குணத்தை தோட்டம் உணரவில்லை. தான் உட்கொண்ட உணவுக்கு ஏற்ற ஊட்டத்தை அது தரவில்லை.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கி ஓர் உவமையை மொழிகிறார். நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, பிழிவுக் குழி வெட்டி, காவல் மாடமும் கட்டித் தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விடுகின்றார். அவர் அப்படி குத்தகைக்கு விடும்போது அவர்கள் நல்லவர்களாகத் தெரிகின்றனர். அல்லது நல்லவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கென்று எந்தக் குறையும் இல்லாதவாறு தலைவர் பார்த்துக்கொள்கின்றார். ஆக, தலைவர் அளவுக்கு மீறி நல்லவராக இருக்கின்றார். அல்லது தாராளமாக இருக்கின்றார்.
அவரது தாராள குணத்தையும், நன்மைத்தனத்தையும் பணியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தங்கள் தலைவர் தங்களிடம் தாராளமாக இருக்கிறார், ஆகவே தாங்களும் தாராளமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அப்படியே அதற்கு எதிர்மாறாக நடக்கின்றனர்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வருகிறது. தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவரும்படி தலைவர் தம் பணியாளர்களை அனுப்புகிறார்.
(அ) தலைவருக்கு உரிய கனிகளைக் கொடுக்க மறுத்தனர் பணியாளர்கள். இது அவர்களுடைய பேராசையின் வெளிப்பாடு. ஆக, 'என்னுடையதும் என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது' என்ற மனப்பான்மை அவர்களிடம் வளர ஆரம்பிக்கிறது. இந்த மனப்பாங்குதான் திருட்டு மனப்பான்மை.
(ஆ) தலைவரது பணியாளர்களுக்குத் தீங்கிழைக்கின்றனர். இது அவர்களுடைய தீய எண்ணத்தைக் காட்டுகிறது. அதாவது, தலைவன்மேல் உள்ள கோபத்தைத் தலைவன்மேல் காட்டுவதற்குப் பதிலாக, அப்பாவிகளான பணியாளர்கள்மேல் காட்டுகின்றனர். அவர்களது தீய எண்ணம் அவர்களுடைய கோபத்தைவிடக் கொடுமையானது.
(இ) தலைவரது ஒரே மகனைக் கொன்று போடுகின்றனர். இது அவர்களுடைய பொறாமை உணர்வைக் காட்டுகிறது. 'என்னிடம் இல்லாத ஒன்று அவனிடம் இருக்கிறது' என்று எண்ணுகின்ற அவர்கள், திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், தலைவரது ஒரே மகனை அழிக்கத் துணிகின்றனர்.
(ஈ) இவை எல்லாம் செய்யக் காரணம் ஒருவேளை திராட்சைத் தோட்டத்தில் கனிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். அதாவது, குத்தகைக்குத் தோட்டத்தை எடுத்த இவர்கள் தங்கள் சோம்பல் மற்றும் கண்டுகொள்ளாத்தன்மையால் தோட்டத்தை மண்ணில் புதைத்த தாலந்துபோல வைத்திருந்தார்கள். தலைவர் தங்கள்மேல் கோபப்பட்டுத் தங்களை அழிப்பதற்கு முன்பாகவே, தாங்கள் தலைவருக்குரியவர்களை அழித்துவிட நினைக்கிறார்கள்.
தலைவருக்கு இப்போது நேரிட்டது அநீதி. ஏனெனில், ஓராண்டு முழுவதும் தோட்டம் பலனற்றுப் போய்விட்டது.
கோபம் கொள்கிற தலைவர் கொடிய குத்தகைதாரர்களை அழித்துவிட்டு, தோட்டத்தை நீதியோடு செயல்படுகிறவர்களுக்கு அளிக்க முன்வருகிறார்.
உருவகப் பொருளில் பார்க்கும்போது, தோட்டம் என்றால் இறையாட்சி, தோட்டத்தின் உரிமையாளர் கடவுள், குத்தகைதாரர்கள் இஸ்ரயேல் மக்கள் (தலைமைக்குருக்கள், பரிசேயர்கள், மூப்பர்கள்), பணியாளர்கள் இறைவாக்கினர்கள், மகன் இயேசு கிறிஸ்து. கட்டுவோரால் விலக்கப்பட்ட கல் புறவினத்து மக்கள். ஆக, யூதர்களுக்கு உரித்தான இறையாட்சி புறவினத்து மக்களுடைய கைக்குச் செல்லும் என்பது உருவகங்கள் மொழிகிற பொருள் ஆகும்.
இந்த உவமையைக் கேட்கிற தலைமைக் குருக்களும் மூப்பர்களும் இயேசுவின்மேல் மிகவே கோபம் கொள்கிறார்கள். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களை, 'நிராகரிக்கப்பட்ட மக்கள்' என்று புரட்டிப் போடுகிறார் இயேசு.
இவ்விரு கதையாடல்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இரு கதையாடல்களிலும் உரிமையாளருக்கு நீதி மறுக்கப்படுகிறது, உரிமையாளர் ஏமாற்றம் அடைகிறார், உரிமையாளரின் நற்குணம் நிராகரிக்கப்படுகிறது, உரிமையாளர் தோட்டங்களைப் பணியாளர்களிடமிருந்து பறித்து வேறு கைகளுக்கு மாற்றுகிறார்.
திராட்சைத் தோட்ட உருவகம் நமக்கு மூன்று நிலைகளில் பொருந்துகிறது:
(அ) திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை
நம்மைப் படைத்தவராகிய கடவுள் நம் ஒவ்வொருவருடைய கையிலும் வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தைக் கொடுத்துள்ளார். அத்தோட்டத்தை நாம் பராமரிக்குமாறு நமக்கு உயிரையும் ஆற்றலையும் திறன்களையும் வழங்குகிறார். தோட்டத்தின் கனிகளை அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நம் சோம்பல், கண்டுகொள்ளாத்தன்மை, பதற்றம், தள்ளிப்போடுதல், அவசரம் போன்றவற்றால் நாம் பலன்கள் தராமல் இருக்கிறோம். சில வேளைகளில் நிறைய வேலைகள் செய்கிறோம், எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறோம், பல்வேறு அலுவல்களில் ஈடுபடுகிறோம். ஆனாலும், இருக்கிற இடத்திலேயே இருக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் எசேக்கியா அரசருக்குச் சொன்னதுபோல, 'உன் நாள்கள் நெருங்கிவிட்டன. உன் இல்லத்தை ஒழுங்குபடுத்து' என்று நம்மிடமும் சொல்கிறார்.
(ஆ) திராட்சைத் தோட்டம் என்பது நம் கிறிஸ்தவ நம்பிக்கை
திருமுழுக்கின் வழியாக நாம் இறையாட்சி என்னும் தோட்டத்தின் உரிமையாளர்களாக மாறியிருக்கிறோம். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்னும் இறையியல் மதிப்பீடுகளைப் பெற்றிருக்கிறோம். ஆளும் பணி, புனிதப்படுத்தும் பணி, கற்பிக்கும் பணி என்று இயேசுவின் மூன்று பணிகளைச் செய்ய அழைப்பு பெற்றிருக்கிறோம். இறையன்பு, பிறரன்பு என்னும் கட்டளைகளால் வழிநடத்தப்படுகிறோம். இருந்தாலும், நாம் பெற்றிருக்கிற அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கையை வாழாதபோது நம் கிறிஸ்தவ நம்பிக்கை பலன்தராத தோட்டமாக, அல்லது காட்டுப் பழங்களைத் தருகிற தோட்டமாக மாறுகிறது. இப்படி இருக்கிற தோட்டம் சீக்கிரம் கைமாறிவிடும். ஏனெனில், கிறிஸ்தவம் என்பது நமக்கு வெறும் தலைப்பாக மட்டுமே உள்ளது.
(இ) திராட்சைத் தோட்டம் என்பது நம் உறவுநிலை
மனிதர்களாகிய நாம் அனைவரும் சமூக நபர்கள். உறவுநிலைகள் வழியாகவே நாம் இந்த உலகில் நிலைபெறுகிறோம். உறவுநிலைகள் நீதி, இரக்கம் என்னும் இரு தண்டவாளங்களில்தாம் பயணம் செய்கின்றன. ஒருவர் மற்றவரை நீதியுடன் நடத்த நமக்குக் கடமை உண்டு. பொறாமை, கோபம், மற்றவர்களை இகழ்ச்சியுடன் நோக்குதல், வன்மம் போன்றவற்றால் உறவு என்னும் திராட்சைத் தோட்டத்தை நாம் பலன்தர இயலாததாக மாற்றிவிடுகிறோம்.
நம் திராட்சைத் தோட்டம் கைமாறிச் சென்றுவிடாமல் காப்பாற்றிக்கொள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வழிகாட்டுகிறது.
'எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்' எனச் சொல்கிற பவுல், 'அறிவெல்லாம் கடந்த இறைஅமைதி அவர்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்' எனப் பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதுகிறார். தொடர்ந்து, 'உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, பாராட்டுதற்கு உரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை போன்றவற்றை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்துகிறார்.
அறிவைக் கடந்த அமைதி வழியாகவும், மேற்காணும் நற்பண்புகள் வழியாகவும் நம் திராட்சைத் தோட்டத்தை பேணி வளர்த்துக் கனிகொடுக்க முயற்சி செய்வோம்.
இறுதியாக, இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் பாடுவது போல, 'இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!' (காண். திபா 80:14) என நாம் தோட்டத்தின் உரிமையாளரிடம் மன்றாடுவோம். ஏனெனில், நாளின் இறுதியில் அவரே நம்மைத் தீக்கிரையாக்கவும், நம்மைத் தழுவிக்கொள்ளவும் வல்லவர்.
No comments:
Post a Comment