சனி, 14 ஜனவரி 2023
எபி 4:12-16. மாற் 2:13-17.
சீடத்துவத்தின் விலை!
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், வரி வசூலித்துக் கொண்டிந்த அல்பேயுவின் மகனாகிய லேவியை (மத்தேயு) இயேசு அழைக்கின்றார். இரண்டாவது பகுதியில், 'என் வீட்டுக்கு வாரும்!' என இயேசுவை அழைக்கின்ற மத்தேயு அவருக்குத் தன் வீட்டில் விருந்தளிக்கின்றார்.
திருத்தூதர்கள் அழைக்கப்படும் நிகழ்வுக்கும் முதல் ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள் அழைக்கப்படும் நிகழ்வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இறைவாக்கினர்கள் அழைப்பு (எ.கா. மோசே, எசாயா, எரேமியா) ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது: (அ) பிரச்சினை அல்லது தேவை, (ஆ) கடவுள் ஒருவரை அழைக்கின்றார், (இ) அழைக்கப்படுபவர் தயக்கம் காட்டுகின்றார், (ஈ) கடவுள் ஓர் அறிகுறி தருகின்றார் அல்லது உடனிருப்பை வாக்களிக்கின்றார், மற்றும் (உ) அழைக்கப்படுபவர் அழைப்பை ஏற்கின்றார்.
திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, மற்றும் யோவான் அழைக்கப்படும் நிகழ்வில் (ஒத்தமைவு நற்செய்திகள்) மற்றும் மத்தேயு அழைக்கப்படும் நிகழ்வில் இக்கூறுகள் காணப்படவில்லை. திருத்தூதர் அழைக்கப்படுகின்றார். தன் அன்றாட பணியில் அவர் ஈடுபட்டிருக்கும்போது அழைப்பு பெறுகின்றார். திருத்தூதர்கள் அழைக்கப்படும் நிகழ்வில் உள்ள கூறுகளை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம்: (அ) ஒருவர் தன் அன்றாட பணியில் ஈடுபட்டிருக்கிறார், (ஆ) இயேசு அங்கே திடீரென்று வருகின்றார், (இ) நபர் அழைக்கப்படுகின்றார், (ஈ) இயேசு மட்டுமே பேசுகின்றார் – அழைக்கப்படுபவர்கள் அமைதி காக்கின்றனர், (உ) அழைக்கப்பட்டவர் அனைத்தையும், அனைவரையும் விட்டு விட்டு இயேசுவின் பின்னால் செல்கின்றார்.
திருத்தூதர்கள் ஏதோ இந்த நாளுக்காகவே காத்திருந்தது போல எழுந்து இயேசுவின் பின்னால் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது.
வரி வசூலித்துக் கொண்டிருந்த மத்தேயு தான் செய்கின்ற தொழில் பற்றி மிகவும் வருந்தியிருப்பார். உரோமையர்கள் சார்பாக தன் இனத்து மக்களிடம் வரி வசூலிப்பது அவருக்கு நெருடலாக இருந்திருக்கலாம். இந்த வேலையை எப்படி விடுவது என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்கூட இயேசு அங்கே வந்திருக்கலாம். 'என்னைப் பின்பற்றி வா!' என்ற சொற்கள் கேட்டவுடன் உடனே புறப்படுகின்றார் மத்தேயு.
தொடர் நிகழ்வாக மத்தேயு தன் இல்லத்திற்கு இயேசுவை அழைத்து விருந்து படைக்கின்றார். மத்தேயு தன் இல்லத்தாருக்கு அளித்த பிரியாவிடை விருந்தாக இருந்திருக்கலாம். எலிசா அழைக்கப்பட்ட போதும் இப்படி ஒரு விருந்து அளிக்கப்படுகின்றது. இயேசுவுக்கு எதிராக பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முணுமுணுக்கின்றனர்: 'இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்'. இந்தச் சொற்கள் இயேசுவை நோக்கி மட்டுமல்ல. மாறாக, மத்தேயுவை நோக்கியும் சொல்லப்படுகின்றன. இயேசுவை அவர் பின்பற்றத் தொடங்கினாலும் அவருடைய இறந்த காலம் என்னவோ அவரை ஒட்டிக்கொண்டே வருகிறது.
இதுதான் சீடத்துவத்துவத்தின் விலை.
'உன் நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள், உன் இறந்தகாலத்தைத் தோண்டி எடுப்பார்கள்' என்ற முதுமொழிக்கேற்ப, மத்தேயுவின் இறந்தகாலம் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகின்றது.
ஆனால், மத்தேயு தன் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை.
சீடத்துவத்துக்கான மத்தேயுவின் பதில்மொழி, 'ஆம்' என்றால் 'ஆம்' என்று மட்டுமே உள்ளது.
முதல் வாசகத்தில், 'நம் தலைமைக் குரு நம் வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல ... அவர் நம்மைப் போல எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டவர்' என முன்மொழிகின்றார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர்.
மத்தேயுவின் வலுவின்மையைத் தன் இரக்கத்தால் தாங்கிக்கொள்கின்றார் இயேசு.
இன்று நம் மண்ணின் மறைசாட்சி புனித தேவசகாயம் அவர்களின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அரச அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சீடத்துவத்துக்காக தன் உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
மத்தேயுவின் நற்செய்தி கேட்டு மனம் மாறியவர் இவர்.
மத்தேயு அன்று சுங்கச் சாவடியை விட்டு வெளியேறியது வெறும் நிகழ்வு அல்ல. கடவுளின் திட்டம்.
சீடத்துவம் சீடத்துவத்தைப் பெற்றெடுக்கிறது என்னும் உண்மையை நாம் இங்கே உணர்கிறோம்.
தியானிப்போம்: திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் சீடத்துவத்தை நமதாக்குகின்றோம். ஆனால், அதற்கேற்ற விலையைத் தர நாம் தயாராக இருக்கிறோமா?
நாம் இன்று விட்டு எழ வேண்டிய சுங்கச் சாவடி எது?
எண்களை எழுதிக் கொண்டிருந்த மத்தேயு இயேசுவின் வரலாற்றை எழுதும் பேறு பெறுகின்றார். தன் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காத தேவசகாயம் இன்று புனிதராக ஒளிர்கின்றார்.
No comments:
Post a Comment