Thursday, February 11, 2016

இணைத்திருமுறை நூல்கள்

நாம் இன்று தொடங்கியுள்ள தவக்காலத்தில், விவிலியத்தில் உள்ள இணைத்திருமுறை நூல்களை ஓர் அழகியல் பார்வையோடு படிக்கலாம் எனவும், படித்து ரசித்ததை பதிவு செய்யலாம் எனவும் விழைகிறேன்.

இணைத்திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) என்றால் என்ன?

தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும், எஸ்தர், தானியேல் நூல்களின் கிரேக்க இணைப்புக்களுமே இணைத்திருமுறை நூல்கள்.

இவைகளை பிரிந்து சபையினர் 'தூண்டப்பட்ட நூல்களாக' (inspired books) ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் ரொம்ப சிம்பிள். எபிரேயத்தில் எழுதப்பட்டால்தான் அது தூண்டப்பட்ட நூல் என்பது அவர்களின் வாதம். அவர்கள் மட்டுமல்ல எரோணிமுஸ் என்னும் ஜெரோம் காலம் தொட்டு, லூத்தர் வரை எல்லாரும் அப்படித்தான் நினைத்தனர். பல விவிலியங்களில் இந்த நூல்கள் 'திருமுறைப் புறநூல்கள்'  (Apocrypha) என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

திரெந்து நகர திருச்சங்கம் (கி.பி. 1546) இவற்றை தூண்டப்பட்ட நூல்களாக ஏற்றுக்கொண்டது.

என்னைப் பொறுத்தவரையில், இணைத்திருமுறை நூல்கள் என்பவை ஒரு பாலம்.

முதல் ஏற்பாட்டையும், இரண்டாம் ஏற்பாட்டையும் மிக இலகுவாக இணைப்பவை இவை. முதல் ஏற்பாட்டு காலத்திற்கும், இரண்டாம் ஏற்பாட்டு காலத்திற்கும் உள்ள வரலாற்று பிளவை நிரப்புபவை இவை.

நாளை தோபித்து நூலோடு தொடங்குவோம்.