எபி 2:5-12. மாற் 1:21ஆ-28
அறிதலும் பதிலிறுத்தலும்
இயேசுவின் பொதுவாழ்வுத் தொடக்க நிகழ்வுகளை இன்றைய நற்செய்தி நம் கண்முன் கொண்டுவருகின்றது. போதிப்பவராகவும், தீய ஆவியை விரட்டுபவராகவும் இயேசுவைத் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றார் மாற்கு. இவை நடைபெறும் இடமும் நேரமும் முக்கியமானவை. இந்நிகழ்வுகள் கப்பர்நகும் தொழுகைக்கூடத்தில் ஓய்வு நாள் ஒன்றில் நடந்தேறுகின்றன. தொழுகைக்கூடம் என்பது இறைவேண்டல் செய்யும் இடம். இயேசு தன் பணியை இறைவேண்டல் சூழலில் தொடங்குகின்றார். ஓய்வு நாளில் போதிப்பது அனுமதிக்கப்பட்டாக இருந்தாலும், வல்ல செயல் நிறைவேற்றுவது அல்லது பேய்களை ஓட்டுவது தடைசெய்யப்பட்டதாக இருந்தது. ஓய்வுநாளில் வல்ல செயல் நிகழ்த்துவதன் வழியாக இயேசு ஓய்வுநாளை மீறுகிறவராக, அதாவது சட்டத்திற்கு உட்படாதவராக, தன்னை முன்மொழிகின்றார். மேலும், முதல் ஏற்பாட்டுக் கடவுள் ஓய்ந்திருந்தது போல, இரண்டாம் ஏற்பாட்டுக் கடவுள் ஓய்ந்திருப்பதில்லை என்பதையும் வாசகர் இங்கே புரிந்துகொள்ள முடிகிறது.
இரு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஒன்று, இயேசு போதிக்கின்றார். போதனையின் உள்ளடக்கம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாக, போதனை ஏற்படுத்திய விளைவு மற்றும் தன்மை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன: இயேசுவின் போதனை குறித்து மக்கள் வியப்படைகின்றனர், இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்ததாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் தங்கள் போதனையை மறைநூல்கள், அல்லது தங்களுடைய ஆசிரியர், அல்லது தாங்கள் சார்ந்திருந்த பள்ளியின் அதிகாரத்தைக் கொண்டே போதித்தனர். ஆனால், இயேசு கடவுளின் மகன் என்னும் நிலையில் - இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுவது போல – தன்னதிகாரம் கொண்டவராகப் போதிக்கின்றார்.
இரண்டு, இயேசு தீய ஆவியை விரட்டி, தீய ஆவி பிடித்தவருக்கு நலம் தருகின்றார். இயேசுவின் காலத்தில் நோய்கள் அனைத்திற்கும் காரணம் தீய ஆவி என்று கருதப்பட்டது. தீய ஆவி மேல் அதிகாரம் கொண்டவராக இயேசு இருப்பதால் அனைத்து நோய்களையும் நீக்கி நலம் தருபவராக அறிமுகம் செய்யப்படுகின்றார். இயேசுவைக் கண்டவுடன் தீய ஆவி, 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என அறிக்கையிடுகின்றது. 'அறிதல் - மறைந்திருத்தல்' என்னும் இலக்கியக் கூற்றை மாற்கு அறிமுகம் செய்கின்றார். அதாவது, தீய ஆவி இயேசு யார் என்பதை அறிந்திருந்தது. ஆனால், இயேசுவுக்கு நெருக்கமான மனிதர்களுக்கு அவர் யார் என்பது மறைவாக இருந்தது. இயேசு தீய ஆவிக்குக் கட்டளையிட்டவுடன், 'இது என்ன? இவர் யார்?' என மக்கள் வியக்கின்றனர். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் இக்கேள்விகளையே தங்கள் உள்ளத்தில் எழுப்ப வேண்டும் என்பது மாற்கு நற்செய்தியாளரின் விருப்பமாக இருக்கிறது.
இன்று நாம் இயேசுவின் நற்செய்தியை வாசிக்கும்போதெல்லாம் இக்கேள்விகள் - 'இது என்ன? இவர் யார்?' – என்னும் கேள்விகள் நம் உள்ளத்தில் எழுகின்றனவா? இக்கேள்விகள் ஐயத்தால் எழுபவை அல்ல. மாறாக, வியப்பால் எழுபவை. இக்கேள்விகளுக்கு நாம் செய்யும் பதிலிறுப்பு என்ன?
இன்றைய முதல் வாசகம் இயேசுவைப் பற்றிய புதிய புரிதலைத் தருகின்றது. கடவுளின் மகன் என்னும் நிலையில் இயேசு இருந்தாலும் அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது வானதூதருக்கும் குறைவான மனித நிலையில் - மானிடரின் துன்பங்களில் பங்கேற்பவராக - இருக்கிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட நூலின் ஆசிரியரின் சொற்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன: 'தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுபவர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே'. அந்த உயிர்முதல் என்பது துன்பமே. துன்பம் ஏற்றதால், இயேசு மனிதர்களைச் சகோதரர்கள், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.
தியானிப்போம்: கடவுள் நம் துன்பங்களில் பங்கேற்கின்றார். நம் துன்பங்களைக் காண்கின்ற அவர் உடனடியாகத் தலையிட்டு அவற்றைப் போக்குகின்றார்.
இயேசுவின் போதனையைக் கேட்ட, வல்ல செயலைக் கண்ட தொழுகைக்கூட மக்கள் வியப்படைந்தனர். நம் பதிலிறுப்பு என்ன?
இயேசுவை அறிந்த உடனேயே பதிலிறுப்பு செய்வதும் அவசியமாகிறது.நம் நடுவே நிற்கும் அவரை, நம் துன்பங்களில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அவரை அறிதலும், 'நீர் என் சகோதரர்' என அறிக்கையிடுவதும் நம் நற்செயலாக இருக்கட்டும் இன்று!
No comments:
Post a Comment