வியாழன், 12 ஜனவரி 2023
எபி 3:7-14. மாற் 1:40-45.
நெருக்கமும் அந்நியமும்
இயேசுவின் காலத்தில் (சில ஆண்டுகளுக்கு முன் நம் ஊரிலும்) தொழுநோய் பீடிக்கப்பட்டவர்கள் மூன்று வகையில் அந்நியப்பட்டு நின்றனர்: (அ) தங்கள் உடல்நலத்திலிருந்து – ஏனெனில் தொழுநோய் அவர்களுடைய உடலை உருக்கி நிலைகுலையச் செய்கிறது. (ஆ) தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் சமூகத்திலிருந்து – ஏனெனில், இது ஒரு தொற்றுநோய் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். (இ) கடவுளிடமிருந்து – ஏனெனில், குணமாக்க இயலாத இந்த நோய் கடவுள் தந்த சாபம் எனக் கருதப்பட்டது.
இப்படியாக மூன்று நிலைகளில் அந்நியப்பட்டு நின்ற ஒரு நபரை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எதிர்கொள்கின்றார். ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் போகும் எல்லைப் பகுதியில், அல்லது ஊருக்குள்ளே யாரும் இல்லாத நேரத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது. தொழுநோயாளரின் இரு செயல்களை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்: (அ) முழந்தாள்படியிட்டு - இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றார், அல்லது மரியாதைக்காக அவ்வாறு செய்கின்றார். (ஆ) விண்ணப்பிக்கின்றார் – வழக்கமாக, 'தீட்டு,' 'தீட்டு' என்று கத்த மட்டும்தான் கத்துவர். இங்கே அந்த நபர், 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்கின்றார். தன் விருப்பத்தை அல்லாமல் இயேசுவின் விருப்பத்தை முன்னிறுத்துகின்றார்.
இயேசு அவர்மீது பரிவு கொள்கின்றார். மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்ற இயேசுவின் முதல் உணர்வு இதுதான். இயேசுவின் செயலை முந்திக்கொள்கின்றது இந்த நேர்முக உணர்வு. இவனுக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என நினைத்தால் அது வியாபாரம். இவனுக்கு இதைச் செய்யாவிட்டால் இவனுக்கு என்ன ஆகும் எனக் கேட்பது பரிவு. தொழுநோய் பீடித்த நபரை மையப்படுத்திச் சிந்திக்கின்றார் இயேசு. கையை நீட்டி அவரைத் தொடுகின்றார். அவரைத் தூய்மையாக்குவதற்காகத் தம்மையே தீட்டாக்கிக் கொள்ளத் துணிகின்றார் இயேசு. நலம் பெற்ற நபருக்கு இரு கட்டளைகள் கொடுக்கின்றார்: (அ) யாருக்கும் சொல்ல வேண்டாம். (ஆ) குருவிடம் காட்டிக் காணிக்கையைச் செலுத்தும். இயேசு அந்த நபரை இறைவனோடும் சமூகத்தோடும் நெருக்கமாக்குகின்றார்.
அப்படியாக நெருக்கமான நபர் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் அறிவித்ததால் இயேசு அந்நியமாக்கப்படுகின்றார். வெளியே தனிமையான இடங்களில் தங்கி வருகின்றார்.
தியானிப்போம்: தன்னைப் பற்றி, தான் ஆற்றிய அரும் அடையாளம் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று இயேசு சொல்லக் காரணம் என்ன? இயேசுவின் தன்னடக்கமா? அல்லது மெசியா இரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவா? அல்லது வெளிப்படுத்தும் நேரம் இன்னும் வரவில்லையா? என்னைப் பொருத்தவரையில், இயேசுவை அறிதல் தனிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு இவ்வாறு தடை செய்கின்றார்.
இந்த நிகழ்வு நமக்கு முன் வைக்கும் கேள்விகள் எவை?
(அ) என் வாழ்வில் நான் எந்நிலையில் அந்நியப்பட்டு நிற்கிறேன்? உடல் அளவில், சமூக அளவில், ஆன்மிக அளவில்?
(ஆ) நான் இறைவன் முன் என் விண்ணப்பத்துடன் வரும்போது, அங்கே என் விருப்பத்தை முதன்மைப்படுத்துகிறேனா? அல்லது இறைவிருப்பத்தை முதன்மைப்படுத்துகிறேனா?
(இ) நலிவுற்ற நிலையில் இருக்கும் ஒருவரைக் காணும்போது என் உள்ளத்தில் பரிவு எழுகின்றதா? அல்லது அந்த நபரைப் பற்றிய விமர்சனம் அல்லது ஆய்வு எழுகின்றதா? ஆய்வு அந்நியப்படுத்தும், பரிவு ஒன்றே நெருக்கமாக்கும்!
No comments:
Post a Comment