Thursday, February 1, 2018

இருவர் இருவராக

நாளைய (1 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:7-13)

இருவர் இருவராக

இயேசு பன்னிரு திருத்தூதர்களை அனுப்பும் நிகழ்வில் அவர் இருவர் இருவராக திருத்தூதர்களை அனுப்புவது ஏன் என்பது உறுதியிட்டுக்கூற முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதைப் புரிந்துகொள்ள சபை உரையாளராய் நாம் துணைக்கு அழைத்துக்கொள்வோம்:

'தனிமனிதராய் இருப்பதைவிட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால் அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஒருவர் விழுந்தால் அடுத்தவர் அவரைத் தூக்கிவிடுவார். தனிமனிதராய் இருப்பவர் விழுந்தால் அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும் ... ... தனிமனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.' (சஉ 4:9-12)

இன்று நாம் அடுத்தவரோடு இருப்பதைவிட தனிமையாய் இருக்கவே விரும்புகிறோம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். 'அடுத்தவர் ஓர் நரகம்' என்கிறார் சார்த்தர்.

திருத்தூதுப்பணி செல்லும் இடத்தில் மட்டுமல்ல. மாறாக, செல்லும் வழியில் உள்ள உடனிருப்பிலும் வெளிப்பட வேண்டும் என்பதே இயேசுவின் படிப்பினை. இந்த இருவர் இருவர் தங்கள் ஜோடிகளை தாங்களே தேர்ந்துகொண்டார்களா அல்லது இயேசுவே ஜோடியை அமைத்துக் கொடுத்தாரா? - இந்தக் கேள்விக்கும் விடையில்லை.

இன்று இரண்டு கேள்விகளைக் கேட்போம்:

அ. இருவர் இருவராய் சேர்ந்து செல்லும் போது என்னுடைய இலக்கு இறையரசுப்பணியாக இருக்கிறதா?

ஆ. என்னுடன் உடன்வரும் அடுத்தவரை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேன்?