செவ்வாய், 24 ஜனவரி 2023
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்
எபி 10:1-10. மாற் 3:31-35.
புனித பிரான்சிஸ் சலேசியார்
இன்று நம் தாய்த் திருஅவை புனித பிரான்சிஸ் சலேசியாரின் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு இப்புனிதரின் 400வது பிறந்தநாளை முன்னிட்டு நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மாதம் (டிசம்பர்) 28ஆம் தேதி அன்று, 'தோத்தும் அமோரிஸ் எஸ்த்' ('அனைத்தும் அன்பை நோக்கியே') என்னும் திருத்தூது மடலை வெளியிட்டார். இந்த மடலில் இப்புனிதர் பற்றி முன்வைக்கும் கருத்துகளில் மூன்று என்னை மிகவும் கவர்ந்தன:
(அ) 'எதையும் நிராகரிக்காதே, எதையும் எதிர்பார்க்காதே.' ஆயராக இருந்தபோது துறவியர் இல்லம் ஒன்றுக்குச் செல்கின்ற புனித பிரான்சிஸ் சலேசியார், இவ்விரு வாக்கியங்களையும் மட்டும் சொல்லிவிட்டு தன் உரையை முடித்துக்கொள்கின்றார். தாழ்ச்சி மற்றும் பரந்த உள்ளம் கொண்டு வாழ இவ்வாக்கியங்கள் நம்மை அழைக்கின்றன.
(ஆ) 'ஆசையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.' ஆசை என்பது பல நேரங்களில் எதிர்மறையானதாகப் பார்க்கப்படும் வேளையில், ஆசையின் வழியாகவே இறையன்புக்குச் செல்ல முடியும் என்றும், இறையன்புக்கான முதற்படி இறைவனைப் பற்றியே ஆசையே என்னும் புதிய புரிதலைத் தருகின்றார் புனிதர்.
(இ) 'வாழ்க்கை மற்றும் வேலையின் துள்ளல் கிறிஸ்தவ ஆன்மிகம்.' ஆன்மிகம் என்பது துறவு மடங்களுக்குள் அடைந்து கிடப்பதிலோ, அல்லது பாலைவனத்தில் தனித்திருப்பதிலோ அல்ல, மாறாக, அன்றாட வாழ்க்கையும், நாம் செய்கின்ற வேலைகளையும் துள்ளலுடன் செய்வதில்தான் அடங்கியுள்ளது என்கிறார் நம் புனிதர்.
பொதுநிலையினரின் ஆன்மிக வாழ்வுக்கு அடிப்படையான பல கருத்துகளை முன்வைக்கும் நம் புனிதரைக் கொண்டாடுகின்ற வேளையில், இவரின் ஆன்மிகம் நமதாக இவரே நமக்காகப் பரிந்து பேசுவாராக!
நிற்க.
இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக்கொண்டிருக்க, இயேசுவின் தாயும் சகோதரர்களும் வெளியே அமர்ந்து கொண்டு அவரைக் காணக் காத்திருக்கிறார்கள். இதைக் காணும் கூட்டம், 'அதோ உம் தாயும் சகோதரர்களும் ...' என இயேசுவின் போதனையை இடைமறிக்கிறது.
ஏன் கூட்டம் இயேசுவை இடைமறித்தது?
இயேசுவின் கவனத்தை ஈர்த்து இயேசுவிடம் நல்ல பெயர் வாங்கவா?
அல்லது தாய் மற்றும் சகோதரர்களின் இருப்பைப் பதிவு செய்யவா?
அல்லது தாய் மற்றும் சகோதரர்களை இவர் எப்படிக் கையாளுகிறார் என்று இயேசுவைச் சோதிப்பதற்கா?
காரணம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாக இருந்திருக்க, இயேசுவோ, 'இதோ இவர்கள்' என்று தனக்கு அருகில் இருப்பவர்களைக் காட்டுகின்றார்.
'அதோ அவர்கள்' என்ற நிலையில் இல்லாமல், 'இதோ இவர்கள்' என்ற நிலையில் இருப்பவர்கள்தாம் இயேசுவின் தாயும், சகோதரர்களும். அப்படி என்றால், இயேசு தன் சீடர்கள் முன்னிலையில் தன் தாய் மற்றும் சகோதரர்களை மறுதலித்தாரா? இல்லை. என் தாய் 'அதோ அங்கே' என்று இன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தாலும், இறைத்திருவுளம் நிறைவேற்ற அவர் சொன்ன 'ஆமென்' வழியாக அவர் 'இதோ இங்கே' நிற்கிறார் என்று மரியாளின் நிலையை உயர்த்துவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
'அதோ' என்ற நிலையிலிருந்து 'இதோ' என்ற நிலைக்கு நாம் எப்படிக் கடந்து வருவது?
அதற்கான விடை இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபி 10:1-10) இருக்கிறது. இயேசுவின் ஒரே பலியை மற்ற எல்லா பலிகளையும்விட மேலானதாகக் காட்டும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இன்று அது எப்படி மேலானது என்பதைச் சொல்கின்றார்.
ஆண்டுதோறும் இடைவிடாமல் பலி செலுத்துபவர்கள் ஆடு, வெள்ளாட்டுக் கிடாய்கள், மற்றும் மாடுகளைப் பலி கொடுத்தனர். அப்படிக் கொடுக்கப்பட்ட பலிகளில் ஒரு 'அந்நியத்தன்மை' இருந்தது. அதாவது, பலி கொடுப்பவர், பலிப்பொருள் இவர்கள் இருவரும் வேறு வேறாக இருந்தனர். ஆக, 'அதோ' பலிப்பொருள், 'இதோ' நான் என தங்களையே பலிகளில் இருந்து தூரமாக வைத்துக்கொண்டனர் மற்ற தலைமைக் குருக்கள். இந்த நிலையில், பலி தன்மேல் படாது, இரத்தத்தால் குருவின் உடை அழுக்காகாது, மற்றபடி இப்பலி ஒரு பாதுகாப்பான தூரத்தைக் கொண்டிருக்கும்.
ஆனால், இயேசுவின் பலியில் இந்த அந்நியத்தன்மை மறைகிறது. ஏனெனில், இயேசுவின் பலியில், 'பலிப்பொருளும்,' 'பலி கொடுப்பவரும்' ஒன்றாக இருக்கின்றனர். ஆக, 'இதோ' பலிப்பொருள், 'இதோ' நான் என இயேசு சொல்லும் போது அங்கே தூரம் இல்லை. ஆனால், இவ்வகை பலி ஆபத்து நிறைந்தது. ஏனெனில், பலியின் இறுதியில் பலி இடுபவர் இறந்து போவார். இங்கே பலியிடுபவர் தான் பாதுகாப்பை ரிஸ்க் செய்கிறார். இந்தப் பலி கொடுப்பது இவருக்கு வலிக்கும்.
இந்த இரண்டாம் நிலை பலிதான் இறைவனுக்கு ஏற்புடையதாகின்றது.
ஏனெனில், இங்கே பலியிடுபவரின் உள்ளமும், உடலும் ஒருங்கே நொறுங்குகிறது. ஆக, நொறுங்குகின்ற உள்ளமும், உடலும்தான் இறைத்திருவுளம் நிறைவேற்ற முடியும். தாய்மையை அடையும்போது ஒரு பெண்ணின் உடலும், உள்ளமும் நொறுங்குகிறது. மரியாள், 'ஆமென்' என்று சொன்னபோது, உள்ளத்தில் அவர் கொண்டிருந்த திட்டங்கள் நொறுங்கி, இறைத்திட்டத்திற்கு தன் உடலையும் நொறுக்கினார்.
ஆக, 'அதோ' என்ற நிலை மாறி, இறைவனுக்கு அருகில் 'இதோ' என்று அறிமுகமாக, 'நொறுங்குதல்' அவசியமாகிறது.
No comments:
Post a Comment