Friday, October 6, 2023

தூய செபமாலை அன்னை


இன்றைய இறைமொழி 

சனி, 7 அக்டோபர் 2023

பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் சனி

திருத்தூதர் பணிகள் 1:12-14. லூக்கா 1:26-38

தூய செபமாலை அன்னை

அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தூய செபமாலை அன்னையின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இந்த மாதம் முழுவதும் செபமாலை மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருத்தந்தை ஆறாம் பவுல் 1974ஆம் ஆண்டு, 'மரியாள் வணக்கம்' என்னும் தன் ஏட்டில், 'செபமாலை தன்னகத்தே கொண்டிருக்கின்ற மறையுண்மைகள் நற்செய்திப் பகுதிகளால் தூண்டப்பட்டவை. ஆக, செபமாலை செபிக்கும்போது நாம் நற்செய்தியின் நிகழ்வுகள் வழியாகப் பயணம் செய்கின்றோம். எனவே, இது நற்செய்தியின் இறைவேண்டல்' என எழுதுகின்றார்.

மகிழ்ச்சி, ஒளி, துன்பம், மற்றும் மகிமை என்னும் மறையுண்மைகள் வழியாக நம் வாழ்வின் மறையுண்மைகளையும் செபமாலையில் செபிக்கின்றோம்.

செபமாலை பற்றிய நம் புரிதல் என்ன?

(அ) முதலில் இது ஒரு மாலை. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருப்பது மாலை. அல்லது தொடக்கமாக இருக்கும் ஒன்றே முடிவாகவும் அமைகிறது. அல்லது முடிவாக இருக்கின்ற ஒன்று புதிய தொடக்கமாக மாறுகிறது. நம் வாழ்வின் நிகழ்வுகள் மாலை போலவே நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த மாலையை நம் விரல்களுக்கு இடையில் உருட்டிப் பயணம் செய்யும் நாம், இறையன்பில் முடிவில்லாமல் வளர இறைவேண்டல் செய்கின்றோம்.

(ஆ) இறைவேண்டலின் மாலை. மாலையை உருட்டிச் செபிக்கும் வழக்கம் பௌத்தம் மற்றும் இந்து சமயங்களிலும் உள்ளது. செபமாலை தோன்றுவதற்கு முன்பு, துறவியர் கயிற்றில் முடிச்சுகளை இட்டு, அல்லது கூழாங்கற்களை மணலில் உருட்டி செபங்களை எண்ணிக்கொள்வதுண்டு. இறைவேண்டலை நினைவூட்டும் முடிச்சுகளே காலப்போக்கில் மாலையாக உருவெடுக்கிறது. திருப்பாடல்கள் 150ஐயும் முடிச்சுகளை உருட்டிக்கொண்டே அவர்கள் செபித்தனர். விவிலியப் பகுதிகள் எல்லாராலும் வாசிக்க இயலாமல் இருந்த அக்காலத்தில், நற்செய்தி நூல்களின் மையக் கருத்துகள் மட்டும் மறையுண்மைகளாகத் தொகுக்கப்பட்டு செபமாலை உருவாகியது. இயேசு கற்பித்த இறைவேண்டல், மங்கள வார்த்தை மன்றாட்டு, மற்றும் தமதிருத்துவ மன்றாட்டு ஆகியவற்றை இணைத்து செபிப்பதால் இது இறைவேண்டலின் மாலை.

(இ) மறையுண்மைகளின் மாலை. மகிழ்ச்சி, துயரம், மாட்சி, ஒளி என்று நாம் செபிக்கும் மறையுண்மைகள் நம் வாழ்வின் வாழ்வியல் உணர்வுகளாகவும் உள்ளன. இவ்வுணர்வுகளை நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், நம் அன்னை கன்னி மரியாவும் அனுபவித்தவர்களாக இருப்பதால், நம் உணர்வுப் போராட்டங்களில் அவர்கள் நமக்குத் துணை நிற்கின்றனர்.

இன்று செபமாலை நமக்கு அணிகலனாகவும், மோதிரமாகவும், செயல்திறன் பேசியின் செயலியாகவும் நம்மோடு எப்போதும் இருக்கிறது. இச்செபமாலையுடன் நாம் உடனிருக்க முயற்சி செய்தல் நலம். நாம் நகர்த்தும் ஒவ்வொரு மணிகளும் நம் வாழ்க்கையை இறைவன் நோக்கி நகர்த்துவனவாக!

செபமாலை செபிக்கும் நாம் ஒவ்வொரு பத்து மணியிலும் 'மறையுண்மைகளை' தியானிக்கின்றோம். இம்மறையுண்மைகளின் பொருள் மற்றும் அமைப்பை முதலில் புரிந்துகொள்வோம். 'மிஸ்டரி' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப்பதமே 'மறையுண்மை'. 'மிஸ்டரி' என்பதை 'மறைந்திருக்கின்ற அல்லது ஒளிந்திருக்கின்ற பொருள்' என்றும், 'நம்மை உள்ளடக்கிய ஒன்று' என்றும் புரிந்துகொள்ளலாம். நாம் செபமாலையின்போது சிந்திக்கும் சில மறையுண்மைகளின் பொருள் நமக்கு மறைவாக இருக்கின்றது. சில மறையுண்மைகளில் நாமே பங்கேற்கிறோம். எடுத்துக்காட்டாக, துயர மறையுண்மைகள் பற்றித் தியானிக்கும்போது நம் வாழ்வின் துன்பங்களையும் நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம்.

திருஅவை பல நூற்றாண்டுகளாக மூன்று வகை மறையுண்மைகளைத் தியானித்து வந்தது. 2002ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 'ஒளியின் மறையுண்மைகள்' என்று மேலும் ஒரு குழுவை இணைத்தார். குழுவுக்கு ஐந்து என மொத்தம் நாம் இருபது மறையுண்மைகளைத் தியானிக்கின்றோம்.

இந்த நான்கு குழுக்களாவன: (அ) மகிழ்ச்சிநிறை மறையுண்மைகள், (ஆ) துயர்நிறை மறையுண்மைகள், (இ) மாட்சிநிறை மறையுண்மைகள், மற்றும் (ஈ) ஒளிநிறை மறையுண்மைகள்.

இம்மறையுண்மைகளில் சில விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டும் - எடுத்துக்காட்டாக, இயேசுவின் உயிர்ப்பு, சில திருஅவையின் மரபு மற்றும் போதனையை அடிப்படையாகக் கொண்டும் - எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பு, அமைந்துள்ளன.  மகிழ்ச்சிநிறை மறையுண்மைகளை திங்கள் மற்றும் சனிக் கிழமைகளிலும், துயர்நிறை மறையுண்மைகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், மாட்சிநிறை மறையுண்மைகளை புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஒளிநிறை மறையுண்மைகளை வியாழக் கிழமைகளிலும் நாம் தியானிக்கின்றோம்.

நம் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சி, துயரம், மாட்சி என வரையறுக்கலாம். இந்த மூன்று உணர்வுகளையும் ஊடுருவிச் செல்லும் ஒளி போல இறைவன் இருக்கின்றார். ஒவ்வொரு வாரமும் வெள்வேறு கிழமைகள் வரிசையாக வருவது போல, நம் வாழ்விலும் மகிழ்ச்சி, துயரம், மாட்சி என நிகழ்அனுபவங்கள் தொடர்ந்து வருகின்றன. நாம் எதையும் பற்றிக்கொள்ளாமல் நகர்ந்துகொண்டே இருக்கின்றோம்.

இன்றைய திருவிழா நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) இறைவேண்டலின் தாய் மரியா. இன்றைய முதல் வாசகம் (திப 1:12-14), அன்னை கன்னி மரியாவை மேலறையில் இறைவேண்டல் செய்கின்ற அன்னையாக முன்வைக்கின்றது. 'இதோ! உம் தாய்' என்று கல்வாரியில் சிலுவையின் அடியில், இயேசு யோவானிடம் தன் அன்னையை ஒப்புவித்தார். யோவானைத் தன் மகனாக ஏற்றுக்கொள்கின்ற மரியா ஒட்டுமொத்த திருத்தூதர்கள் குழாமையும் தன் பிள்ளைகள் என ஆக்கிக்கொள்கின்றார். மரியாவின் உடனிருப்பு இறைவேண்டலாக இருக்கின்றது. ஆக, உடனிருத்தலே முதல் இறைவேண்டல்.

(ஆ) சரணாகதி என்னும் இறைவேண்டல். நற்செய்தி வாசகத்தில், 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று சரணாகதி அடைகின்றார். இந்த நிகழ்வின் வழியாக, சரணாகதி அடைதலே இறைவேண்டல் எனக் கற்றுக்கொடுக்கின்றார் மரியா. 

உடனிருப்பும் சரணாகதியும் நம் வாழ்வின் மாலைகளாக இருப்பனவாக!


No comments:

Post a Comment