Saturday, January 14, 2023

இரு கேள்விகள்

ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

எசாயா 49:3,5-6 1 கொரிந்தியர் 1:1-3 யோவான் 1:29-34

இரு கேள்விகள்

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், 'பிகமிங்' என்பது. குழந்தைகளிடம் நாம், 'நீ வயது வந்தபின் என்னவாகப் போகிறாய்?' எனக் கேட்கிறோம். ஆனால், வயது வந்தவர்களிடம், 'நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?' என்று மட்டுமே கேட்கிறோம். குழந்தைப் பருவம் மட்டும்தான் மாற்றத்தின் பருவம் என்றும், வயது வந்த பருவம் இருத்தலின் பருவம் எனவும் நினைக்கிறோம். இது தவறு! நாம் ஒவ்வொரு பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறோம் - 'வி ஆர் பிகமிங் எவ்ரி மொமண்ட்' - இப்படியாக எழுதுகிறார் மிஷல்.

நாம் எப்படி மாறுகிறோமோ அதுவேதான் நம்முடைய இருத்தலாக இருக்கின்றது என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. வரலாற்றில் பெரிய முத்திரை பதித்த யாரை எடுத்தாலும் - மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் - இவர்கள் தங்களுடைய வாழ்வில் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருந்தனர்: ஒன்று, 'நான் யார்?' இரண்டு, 'நான் யாருக்காக?' இக்கேள்விகளில், 'நான் யார்?' என்பது ஒருவருடைய வேர் என்றால், 'நான் யாருக்காக?' என்பது அவருடைய கிளை என்று சொல்லலாம். இந்த இரண்டு கேள்விகள் கேட்பதும் ஒருவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. 

உளவியல் மற்றும் மெய்யியலில் அதிகமாக வலியுறத்தப்படும் கேள்வி, 'நான் யார்?' என்பதுதான். இதற்கு விடையாக நாம் நம்முடைய பெயர், ஊர், பெற்றோர், குடும்ப பின்புலம், படிப்பு, வேலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். மெய்யிலாளர் சாக்ரடிசு, 'உன்னையே நீ அறிந்துகொள்!' என்றார். ஆனால், இதிலிருந்து புறப்பட்டு, 'நீ யாருக்காக என்பதை அறிந்துகொள்!' என்பதில்தான் மெய்ஞ்ஞானம் இருக்கிறது. இந்த மெய்ஞ்ஞானத்தை நோக்கியே கீழைத்தேய ஞானம் இருந்தது.

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற ஊக்கவுரையில், இளைஞர்களின் பாதைகளைப் பற்றிப் பேசுகின்ற இடத்தில், 'இளைஞர்கள் தங்களுடைய வாழ்வைச் சீராக அமைத்துக்கொள்ள இவ்விரு கேள்விகள் கேட்பது அவசியம்: 'நான் யார்?' அதைவிட, 'நான் யாருக்காக?'' என்கிறார். இக்கேள்விகளுக்கு விடைகள் காணும் இளைஞர்களே வெற்றியாளர்கள்.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் சந்திக்கும் மூன்று நபர்கள் - எசாயா, பவுல், இயேசு - இக்கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 49:3,5-6), முதல் பகுதி இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கடவுள் பேசுவதாகவும், இரண்டாம் பகுதி இறைவாக்கினர் அல்லது இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழைப்பு பற்றி தாங்களே பேசுவதாகவும் அமைந்துள்ளது. இஸ்ரயேல் அல்லது இறைவாக்கினர் யார்? 'அவர் ஊழியன். கருப்பையிலிருந்து ஊழியனாக உருவாக்கம் பெற்றவர். ஆண்டவர் பார்வையில் மதிப்பு பெற்றவர். ஆண்டவரைத் தன் ஆற்றலாக் கொண்டவர். இவர் யாருக்காக? யாக்கோபின் குலங்களுக்காக, இஸ்ரயேலில் சிதறடிக்கப்பட்டவர்களுக்காக. இறைவாக்கினர் தன்னுடைய முதல் கேள்விக்கு விடை கண்டதால், இரண்டாம் கேள்விக்கும் எளிதாக விடை காண்கின்றார். 'நான் யார்?' என்று அறிந்துகொண்ட அடுத்த நொடி, 'நான் யாருக்காக?' என்பதை அறிந்து தொடர்ந்து தன் பணியைச் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:1-3) புனித பவுல் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும் முதல் திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. வருகின்ற ஏழு வாரங்கள் தொடந்து நாம் இத்திருமுகத்திலிருந்தே வாசிப்போம். பவுலைப் பொருத்தவரையில் கொரிந்து நகரத் திருச்சபை அவருக்கு 'அடங்காத குழந்தை.' கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய பிளவுகள், பரத்தைமை, சிலை வழிபாடு, வழிபாட்டுப் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்படுகின்ற பவுல் அவர்களைக் கடிந்தும், அறிவுறுத்தியும் இம்மடலை எழுதுகின்றார். கடிந்துரைக்கும், அறிவுறுத்தும் இம்மடலை மிகவும் இனிமையான வார்த்தைகளால் தொடங்குகிறார்: 'கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு ... திருத்தூதனாக அழைக்கப்பட்ட ... இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று, தூயோராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கு ...' பவுலின் வார்த்தைகளில் கோபமோ, மனவருத்தமோ, உளக்கசப்போ இல்லை. இத்தொடக்க வார்த்தைகளில் தான் யார் என்பதையும் தன்னுடைய பணி யாருக்கு என்பதையும் தெளிவாக உரைப்பதோடு, கொரிந்து நகர மக்கள் யார் என்பதையும் அவர்களுடைய பணி யாருக்கு என்பதையும் எடுத்துரைக்கின்றார். பவுல் யார்? திருத்தூதர். பவுல் யாருக்காக? கடவுளின் திருச்சபைக்காக, கடவுளுக்காக. கொரிந்து மக்கள் யார்? இறைமக்கள், தூயவர்கள். இவர்கள் யாருக்காக? கிறிஸ்துவுக்காக.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:29-34), இயேசு தன்னிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், 'அவர் யார்?' என்பதையும் - 'கடவுளின் செம்மறி', 'அவர் யாருக்காக?' - 'உலகின் பாவத்தைப் போக்க' என்பதையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார். இங்கே 'செம்மறி' என்ற உருவகம், பாவக்கழுவாய்க்குப் பயன்படுத்தப்படும் பலி ஆட்டையோ, அல்லது போக்கு ஆட்டையோ, அல்லது பாஸ்கா திருநாளன்று கொல்லப்படும் ஆட்டுக்குட்டியையோ குறிக்கும். மேலும், இப்பகுதியில் தான் யார் என்பதையும், தான் யாருக்கு என்பதையும் திருமுழுக்கு யோவானும் தெளிவாக உணர்ந்திருப்பதை நாம் காண்கின்றோம்.

இந்தக் கேள்விகளை நம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது? இன்றைய நாளில் நாம் அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இது தமிழர்களின் புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் பானையில் இடும் அரிசியும், தண்ணீரும், சர்க்கரையும் பொங்கலாக மாறுகின்றன. தங்கள் இருத்தலால் அல்ல, தங்களுடைய மாற்றத்தால்தான் அவை புதிய வடிவமும், இனிமையும் பெறுகின்றன. 

'நான் யார்?' என்னும் கேள்வியிலிருந்து, 'நான் யாருக்காக?' என்னும் கேள்விக்கு நகர்ந்து செல்வது ஒரு பயணம். அந்தப் பயணத்தின் அடிப்படையாக இருப்பது மாற்றம். நம் வாழ்வில் பல நேரங்களில், 'நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்டிருப்போம். ஆனால், 'நான் யாருக்காக?' என்று நான் என்னையே கேட்கும் அத்தருணத்தில்தான் என்னுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது. 

இக்கேள்விகளுக்கான விடை மூன்று நிலைகளில் வரலாம்:

(அ) இறைவனிடமிருந்து

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அல்லது இறைவாக்கினர் எசாயாவுக்கு இக்கேள்விகளின் விடைகள் இறைவனின் வெளிப்பாட்டிலிருந்து வருகின்றன. ஆண்டவராகிய கடவுள்தாமே அவருக்கு இவற்றை வெளிப்படுத்துகின்றார். மேலும், ஆண்டவரின் வாக்குறுதிகள் எதிர்கால வாக்குறுதிபற்றியதாகவும் இருக்கின்றன.

(ஆ) தன் குழுமத்திலிருந்து

இரண்டாம் வாசகத்தில் பவுல் இக்கேள்விகளுக்கான விடைகளைதத் தன்னுடைய இலக்கு மக்களாகிய கொரிந்து நகரத் திருச்சபையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார். தன்னுடைய குழுமத்தின்மேல் கோபமோ அல்லது மனத்ததாங்கலோ கொள்ளாமல் மிகவும் மனமுதிர்ச்சியோடு தேடுகின்றார் பவுல்.

(இ) தன் சகோதரர் அல்லது நண்பர்களிடமிருந்து

நற்செய்தி வாசகத்தில் இயேசு யார் என்ற அடையாளமும், அவர் யாருக்காக என்பதற்கான விடைகளும் திருமுழுக்கு யோவனிடமிருந்து வருகின்றன. 

இன்றைய நாளில், நாம் இவ்விரண்டு கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்: 'நான் யார்?' 'நான் யாருக்காக?'

கேள்விகளுக்கு விடை கண்டவுடன் மாற்றம் நோக்கி நாம் புறப்படுதல் வேண்டும். அது எப்படி சாத்தியம்?

(அ) நம் அடித்தள அனுபவம்

அடித்தள அனுபவம் என்பது நம்மைப் புரட்டிப் போடுகின்ற, முழுமையாக மாற்றுகின்ற அனுபவம். 'ஆண்டவர் பார்வையில் நான் மதிப்பு பெற்றவன்' – என்னும் இவ்வார்த்தைகளை இறைவாக்கினர் அடிமைத்தனத்தின் தளத்தில் நின்று மொழிகின்றார். அதாவது, தான் அடிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும், வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் தன் மதிப்பு ஆண்டவரின் பார்வையில் உள்ளது என அறிதலே இறைவாக்கினரின், இஸ்ரயேல் மக்களின் அடித்தள அனுபவம். இன்று பல நேரங்களில் நாம் அடித்தள அனுபவங்களை நபர்கள் அல்லது இடங்கள்மேல் வைக்கின்றோம். இவை சில நேரங்களில் மாறலாம், மறைந்து போகலாம். ஆனால், ஆண்டவரை அடித்தளமாகக் கொண்ட அனுபவம் நிலைத்து நிற்கிறது.

(ஆ) எதிர்வினை ஆற்றுதல் குறைத்தல்

நாம் பல நேரங்களில் நமக்கு வெளியே இருக்கும் சூழல் அல்லது நபர்களுக்கு ஏற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள நினைக்கின்றோம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்துமாறு அனுமதிக்கிறோம். அப்படி அனுமதித்தால் நாம் வெளிப்புற நிகழ்வுகள்மேல்தான் கவனம் செலுத்துவோம். நமக்கு வெளியே இருக்கும் பல நிகழ்வுகளை நபர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. அப்படிக் கட்டுப்படுத்த நினைப்பது நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கும். தான் நற்செய்தி அறிவித்த கொரிந்து நகரத் திருஅவையின் பிரச்சினைகள் பவுலுக்கு நெருடலாக இருந்தாலும், அவை தன் மேல் தாக்கத்தை ஏற்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. தன் திருத்தூதுப் பணியை அவர் தொடர்ந்து செயலாற்றினார். 

(இ) நம்பிக்கைப் பார்வை

தன் முன்னே நின்ற ஒரு நபரை 'இயேசு-செம்மறி-இறைமகன்' என்னும் மூன்று சொற்களால் மொழிகின்றார் திருமுழுக்கு யோவான். மற்றவர்கள் எல்லாம் நாசரேத்து இயேசு எனக் கண்டறிந்த ஒருவரை, இறைமகனாகக் காண்கின்றார் யோவான். இதுவே அவருடைய நம்பிக்கைப் பார்வை. 'நான் இப்படி இருப்பேன்' என்னும் நம்பிக்கைப் பார்வையே நம் இலக்குகளை நோக்கி நம்மை வேகமாக நகர்த்துகின்றது. இயேசுவும் தன் இலக்கை அறிந்தவராகவும் அதை நோக்கி நகர்பவராகவும் இருக்கிறார்.

இக்கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தால், 'உமது திருவுளம் நிறைவேற்ற நானும் வருகிறேன் ஆண்டவரே' (காண். திபா 40) என்று திருப்பாடல் ஆசிரியர் போல (இன்றைய பதிலுரைப்பாடல்) நாமும் அவரிடம் சரணாகதி அடைய முடியும். இக்கேள்விகளுக்கான விடைகளில் அவருடைய உடனிருப்பும் உற்சாகமும் நிறைய இருக்கும்.


No comments:

Post a Comment