Wednesday, October 11, 2023

கற்றுத்தாரும்!

இன்றைய இறைமொழி 

புதன், 11 அக்டோபர் 2023

பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் புதன்

யோனா 4:1-11. லூக்கா 11:1-4

கற்றுத்தாரும்!

'இயேசுவே கற்றுக்கொடுத்த இறைவேண்டல் வெறும் ஃபார்முலா செபம் அல்ல, மாறாக, செயல்களுக்கு இட்டுச்செல்லும் செபம்.'

இயேசுவின் போதனை மட்டுமல்ல, அவருடைய வாழ்வும் சீடர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதை நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசு இறைவேண்டல் செய்பவராக லூக்கா நற்செய்தியாளர் அடிக்கடி பதிவு செய்கிறார். இயேசுவின் இறைவேண்டலின்போது அவரிடம் வருகிற சீடர்கள், 'எங்களுக்கும் கற்றுத்தாரும்!' எனச் சொல்கிறார்கள்.

இயேசுவின் சீடர்கள் ஏற்கெனவே யூத செப முறையை அறிந்தவர்களாக இருந்திருப்பார்கள். மேலும், அவர்களில் சிலர் திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இருந்ததால், அவரிடமிருந்தும் இறைவேண்டலைக் கற்றிருப்பார்கள். ஆனாலும், தங்கள் இறைவேண்டலில் ஏதோ குறைவுபடுவதை உணர்கிறார்கள். 

இயேசுவின் இறைவேண்டல் வெறும் சொற்களால் கட்டப்படாமல், உணர்வுகளாலும் செயல்களாலும் கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

'தந்தையே' – கடவுளைத் தந்தையே என அழைப்பது இயேசுவின் சமகாலத்து யூதர்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்காது. ஏனெனில், 'யாவே' என எழுதப்பட்ட கடவுளின் பெயரையே 'அதோனாய்' என்று வாசிப்பார்கள். கடவுளின் பெயரை உச்சரிப்பதே ஏற்புடையதல்ல என்று நினைத்தவர்கள் நடுவே, கடவுளை உறவாடுகிற நபராக, 'தந்தை' என முன்மொழிகிறார் இயேசு. கடவுளைத் தந்தை என அழைப்பதன் உட்பொருள் என்ன? நாம் அனைவரும் ஒருவர் மற்றவருடைய சகோதர, சகோதரிகளாக மாறுவதுதான்.

'உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக!' – யூத சமயத்தில் உள்ள மிட்ஸ்வாட் பெராகோத் என்னும் புகழ்ச்சிப் பாடல் அட்டவணையிலும், 'பெயர்', 'ஆட்சி' ஆகிய சொற்கள் வருகின்றன. கடவுளுக்குரிய புகழ்ச்சியை நாம் கொடுப்பதோடு, அவருடைய ஆட்சியின் வருகைக்கான எதிர்நோக்குடன் காத்திருப்பதும் இங்கே குறிக்கப்படுகிறது.

'எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்!' – கடவுளின் பராமரிப்பை அன்றாடம் நாம் வேண்டி நிற்க வேண்டும் என்பதை இவ்வாக்கியம் உணர்த்துவதுடன் நாம் ஆண்டவரை அன்றாடம் தேட வேண்டும் எனவும் மொழிகிறது. 'அன்றாட உணவு' என்பது பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பாலைநிலத்தில் பொழிந்த அன்றாட மன்னாவை நினைவூட்டுகிறது. 

'நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களை மன்னியும்' – பாவங்களை மன்னிக்க கடவுள் ஒருவரே வல்லவர் என்பது இயேசுவின் சமகாலத்துப் புரிதல். பாவம் என்பது இன்று நாம் மறைக்கல்வியில் கற்றுள்ளது போல சாவான பாவம், அற்பப் பாவம் அல்ல. மாறாக, பாவம் என்பது ஓர் உறவுப் பிறழ்வு. நாம் ஒருவர் மற்றவரை நம் உறவுப் பிறழ்வுகளில் மன்னிப்பது போல, கடவுள் நம்மையும் மன்னிக்க வேண்டும் என இறைவேண்டல் செய்கிறோம். மற்றவர்களை நாம் மன்னிப்பது என்பது கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கான முன்நிபந்தனையாக இருக்கிறது.

'எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்' – 'சோதனை' என்பது 'துன்பம்' என்றும் மொழிபெயர்க்கலாம். இவ்வாக்கியத்தைத் தனியாகப் பார்த்தால், சோதனைக்கு இழுக்கிற கூறுகளிடமிருந்து நாம் விலகியிருக்க இறைவன் துணைசெய்ய வேண்டும் எனப் பொருள்கொள்ளலாம். இதற்கு அடுத்த வாக்கியத்தோடு – 'தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்' - இணைத்துப் பார்த்தால் சோதனை தீயோனால் வருகிறது என்பதால் அந்தத் தீயோனிடமிருந்து நம்மைக் கடவுள் விடுவிக்க வேண்டும் என இறைவேண்டல் செய்வதாகப் புரிந்துகொள்ளலாம்.

இயேசு நமக்குக் கற்றுத்தந்த இறைவேண்டல் வெறும் ஃபார்முலாவாகச் சுருங்கிவிட்டால், இந்த இறைவேண்டல் நம்மில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் நினிவே மக்களுக்குக் காட்டிய கருணை கண்டு அவர்மேல் கோபம் கொள்கிறார் யோனா. 'வாழ்வதை விடச் சாவதே மேல்' என்கிறார். ஆமணக்குச் செடி வழியாக யோனாவுக்குக் கற்றுக்கொடுக்கிற கடவுள், தம் இரக்கம் அனைவருக்கும் உரியது என வெளிப்படுத்துகிறார்.

யோனாவுக்கு கற்றுக்கொடுக்கிறார் கடவுள்.

சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.

கற்றுக்கொள்பவரின் கற்றலில்தான் கற்றுக்கொடுத்தல் நிறைவுபெறுகிறது. இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் மொழியும் செயல்களை ஏற்று வாழ்தல் நலம்.

நிற்க.

கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எண்கள் 2777 முதல் 2865, இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலில் உள்ள ஏழு விண்ணப்பங்களை (ஆனால், லூக்கா நற்செய்தியில் ஆறு – உம் திருவுளம் நிறைவேறுவதாக என்ற விண்ணப்பம் இங்கே இல்லை) மிக விரிவாக எடுத்துரைக்கின்றன.

நம் கத்தோலிக்க நம்பிக்கை வாழ்வின் அடிப்படை செபங்களில் ஒன்றான இச்செபத்தைப் பொருளுணர்ந்து செபிக்க முயற்சி செய்வோம்.



No comments:

Post a Comment