செவ்வாய், 17 ஜனவரி 2023
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்
எபி 6:10-20. மாற் 2:23-28.
சட்டத்தைத் தாண்டி
'சாபத்' (எபிரேயத்தில், 'நிறுத்து') – ஓய்வுநாள் - கடவுளால் ஏற்படுத்தப்படுகிறது. ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க விவிலியம் இரு காரணங்களை முன்னிறுத்துகிறது: ஒன்று, விடுதலைப் பயண நூலின்படி, ஆண்டவர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால், இஸ்ரயேல் மக்களும் ஏழாம் நாள் ஓய்ந்திருக்க வேண்டும். இரண்டு, இணைச்சட்ட நூலின்படி, எபிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பார்த்து ஏழாம் நாளில் ஓய்ந்திருக்க வேண்டும். முதல் காரணம் வழிபாடு சார்ந்ததாகவும், இரண்டாவது காரணம் சமூகக் காரணமாகவும் உள்ளது.
இயேசுவின் சமகாலத்தில் ஓய்வுநாளில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னும் பட்டியலை ரபிக்கள் வகுத்திருந்தனர். எடுத்துக்காட்டாக, ஓய்வு நாளன்று பெண் கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது என்பது ஒரு சட்டம். ஏனெனில், அப்படி முகம் பார்க்கும்போது தலையில் உள்ள நரைமுடி ஒன்று தன் கண்ணில் பட்டு அதைப் பிடுங்குமாறு அல்லது ஒதுக்குமாறு கையை உயர்த்தினால் அது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவது ஆகும். இன்றும், இஸ்ரேல் நாட்டில் உள்ள சில ரபிக்கள் பள்ளிகளில் ஓய்வுநாள் சட்டங்கள் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு பள்ளியின் கருத்துப்படி, ஓய்வுநாளன்று டாய்லட்டில் பயன்படுத்தப்படும் தாளைக் கிழிப்பதும் ஓய்வுநாளை மீறுவது ஆகும். அதற்கு முந்தைய நாளே தாள்களைக் கிழித்து வைத்துக்கொள்ளுமாறு அந்தப் பள்ளி வலியுறுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளன்று கதிர்களைக் கொய்து உண்கின்றனர். நற்செய்திப் பகுதிகளை வாசிக்கும்போது இயேசுவின் சீடர்கள் எப்போதும் உணவு பற்றிய அக்கறையிலேயே இருந்தது போலத் தெரிகிறது. அதாவது, நோன்பு இருக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்கின்றனர். இயேசு மக்கள் கூட்டத்தோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களை அனுப்பிவிட்டு உணவருந்த வருமாறு சொல்கின்றனர். இறுதியில் பாஸ்கா உணவை உண்ண எங்கே ஏற்பாடு செய்வது எனக் கேட்கின்றனர்.
சீடர்கள் ஓய்வுநாளை மீறியதாக இயேசுவிடம் சுட்டிக் காட்டுகின்றனர் பரிசேயர்கள். ஆனால், இயேசுவோ அவர்களைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்களுக்காக வாதாடுகின்றார். இந்த நிகழ்வைப் பயன்படுத்தி தான் யார் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விழைகின்றார். இயேசு யார்? தாவீதின் வழிமரபினர். தாவீது சட்டத்தை மீறியது போல, இயேசுவும் ஓய்வுநாள் சட்டத்தை மீறுகின்றார். மேலும், தம்மை, 'மானிட மகன்' என்றும் அழைத்து, ஓய்வுநாளைத் தனக்குக் கீழ்ப்படுத்துகின்றார்.
தியானிப்போம்: யூத வழிபாடுகளையும் சடங்கு முறைகளையும் இயேசு கடந்து செல்வதாகப் பதிவு செய்கின்றார் மாற்கு. தங்களின் தான்மை அல்லது அடையாளம் பற்றி வியந்து கொண்டிருந்த முதல் கிறிஸ்தவர்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்.
இன்றைய பகுதி தரும் பாடங்கள் எவை?
நாமும் சட்டத்தைத் தாண்டிச் செல்ல அழைக்கப்படுகின்றோம். பரிசேயர்கள் சீடர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனித்தார்களே அன்றி, இயேசு யார் என்பதை அறிந்துகொள்ள முற்படவில்லை. வெளிப்புறக் கவனச் சிதறல்கள் இயேசுவை அறிந்துகொள்ள நம்மை அனுமதிப்பதில்லை.
இன்று நாம் புனித பெரிய அந்தோனியாரின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். புனித அகுஸ்தினார் தன் ஒப்புகைகள் நூலில் பெரிய அந்தோனியாரின் மனமாற்றத்தின் மேன்மை பற்றி எழுதுகின்றார். ஒரு வகையில் பெரிய அந்தோனியாரே அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குத் தூண்டுகோலாக அமைகின்றார். தான் கேட்ட நற்செய்திச் சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டு துறவறம் ஏற்றவர் பெரிய அந்தோனியார். இறைவார்த்தையால் நாமும் தூண்டப்பட அவரே நமக்காகப் பரிந்து பேசுவாராக!
No comments:
Post a Comment