Wednesday, October 4, 2023

ஆண்டவரின் மகிழ்வு

இன்றைய இறைமொழி 

வியாழன், 5 அக்டோபர் 2023

பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் வியாழன்

நெகேமியா 8:1-6,7-12. லூக்கா 10:1-12

ஆண்டவரின் மகிழ்வு

சீடத்துவத்துக்கான மூன்று பாடங்களை – வசதியின்மை ஏற்றல், முதன்மைகளைச் சரிபடுத்துதல், முடிவு எடுத்து முன்னேறிச் செல்தல் - மொழிகிற இயேசு, தமக்கு முன்பாக எழுபத்திரண்டு (அல்லது எழுபது பேரை) அனுப்புகிறார். இவ்வாறாக, இயேசுவின் பணியின் வட்டம் விரிவதுடன் பணியாளர்கள் எண்ணிக்கையும் உயர்கிறது. இருவர் இருவராக அவர்களை அனுப்புவதன் வழியாக ஒருவர் மற்றவருடன் இணைந்து செயல்படுவதற்கும் கற்றுக்கொடுக்கிறார். அறுவடை மிகுதியாகவே இருக்கிறது.

குறைவான பொருள்கள் கொண்ட பயணம், நிலையாக ஒரே வீட்டில் தங்குதல், காண்பவர் அனைவருக்கும் அமைதி மொழிதல், நோய்கள் நீக்கி நலம் தருதல், பேய்களை ஓட்டி நற்செய்தி அறிவித்தல், எதிர்ப்புகளைக் கண்டால் எதிர்கொள்தல் என அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இயேசுவின் பணியாளருடைய வாழ்வு இயேசுவின் வாழ்வை ஒத்ததாக இருக்கிறது. அவர்கள் செய்கிற பணியும் இயேசுவின் பணியாகவே இருக்கிறது. இவ்வாறாக, இயேசுவின் நீட்சிகளாகச் செல்கிறார்கள் அவருடைய சீடர்கள்.

திருமுழுக்கின் வழியாகவும், திருநிலைப்பாட்டின் வழியாகவும் நாம் அனைவரும் இயேசுவின் நீட்சிகளாகச் செயல்படுகிறோம் எனில், நம் வாழ்வு அவருடைய வாழ்வைப் போல இருக்கிறதா? நாம் செய்கிற பணிகள் இயேசு செய்த பணிகளைப் போல இருக்கின்றனவா?

முதல் வாசகத்தில், 'ஆண்டவரின் மகிழ்வே உங்களுடைய வலிமை' என்னும் அழகான வாக்கியத்தை வாசிக்கிறோம். 

பாபிலோனிய நகருக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார்கள். செருபாபேல், எஸ்ரா ஆகியோர் தலைமையில் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்படுகிறது. எருசலேம் நகரின் மதில்களைச் சரிசெய்து, வாயில்களை நிலைநிறுத்துகிறார் நெகேமியா. அனைவரையும் ஒரே ஆளெனக் கூட்டுகிற எஸ்ரா அவர்கள்முன் திருச்சட்டத்தை வாசிக்கிறார். மக்கள் அழத்தொடங்குகிறார்கள்.

இவ்வளவு நாள்கள் பகைவரின் வசைமொழி மட்டுமே கேட்ட காதுகள் இப்போது ஆண்டவரின் சொற்களைக் கேட்கின்றன என்னும் மகிழ்ச்சி ஒரு பக்கம்.

இவ்வளவு பிரமாணிக்கமுள்ள ஆண்டவருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக மனம் வருந்தி அவர்கள் வடிக்கும் அழுகை இன்னொரு பக்கம்.

அவர்களின் அழுகையை நிறுத்தச் சொல்கிற எஸ்ரா, இல்லம் திரும்பி மகிழ்ந்திருக்குமாறும், இல்லாதவரோடு உணவைப் பகிர்ந்துகொள்ளுமாறும் அறிவுறுத்துகிறார்.

ஓர் அருள்பணியாளரின் பணி இதுவே. மற்றவர்களின் அழுகையை நிறுத்துவது. மற்றவர்களின் குற்றவுணர்வு, பயம், அவமான உணர்வு ஆகியவற்றைக் களைவது.

திருமுழுக்கிலிருந்தே மறைப்பணியாளர்களாகவும், அருள்பணியாளர்களாகவும் இருக்கும் நாம் ஒருவர் மற்றவருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருதல் நலம்.

இன்று உரோமையில் தொடங்குகிற மாமன்றம் கூட்டியக்கம் பற்றிச் சிந்திக்கிறது. மாமன்றத்தில் பங்கேற்கும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்கிற வேளையில், ஒட்டுமொத்தத் திருஅவையும் திருமுழுக்கின் அழைப்பை ஏற்றுப் பதிலிறுக்க வேண்டும் என முயற்சி செய்வோம்.


No comments:

Post a Comment