புதன், 4 அக்டோபர் 2023
பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் புதன்
நெகேமியா 2:1-8. லூக்கா 9:57-62
அழைப்பின் மேன்மையும் விலையும்
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மூவர் இயேசுவை எதிர்கொள்ளும் நிகழ்வே இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு இம்மூவருடனும் உரையாடுகிறார். ஒவ்வோர் உரையாடலும் சீடத்துவத்தின் மேன்மை மற்றும் அதற்கு ஒருவர் தர வேண்டிய விலையையும் முன்மொழிகிறது.
(அ) உரையாடல் ஒன்று: வசதி என்னும் விலை
'நான் உம்மைப் பின்பற்றுவேன்' என்று ஒருவர் இயேசுவிடம் கூறுகிறார். அவருக்கு விடையளிக்கிற இயேசு, மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை என்கிறார். வசதி வாய்ப்புகள், சௌகரியங்கள் போன்றவற்றை இழத்தல் ஒருவர் சீடத்துவத்துக்குக் கொடுக்க வேண்டிய விலையாக இருக்கிறது.
(ஆ) உரையாடல் இரண்டு: முதன்மைகள் என்னும் விலை
தம்மைப் பின்பற்றி வருமாறு இயேசு ஒருவரை அழைக்க, அவரோ, 'தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதி தாரும்!' என்கிறார். 'இறந்தோர் அடக்கம் செய்யப்படுவார்கள்' என மொழிகிற இயேசு, 'நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்' என்கிறார். சீடத்துவத்தில் முதன்மைகள் சரிசெய்யப்பட வேண்டும். மேலும், கவனச்சிதறல்கள் அறவே கூடாது.
(இ) உரையாடல் மூன்று: திரும்பிப் பார்த்தல் என்னும் விலை
தானாக இயேசுவைப் பின்பற்ற விழைகிற ஒருவர், 'நான் போய் முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர வேண்டும்!' என்கிறார். 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கிறவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' எனப் பதில் கூறுகிறார் இயேசு. இந்த உரையாடல் எலியா-எலிசா உரையாடலை நமக்கு நினைவூட்டுகிறது. எலிசா தான் அழைக்கப்பட்டபோது வீட்டுக்குச் சென்று தான் பயன்படுத்திய கலப்பையை உடைத்து விறகாக்கி, தன் எருதுகளை விருந்தாகப் படைக்கிறார். ஆனால், இங்கே உழுபவர் திரும்பிப் பார்த்தல் என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் இயேசு. திரும்பிப் பார்த்துக்கொண்டே உழுபவரின் வேகம் குறையும். அவர் தன் கால்களையும் காயப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், உடனடியாக முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார் இயேசு.
நம் வாழ்வின் அழைத்தல் மேன்மையாக இருக்கும்போது, அதனுடன் வருகிற வலிகளும் அதிகமாகவே இருக்கின்றன. வசதிக்குறைவுகள் ஏற்றல், முதன்மைகளைச் சரிசெய்தல், உடனடியாக முடிவெடுத்து முன்னேறிச் செல்தல் என்பவை இயேசு தருகிற சீடத்துவப் பாடங்களாக அமைகின்றன.
இந்த மூன்று பாடங்களையும் தன் வாழ்வில் செயலாற்றுபவராக நம் முன் நிற்கிறார் நெகேமியா. இன்றைய முதல் வாசகம், நெகேமியா நூலின் தொடக்கப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாரசீக நாட்டு மன்னரின் அரண்மனையில் இருக்கிற நெகேமியா எருசலேமில் உள்ள தன் மூதாதையரின் கல்லறைகளைச் சரி செய்ய விழைகிறார். எருசலேம் நகரைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது. இந்தப் பணியை ஏற்றால் அவர் எருசலேம் பயணம் செய்ய வேண்டும், நிறைய வசதிக் குறைவுகளைச் சந்திக்க வேண்டும். இருந்தாலும் புறப்படுகிறார். தான் போவதற்கு முன்பாக அரசரின் அனுமதி பெறுதல், வழிகளைக் கடப்பதற்கான அனுமதி பெறுதல், மரங்கள் வெட்டுவதற்கான அனுமதி பெறுதல் என முதன்மைகளைச் சரிசெய்கிறார். உடனடியாக முடிவெடுத்து அவர் முன்னேறிச் செல்லாவிட்டால், அரண்மனையில் அடிமையாகவே இருந்து தன் வாழ்வை முடித்திருப்பார். உடனடிச் செயல்பாடு சிறந்த தலைவராக அவரை உயர்த்துகிறது.
இன்று நாம் கொண்டாடுகிற அசிசி நகர் புனித பிரான்சிஸ் அனைத்தையும் துறந்தவராக, இயேசுவைப் பின்பற்றுகிறார். சீடத்துவத்தின் சிறந்த முன்மாதிரி இவர்.
நம் வாழ்வில் வலிகள் அதிகமாக இருந்தால், நாம் பெற்றிருக்கிற அழைப்பு மேன்மையானது என்பது பொருள். ஏனெனில், அழைப்பின் மேன்மை கூடக் கூட வலிகளும் கூடும்!
No comments:
Post a Comment