Tuesday, January 17, 2023

அவர்களோ பேசாதிருந்தார்கள்!

இன்றைய இறைமொழி 

புதன், 18 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 7:1-3, 15-17. மாற் 3:1-6.

அவர்களோ பேசாதிருந்தார்கள்!

ஓய்வுநாளில் கதிர்கள் கொய்து தின்ற சீடர்கள் பற்றிய பதிவைத் தொடர்ந்து, இயேசு ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்தில் சூம்பிய கை உடைய ஒருவருக்கு நலம் தருகின்றார். இந்த நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூன்று ஒத்தமைவு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மாற்கு நற்செய்தியாளரின் பதிவு நிறைய இலக்கிய நுணுக்கங்களைக் கொண்டிருக்கிறது.

சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கைகளால் கொய்து தின்கின்றனர். இங்கே கை சூம்பிய ஒருவர் இருக்கின்றார். சீடர்களின் கைகளைக் காப்பாற்றிய இயேசு, இந்த நபரின் கைக்கு நலம் தருவாரா? என்னும் கேள்வி வாசகருக்கு இயல்பாக எழுகிறது.

இயேசு ஓய்வுநாளில் அந்த நபருக்கு நலம் தருவாரா? என்று கூர்ந்து கவனிக்கின்றனர் பரிசேயர்கள். நிகழ்வின் இறுதியில், இயேசுவின் மேல் கோபம் கொண்டவர்களாக வெளியேறி, ஏரோதியருடன் இணைந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்.

இதை வாசிக்கும் நமக்கு நிகழ்வின் முரண் புலப்படுகிறது: ஓய்வுநாளில் மற்றவர்மேல் குற்றம் காண்பது அனுமதிக்கப்படலாம், குற்றமற்றவருக்கு எதிராக அவரை ஒழிக்கலாம் எனச் சூழ்ச்சி செய்வதும் அனுமதிக்கப்படலாம். ஆனால், உடல் நலமற்றவருக்கு இயேசு நலம் தருவது அனுமதிக்கப்படக் கூடாது. இதுதான் மனித வாழ்வின் முரண். 

ஏறக்குறைய இதே போன்றதொரு நிகழ்வை எண்ணிக்கை நூலில் வாசிக்கின்றோம் (காண். எண் 15:32-35). ஒருவன் ஓய்வுநாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருக்கிறான். அவன் மோசேயிடமும் ஆரோனிடமும் அழைத்து வரப்படுகின்றான். காவலில் வைக்கப்பட்டு ஆண்டவரின் கட்டளைப் படி கல்லால் எறிந்து கொல்லப்படுகின்றான். என்ன ஒரு முரண்! ஓய்வுநாளில் விறகு பொறுக்குவது குற்றம். ஆனால், கல்லால் எறிந்து ஒரு மனிதனைக் கொல்வது குற்றமல்ல!

நற்செய்தி வாசக நிகழ்வின்படி, இயேசு அந்த நபரை நடுவில் வருமாறு அழைக்கின்றார். தன்னைச் சுற்றி அமர்ந்தவர்களைப் பார்த்துக் கேள்வி ஒன்று கேட்கின்றார்: 'ஒய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?' எனக் கேட்கின்றார். இந்தக் கேள்வி ஒரு குதர்க்கமான கேள்வி. அவர்கள் எந்தப் பதில் கொடுத்தாலும் மாட்டிக்கொள்வார்கள். 'நன்மை செய்வது முறை' என்று விடை கூறினால், 'நான் செய்வது நன்மை தானே! பின் ஏன் என்மேல் குற்றம் காண்கிறீர்கள்' என இயேசு கேட்க நேரிடம். 'முறை அல்ல' என்று விடை கூறினால், 'நன்மை செய்ய முற்படும் ஒருவரைத் தடுக்கும் குற்றம்' அவர்கள்மேல் சுமத்தப்படும். ஆகவே, அவர்கள் பேசாதிருக்கிறார்கள்!

இதன் பொருள் என்ன?

'இருப்பது இருப்பது போல இருக்கட்டும். உனக்கு ஏன் இந்தக் கவலை? ஓய்வுநாள் ஓய்வுநாளாக இருக்கட்டும். கைசூம்பியவர் கைசூம்பியவராகவே இருக்கட்டும்!'

'அவர்கள் பேசாதிருந்தார்கள்' எனப் பதிவு செய்கின்ற மாற்கு, அதற்கான காரணம் அவர்களுடைய கடின உள்ளம் என்றும் பதிவு செய்கின்றார். அவர்களின் கடின உள்ளத்தையும் பிடிவாத குணத்தையும் கண்டு வருந்துகின்ற இயேசு, 'கையை நீட்டும்' எனச் சொல்லி நலம் தருகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று சவால்களை வைக்கின்றது:

(அ) மற்றவர்கள்மேல் குறை காண்பது. இருத்தியல் சிந்தனையாளர் சார்த்தர், நம்மை யாரோ சாவித் துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்னும் உணர்வு குற்றவுணர்வையும், பயத்தையும், வெட்கத்தையும் தருகின்றது என மொழிகின்றார். இன்று நாம் மற்றவர்களை இப்படிப் பார்க்கின்றோமா? மேலும், மற்றவர்கள் நம்மை இப்படிப் பார்க்கும்போது, அதன் பொருட்டு நம் செயல்களை மாற்றிக்கொள்கின்றோமா? மற்றவர்கள் தம்மை எப்படிப் பார்த்தாலும், இயேசு தன் இயல்பையும் செயலையும் மாற்றிக்கொள்ளவில்லை.

(ஆ) பேசாதிருத்தல். பேசாதிருத்தல் என்பது ஒரு வகையில் நடக்கின்ற நிகழ்வுக்கு ஆம் என்று சொல்வதாகும். மௌனமாக இருத்தல் எப்போதும் போற்றுதற்குரிய மதிப்பீடு அல்ல. சில நேரங்களில் நாம் பேசித்தான் ஆக வேண்டும். பேசாதிருத்தல் ஒரு வகையான பாதுகாப்பு ஆயுதம். இயேசுவின் குரல் நம் உள்ளங்களில் மனச்சான்றாக ஒலிக்கிறது. அந்தக் குரலுக்கு நாம் தரும் பதிலிறுப்பு என்ன?

(இ) சூம்பிய உள்ளம். நிகழ்வின் இறுதியில், சூம்பிய கை உடையவர் நலம் பெறுகின்றார். நீர்க்கோவையால் துன்புற்றவரின் கை நலம் பெறுகிறது. ஆனால், பரிசேயர்களின் உள்ளம் சூம்பிப் போய்விடுகிறது. வன்மம், கோபம், எரிச்சல், அவமானம் என்னும் நீர் அவர்களுடைய உள்ளங்களில் கோர்த்து நிற்கிறது. இன்று நம் உள்ளங்கள் நேர்முகமான உணர்வுகளால் நிறைந்திருக்கின்றனவா?

முதல் வாசகத்தில், மெல்கிசெதேக்கு என்னும் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் வழியில் இயேசு தலைமைக் குருவாக இருப்பதாக முன்மொழிகின்றார். இஸ்ரயேல் மரபின்படி லேவி குலத்தவர்தான் குருவாகத் திகழ முடியும். மேலும், ஆரோன் குடும்பத்தவர்தான் தலைமைக் குருவாக முடியும். இதன்படி பார்த்தால் இயேசு குருவும் அல்லர், தலைமைக்குருவும் அல்லர். ஏனெனில், இயேசு யூதா குலத்தைச் சார்ந்தவர், தாவீதின் குடும்பத்தினர். ஆரோன் வழியில் அல்ல, மெல்கிசெதேக்கு வழியில் இயேசு தலைமைக்குரு என புதிய கருத்தியலை உருவாக்குகின்றார் ஆசிரியர். முதலும் முடிவும் இல்லாத மெல்கிசெதேக்கு போல, நிலையான தலைமைக்குருவாகத் திகழ்கின்றார் இயேசு.

அவருடைய இரக்கமே அவருடைய தலைமைக்குரு அடையாளம். அந்த இரக்கம் ஓய்வுநாள், தொழுகைக்கூடம் என எல்லா இடத்திலும் பரவிக்கொண்டே இருக்கிறது.


No comments:

Post a Comment