I. எசாயா 42:1-4,6-7 II. திருத்தூதர்பணிகள் 10:34-38 III. மத்தேயு 3:13-17
அக்கரை உறவுகள்!
ஜென் கதை ஒன்றோடு தொடங்குவோம்.
ஆற்றின் கரையருகில் ஜென் மடாலயம் இருந்தது. புதிதாய் ஜென் மடாலயத்திற்கு வந்த இளவல்கள் சிலர் படகேறி ஆற்றின் அக்கரைக்குச் சென்றனர். மாலை வேலையாகிவிட்டது. ஒருவர் தவிர மற்ற எல்லாரும் படகேறி மடாலயம் திரும்பிவிட்டனர். திரும்பி வராத மற்றவர், ஆற்றின் அக்கரையில் நின்றுகொண்டு, இக்கரையில் இருப்பவர்களிடம் கை அசைக்கின்றார். அவரின் கை அசைவைக் கவனிக்கின்ற மடலாயத் தலைவர் வெளியே வருகிறார். வெளியே வந்த தலைவர் தானும் கையசைத்து, 'என்ன வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'அக்கரைக்கு வருவது எப்படி?' எனக் கேட்கின்றார் இளவல். 'நீ இருப்பதே அக்கரைதானே!' என்கிறார் தலைவர். ஞானம் பெற்றான் சீடன்.
அடுத்தவர்கள் இருக்கும் கரை தனக்கு அக்கரை என்றால், தான் இருப்பதும் அடுத்தவர்களுக்கு அக்கரை என்று உணர்ந்த சீடன், ஒவ்வொன்றும் அக்கரை என்று உணர்கின்றான். அதுவே ஞானம்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்ற இக்கரையிலிருந்து நாம் ஆண்டின் பொதுக்காலம் என்ற அக்கரைக்கு இன்று கடந்து செல்கின்றோம். நம்மைத் தண்ணீரில் இறக்கி அக்கரைக்குச் செல்ல அழைக்கும் திருவிழாவே இயேசுவின் திருமுழுக்கு திருவிழா.
இயேசுவின் திருமுழுக்கின்போது, வானகத் தந்தை, 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்று உலகிற்கு அவரைப் பற்றி அறிக்கையிடுகின்றார். அந்த நேரமே இயேசு தன்னுடைய பணிவாழ்வையும் தொடங்குகின்றார். ஆக, கடவுளோடு மகன் என்ற நிலையில் உறவுகொண்ட இயேசு, ஒருவர் மற்றவரோடு சகோதரர் என்ற நிலையில் பணியாற்றத் தொடங்குகின்றார். ஆக, இயேசுவின் திருமுழுக்கு அவருக்கு இரண்டு உறவுகளுக்குக் கதவுகளைத் திறக்கின்றது. அக்கரையில் நின்ற கடவுளையும் மனுக்குலத்தையும் தண்ணீரில் இறங்குவதால் தழுவிக்கொண்டு உறவுகொள்ளத் தொடங்குகிறார் இயேசு.
இதுதான் நம்முடைய சிந்தனையின் கரு.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 3:13-17) இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது. திருமுழுக்கு பெறுமுன் இயேசு யோவானோடு உரையாடுகின்றார். 'நீரா என்னிடம் திருமுழுக்கு பெற வருகிறீர்?' என்று யோவான் தயக்கம் காட்ட, 'கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதே முறை' என்கிறார் இயேசு. 'கடவுளுக்கு ஏற்புடையவை' என்ற வார்த்தை இங்கே முக்கியமானது. கிரேக்கத்தில் 'டிக்காயுசுனே' என்று குறிப்பிடப்படும் வார்த்தைக்கு, 'கடவுளோடு உள்ள உறவை நேர்கோட்டில் அமைத்துக்கொள்ளுதல்' என்பது பொருள். இயேசு தன்னுடைய திருமுழுக்கின் நினைவாக கடவுளோடு உள்ள உறவை நேர்கோட்டில் அமைத்துக்கொள்கிறார் என்றால், இயேசுவின் கோடுகள் கோணலாக இருந்தனவா? இல்லை. மாறாக, கடவுளுக்கும் தனக்கும் உள்ள உறவில் தான் யார் என்பதைக் கண்டுகொள்கிறார் இயேசு. அந்தக் கண்டுகொள்தல், தந்தையின் வார்த்தைகளில் - 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவரின் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' - நடந்தேறுகிறது. தொடர்ந்து, இயேசு தன்னுடைய பொதுவாழ்வை அல்லது பணிவாழ்வைத் தொடங்குகின்றார். அதாவது, கடவுளுக்கு ஏற்புடையவற்றை நிறைவேற்றிய ஒருவர், தன்னையும் கடவுளையும் நேர்கோட்டில் வைத்துக்கொள்ளும் ஒருவர், வெறுமனே ஓய்ந்திருக்க இயலாது. அவர் உடனடியாக மற்றவர்களை நோக்கிப் புறப்பட வேண்டும்.
இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திப 10:34-38), கொர்னேலியுவின் இல்லத்தில் உரையாற்றுகின்ற பேதுரு, இயேசுவின் திருமுழுக்கு அனுபவத்தை, 'தூய ஆவியாரின் அருள்பொழிவு' என்று அழைப்பதோடு, 'கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து, எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்' என்று மொழிகின்றார். இயேசு மற்றவர்கள்மேல் காட்டிய உறவு, 'நன்மை செய்தல்' என்ற நிலையில் வெளிப்படுகிறது. இயேசு செய்த அனைத்துப் பணிகளையும் - போதித்தல், பேய்களை ஓட்டுதல், நோய்களைக் குணமாக்குதல் - 'நன்மை' என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடுகின்றார் பேதுரு.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 42:1-4,6-7), ஊழியர் பாடல் என்றழைக்கப்படும் நான்கு பாடல்களில் முதன்மையான பாடலாக இருக்கிறது. இங்கே கடவுள் தான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலை, தன்னுடைய இறைவாக்கினரை, தான் முன்மொழியும் மெசியாவை, 'இதோ! என் ஊழியர்' என அழைக்கின்றார். மேலும், தான் தேர்ந்துகொண்ட ஊழியரால் தன்னுடைய நெஞ்சம் பூரிப்படைவதாகவும் மொழிகின்றார். தொடர்ந்து, 'உம் கையைப் பற்றிப் பிடித்து, உம்மை பாதுகாப்பேன்' என்று தன்னுடைய உடனிருப்பையும் அவருக்குத் தருகின்றார் ஆண்டவர். இங்கே, ஆண்டவரோடு உள்ள உறவும், ஊழியர் மற்றவர்களுக்குச் செய்யப்போகின்ற பணியும் இணைந்தே செல்வதைப் பார்க்கின்றோம்.
ஆக, இன்றைய மூன்று வாசகங்களையும் இணைத்துப்பார்க்கும்போது, மூன்று விடயங்கள் தெளிவாகின்றன:
அ. மனிதர்களோடு உள்ள உறவில் முதல் அடி எடுத்து வைப்பவர் கடவுள். அவரே மனிதர்களைத் தெரிந்துகொள்கிறார். அன்பு செய்கிறார். அவர்களால் பூரிப்படைகின்றார்.
ஆ. கடவுளோடு உறவுகொள்ளும் ஒருவர், கடவுளால் அன்புசெய்யப்படும் ஒருவர், அந்த அன்பை கடவுளுக்கு பதிலன்பாகக் காட்ட முடியாது. ஆனால், அவர் அந்தப் பதிலன்பை ஒருவர் மற்றவருக்குக் காட்ட வேண்டும். அந்த அன்பு நன்மை செய்தலாகவும், பிறரன்புப் பணிகளாகவும், நீதிச் செயல்களாகவும் வெளிப்படும்.
இ. மனித உறவுகளுக்கு இரண்டு திசைகள் உள்ளன. நேர்கோட்டு திசையில் மனிதர்கள் கடவுளோடும், சமதளத்தில் ஒருவர் மற்றவரோடும் இணைந்திருக்கின்றனர். முதல்வகை உறவு மனித வாழ்வின் வேர் என்றால், இரண்டாம்வகை உறவு அவர்களின் கிளைகள் அல்லது கனிகள்.
இவற்றை நம் வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?
நாம் வயது வந்து திருமுழுக்கு பெற்றாலன்றி, அல்லது திருமுழுக்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளியைப் பார்த்தாலன்றி, நம்முடைய திருமுழுக்கு நிகழ்வை நாம் நினைவிற்குக் கொண்டுவர முடியாது. திருமுழுக்கு கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு. 'தொடக்கநிலைப் பாவம் கழுவப்படுகிறது' என்று ஆன்மீகப்படுத்தவில்லை என்றாலும், சாதாரண வாழ்வியல் நிலையில் இதற்கு நிறையப் பொருள் இருக்கிறது.
திருமுழுக்கு ஒரு குடும்ப நிகழ்வு. திருமுழுக்கின் வழியாக குழந்தை ஒரு குடும்பத்தின் உறுப்பினராகிறது. ஏனெனில், குழந்தைக்குப் பெயரிடுதல் இங்கேதான் நடைபெறுகிறது. பெயரிடுதல் என்பது ஒருவர் அனுபவிக்கும் உரிமை உணர்வைக் காட்டுகிறது. மேலும், குழந்தை தன்னுடைய குடும்பத்தோடு, குடும்பத்தாரின் குடும்பங்களோடு உறவுகொள்ளத் தொடங்குகிறது.
இந்த உறவுக்கு அடித்தளமாக இருப்பது இறையுறவு. 'தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்' என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டு, தண்ணீர் தலையில் ஊற்றப்படும்போது, குழந்தை தன்னுடைய கடவுளோடு உள்ள நிலையில் தன்னையே நேர்கோட்டில் வைத்துக்கொள்கிறது. இறைவனுக்கு குழந்தையை அர்ப்பணிக்கும் மரபு எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இந்து சமயத்தில் புழக்கத்தில் இருக்கும் மொட்டையிடுதல் இறையுறவையே குறிக்கிறது. போரில் தோற்ற அரசன் தன்மேல் வெற்றிகொண்ட அரசனின் கால்களில் தன்னுடைய மணிமுடியைக் கழற்றி வைத்து, 'இனி நான் உன் அடிமை. உன் விருப்பப்படி எனக்குச் செய்யும்' என்று சொல்வதுபோல, பெற்றோர் குழந்தையின் மணிமுடியாகிய தலைமுடியைக் கழற்றி, 'இனி இவன்-இவள் உன் அடிமை. உன் விருப்பப்படி இவனுக்கு-இவளுக்குச் செய்யும்' என்று சொல்கின்றனர்.
ஆக, நம்முடைய திருமுழுக்கிலும் நாம் இறைவன் என்ற அக்கரையோடும், மற்றவர்கள் என்னும் அக்கரையோடும் இணைகிறோம்.
1. இறைவனில் அடையாளத்தைக் காண்பதால்
நாம் அன்பு செய்யும்போது மற்றவர்களையும், அல்லது நம் படிப்பு, பெயர், பின்புலம் போன்றவற்றையும் நம்முடைய அடையாளங்களாகக் கொள்கின்றோம். இவ்வடையாளங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆனால், 'நான் இறைவனின் அன்பார்ந்த மகன் அல்லது மகள்' என்று நாம் எடுத்துக்கொள்ளும் உரிமையும், அடையாளமும் ஒருபோதும் மாறாது. நாம் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் நமக்கு உந்துசக்தியாக இருப்பது இந்த அடையாளம்தான். இந்த அடையாளத்தில் இயேசு மிகவும் உறுதியாக இருந்தார். எனவேதான், அவருடைய உறவினர்கள் அவரை மதிமயங்கிவிட்டார் என்று நினைத்து தேடிவந்தபோதும், பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் தனக்கு எதிராகச் சதிசெய்தபோதும், தன்னுடைய சீடர்கள் தன்னைப் புரிந்துகொள்ள மறுத்தபோதும் அல்லது தவறாகப் புரிந்துகொண்டபோதும் துணிச்சலோடு முன்னேறிச் செல்கின்றார். இன்று நான், 'நான் கடவுளின் அன்பார்ந்த மகன்-மகள்' என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்வதோடு, அவருடைய பாதுகாப்பையும், உடனிருப்பையும் உணர வேண்டும்.
2. தண்ணீரை விட்டு வெளியேறுதல்
திருமுழுக்கு பெற்ற இயேசு தண்ணீரிலிருந்து வெளியேறுகின்றார். தண்ணீரிலிருந்து அவர் வெளியேறும்போதுதான் அவரால் தந்தையின் குரலைக் கேட்க முடிகின்றது. தண்ணீர் என்பது பாதுகாப்பு வளையம். அந்த பாதுகாப்பு வளையத்திலிருந்து ஒருவர் வெளியேற வேண்டும். இறையுறவையும், பிறர் உறவையும் நான் உணர என்னுடைய பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறுதல் அவசியம். 'பாதுகாப்பாய் இருக்கிறது' என்று தண்ணீரில் அதிக நேரம் நின்றால், அதுவே நமக்கு ஆபத்தாய் முடிந்துவிடும். இன்று நான் வெளியேற வேண்டிய தண்ணீர் எது? நான் விடமுடியாது பிடித்துக்கொண்டிருக்கும் பழக்கம் எது? எனக்கு நானே கட்டிக்கொள்ளும் சங்கிலி எது?
3. பிறருக்கு நன்மை செய்வதால்
இறைவனின் நன்மைத்தனத்தையும் அன்பையும் அனுபவித்த ஒருவர் அதை மற்றவர்களுக்குக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார். இயேசு தான் சென்ற இடமெங்கும் நன்மைசெய்துகொண்டே செல்கின்றார். நன்மை செய்தல் அவருடைய வழக்கமாகவே மாறிவிடுகின்றது. நன்மை செய்தல், நல்லதை நினைத்தல், நல்லதைப் பேசுதல் போன்றவை நாம் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள். தொடர்ந்து செய்யும் செயல் நமக்கு பழக்கம் அல்லது வழக்கமாகிவிடுகின்றது. நன்மையும் அப்படித்தான். இன்று நான் என்னுடைய வாழ்வில் செய்யும் நன்மைகள் எவை? என்னுடைய இருப்பால் யாராவது ஒருவருடைய வாழ்வு முன்னேறியிருக்கிறதா? நான் அடுத்தவரை அலகையின் கட்டுக்களிலிருந்து விடுவித்துள்ளேனா?
இறுதியாக,
அக்கரை உறவுகள் என்னும் இறை-மனித உறவுகளின் நுழைவாயிலாக திருமுழுக்கு இயேசுவுக்கு இருந்ததுபோல, திருமுழுக்கு பெற்ற உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. நுழைவாயிலைக் கடந்த இறை-மனித உறவில் இணையும் அனைவருக்கும் 'ஆண்டவர் தம் அமைதியை அருள்கின்றார்' என்று இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 29) நமக்கு வாக்குறுதி தருகிறது.
அக்கரை உறவுகள் அக்கறையோடு!
No comments:
Post a Comment