ஞாயிறு, 15 அக்டோபர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு
எசாயா 25:6-10. பிலிப்பியர் 4:12-14, 19-20. மத்தேயு 22:1-14
விருந்துக்கான அழைப்பும் பதிலிறுப்பும்
தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு பசி. இந்தப் பசியைப் போக்குவது உணவு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் உணவு உண்டாலும், மனிதர்களைப் பொறுத்தவரையில் உணவு என்பது வெறும் வயிற்றுப் பசி போக்குவது என்பதைத் தாண்டிய பொருள் கொண்டது. உணவு என்பது உறவின் அடையாளமாகவும் காணப்படுகிறது. உறவின் அடையாளமாகப் பரிமாறப்படும் உணவை நாம் விருந்து என்கிறோம்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு விருந்துக்கான அழைப்பு மற்றும் பதிலிறுப்பை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. நாம் பலரை அழைத்து விருந்து படைக்கிறோம். மற்றவர்களின் அழைப்புக்கு பதிலிறுப்பு செய்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 25:6-10), ஆண்டவராகிய கடவுள் நிறைவுகாலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு வைக்கவிருக்கிற விருந்து பற்றி முன்னுரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. நிறைவுகாலம் என்பது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வருகிற நிகழ்வைக் குறிப்பதாகவும் பொருள்கொள்ளலாம். ஆண்டவராகிய கடவுளின் பெயர் 'படைகளின் ஆண்டவர்' என வழங்கப்பட்டுள்ளது. சீயோன் மலையில் படைகளின் ஆண்டவர் விருந்தினை ஏற்பாடு செய்கிறார். இந்த விருந்தின் மூன்று பண்புகளாக இறைவாக்கினர் குறிப்பிடுபவை: (அ) விருந்துக்கான அழைப்பு பொதுவானது - இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லாமல் மக்களினங்கள் அனைவரையும் ஆண்டவராகிய கடவுள் அழைக்கிறார். (ஆ) விருந்து சுவைமிக்கது – பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம். (இ) விருந்து நிறைந்து பெருகி வழிகிறது – வருகிற அனைவரும் உண்ணும் அளவுக்கு அபரிவிதமாக இருக்கிறது. இந்த விருந்தின் வழியாக துன்பம், சாவு, கண்ணீர், நிந்தை என்னும் நான்கு எதிர்மறையான நிலைகளைக் களைகிறார் கடவுள்.
இவற்றையெல்லாம் காண்கிற மக்கள், 'இவரே நம் கடவுள். இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்' என்று பாடுவார்கள்.
ஆண்டவராகிய கடவுள் இந்த உறவின் வழியாக, இஸ்ரயேல் மக்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் மீட்பரை மீண்டும் கண்டுகொள்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமண விருந்து உவமை வாசிக்கிறோம். லூக்கா நற்செய்தியிலும் காணப்படுகிறது இந்த உவமை. தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களைப் பார்த்து இயேசு இந்த உவமையை உரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்துகிறார். யூத சமூகத்தில் திருமண நிகழ்வு என்பது மிக முக்கியமான ஒன்று. ஏழு நாள்கள் முதல் முப்பது நாள்கள் வரை நடக்கக் கூடியது திருமண நிகழ்வு. இங்கே இளவரசனுக்குத் திருமணம் நடக்கிறது. விருந்துக்கான அழைப்பு முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கும் குழுவினர்களுக்கும், இரண்டாவதாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதலில் அழைக்கப்பட்டவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி அழைப்பை நிராகரிக்கிறார்கள். இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்றாலும் அவர்களில் ஒருவர் திருமண உடை அணியாமல் வருவதால் நிராகரிக்கப்படுகிறார். 'அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்' என்னும் வாக்கியத்தோடு உவமை நிறைவு பெறுகிறது.
முதலில் அழைக்கப்பட்டவர்கள் நான்கு நிலைகளில் பதிலிறுப்பு செய்கிறார்கள்: (அ) விருப்பம் இல்லாமல் இருந்தார்கள் (மத் 22:3). (ஆ) அழைப்பைப் பொருட்படுத்தவில்லை (22:5). (இ) வேறு முதன்மைகளைக் கொண்டிருந்தார்கள் - வயலுக்கும் கடைக்கும் செல்தல் (22:5). (ஈ) பணியாளர்களை இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள் (22:6). இந்த நான்கு பதிலிறுப்புகளும் எதிர்மறையாக இருக்கின்றன.
இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நேர்முகமாகப் பதிலிறுப்பு செய்து விருந்தில் பங்கேற்க வந்திருந்தாலும், வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி வருகிறார். திருமண ஆடை என்பது விருந்துக்கான அழைப்பின்போது வழங்கப்படுகிற ஆடை. விருந்துக்குச் செல்பவர்கள் அவ்வாறு வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டே செல்வர். ஆடையை அணிய மறுப்பதன் வழியாக, ஒருவகையில் இந்த நபரும் எதிர்மறையாகவே பதிலிறுப்பு செய்கிறார்.
உவமையின் பொருளைப் பார்க்கும்போது, அரசர் என்பவர் வானகத் தந்தை, மகன் இயேசு கிறிஸ்து, திருமண விருந்து இறையாட்சி, பணியாளர்கள் இறைவாக்கினர்கள், முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள், இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.
இரண்டாவதாக அழைக்கப்பட்ட புறவினத்தார்கள் அனைவரும் திருமண விருந்துக்குள் நுழையும் தகுதி பெற்றிருந்தாலும், விருந்தில் தொடர்வது என்பது ஒவ்வொருவரும் தம்மையே தகுதியாக்கிக்கொள்வதைப் பொறுத்தே அமைகிறது.
இந்த உவமை இயேசுவின் வலை உவமையை நினைவுபடுத்துகிறது. விண்ணரசு வலை போல அனைத்து மீன்களையும் வாரிக்கொண்டு வந்தாலும் நல்ல மீன்களே பாத்திரத்தில் சேகரிக்கப்படுகின்றன. மற்ற மீன்கள் மீண்டும் கடலுக்குள் அல்லது குப்பையில் எறியப்படுகின்றன. வலையில் சிக்கியதால் மட்டுமே மீன்கள் சேகரிக்கப்படும் என்பது பொருள் அல்ல. மீன்கள் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதல் வாசகத்தில் நாம் காணும் விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பைப் பெறுகிறது. இரண்டாம் வாசகத்திலோ விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுகிறது.
விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுவதற்கான காரணம், அரசரின் மேன்மையையும் வல்லமையையும் மக்கள் அறியாததே. இதை வெறும் விருந்து என்று பார்த்தார்களே தவிர, அரசரோடு உறவாடக் கூடிய வாய்ப்பு என்று அவர்கள் பார்க்கவில்லை. மேலும், மேன்மையான விருந்தைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக தாழ்மையான தங்களுடைய முதன்மைகளைத் தேர்ந்துகொண்டார்கள்.
இந்த இரண்டு விருந்து அழைப்புகளும் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
முதலில், வாழ்க்கை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கான அழைப்பை ஆண்டவராகிய கடவுள் நம் அனைவருக்கும் வழங்குகிறார். அவர்தாமே நமக்கு விருந்து பரிமாறுகிறார். அவர் நமக்கு விருந்து அளித்தாலன்றி நாம் பசியாற முடியாது. ஆனால், பல நேரங்களில் நம் காலிக் கோப்பைகளைத் தூக்கிக்கொண்டு மற்ற காலிக் கோப்பைகளைத் தேடிச் செல்கிறோம். காலிக் கோப்பைகள் ஒருபோதும் மற்ற காலிக் கோப்பைகளை நிரப்ப முயலாது என்பதை அறிந்துகொள்வோம்.
இரண்டாவது, அருளடையாளங்கள், குறிப்பாக, நற்கருணை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கு நாம் எல்லாரும் அழைப்பு பெற்றிருந்தாலும், திருமண ஆடை அணியாதவர் விருந்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். திருமண ஆடை என்பது நாம் கொள்ள வேண்டிய தயார்நிலை. விருப்பம் மட்டும் போதாது. தயார்நிலையும் வேண்டும்.
மூன்றாவது, திருமண விருந்தின் நோக்கம் கடவுளோடு உள்ள உறவு. 'இவருக்காகவே நாங்கள் காத்திருந்தோம்' என்று படைகளின் ஆண்டவரைத் தேடி ஓடுகிறார்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளோடு நாம் கொள்ள வேண்டிய உறவு அவரோடு நாம் அருந்தும் உணவின் வழியாகவே நிறைவு பெறுகிறது.
திருமண விருந்தில் பங்கேற்பதற்கான வழி முறைகளை இருவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்:
ஒருவர், அரசர் தாவீது. இன்றைய பதிலுரைப் பாடலில் (காண். திபா 23) 'ஆண்டவரே, என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' எனப் பாடுகிற தாவீது, 'என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது' என்று, ஆண்டவராகிய கடவுள் தரும் விருந்தால் தான் நிறைவு பெறுவதை எடுத்துரைக்கிறார்.
இரண்டு, திருத்தூதர் பவுல். இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20), பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தை நிறைவு செய்கிற பவுல், தன் பணி வாழ்வில் தான் அனுபவித்த எல்லா அனுபவங்களையும் நினைவுகூர்ந்தவராகத் தன் கடிதத்தை நிறைவு செய்கிறார். ஒருநாள் நிறைவான உணவு, மறுநாள் பட்டினி, ஒருநாள் பஞ்சுமெத்தையில் தூக்கம், மறுநாள் மண்தரையில் உறக்கம், ஒருநாள் வெதுவெதுப்பு மறுநாள் குளிர், ஒருநாள் பாதுகாப்பு, மறுநாள் அச்சுறுத்தல், ஒருநாள் சிரிப்பு, மறுநாள் அழுகை என மாறி மாறி தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்கிறார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அந்தச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோமோ அல்லது தலை துண்டிக்கப்படுவோமா என்பதே அவருக்கு உறுதியாக இல்லை. சிறையின் தனிமை, வருத்தும் முதுமை, நோய், இன்னும் நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றனவோ என்ற ஏக்கம் தரும் சோர்வு, தரையின் குளிர், கசையடிகளின் காயம் என அனைத்தும் வருத்தினாலும், 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' எனப் பெருமிதம் கொள்கிறார். இந்தப் பயிற்சியைக் கொடுத்தது யார்? அல்லது அந்தப் பயிற்சிக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தது யார்?
பவுலே தொடர்கிறார், 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' தன் கடவுளை, 'வலுவூட்டுகிறவர்' என்ற தலைப்பு கொடுத்து அழைக்கிறார் பவுல். மேலும், தன் தேவையில் உடனிருந்த பிலிப்பி நகரத் திருஅவையினரைப் பாராட்டி, 'கடவுள் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்' என வாழ்த்துகிறார்.
தான் பெற்றுள்ள நிறைவைத் தன் இறைமக்களும் பெறுவார்கள் என எதிர்நோக்கு கொண்டிருக்கிறார் பவுல்.
உணவும் விருந்தும் விவிலியத்தில் முதன்மையான கருத்துருகளாகத் திகழ்கின்றன. நம் முதற்பெற்றோரின் பாவம் விலக்கப்பட்ட கனியை உண்டதில்தான் தொடங்குகிறது. நற்செய்தி நூல்கள் இயேசு பல விருந்துகளில் பங்கேற்கிறார். விருந்து பற்றிய எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். காணாமற்போன மகன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 15), இளைய மகன் திரும்பிவந்தபோது அனைவருக்கும் விருந்து படைக்கிறார் தந்தை. விருந்தில் கலந்துகொள்ள மணம் இல்லாமல் வெளியே நிற்கிறான் மூத்தமகன். தந்தையின் அழைப்பு அவன் காதுகளில் விழுகிறது. ஆனால், அவனோ மௌனமாக நகர்கிறான்.
விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பு பெறாவிடில் உறவும் முறிந்துவிடுகிறது.
No comments:
Post a Comment