Friday, June 5, 2020

எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

இன்றைய (6 ஜூன் 2020) முதல் வாசகம் (2 திமொ 4:1-8)

எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் காணிக்கையாகப் போட்ட ஏழைக் கைம்பெண்ணை வாழ்த்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நம் ஊரில், மேலமடையில் உள்ள முடிதிருத்தும் தொழில் செய்யும் ஒருவரின் மகள் தன் படிப்பு மற்றும் திருமணத்திற்கென தன் தந்தை சேமித்து வைத்த ரூபாய் ஐந்து லட்சத்தை தன் ஊரின் நலனுக்காக செலவிட்டதால், நம் தாய்த்திருநாடு அவரை ஐநா தூதராக நியமித்து வாழ்த்திக்கொண்டிருக்கிறது.

ஏழைக் கைம்பெண் எருசலேம் ஆலயத்தில் செய்ததும்,

மேலமடை இளவல் கொரோனா காலத்தில் தன் ஊரில் செய்ததும்

மிகவும் பாராட்டுதற்குரியதே.

ஏழைக் கைம்பெண்ணைப் போல நாமும் உள்ளதை எல்லாம் கொடுக்க வேண்டும் என்று நம் ஆலயங்களும், மேலமடை இளவலைப் போல நாம் நம் நாட்டிற்காக அனைத்தையும் இழக்க வேண்டும் என்று நம் அரசியல் தலைவர்களும் பேசிக்கொண்டிருக்கின்றன(ர்).

நிற்க.

இயேசுவின்மேல் கோபத்தை வரவழைக்கும் பாடங்களில் இன்றைய நற்செய்திப் பாடமும் ஒன்று. ஏன்? இன்றைய நற்செய்தி வாசகத்தின் முன்பகுதியில், இயேசு மறைநூல் அறிஞர்களைக் கடிந்துகொள்கின்றார்: 'நீங்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறீர்கள்' என்று சாடுகின்றார். அதே வேளையில், கைம்பெண் காணிக்கை இடுவதைப் பாராட்டுகின்றார். இரண்டிற்கும் உள்ள முரண் உங்களுக்குப் புரிகிறதா? மறைநூல் அறிஞர்கள் நேருக்கு நேராக நின்று கைம்பெண்ணின் உடைமையைப் பறிக்கிறார்கள். ஆலயத்தில், குருக்கள் மறைமுகமாக நின்று கைம்பெண்ணின் இறுதிக் காசுகளையும் பறித்துக்கொள்கிறார்கள்.

'கைம்பெண்ணின் கடைசிக் காசையும் பிடுங்கிக் கொள்கிற உங்கள் ஆலயம் சபிக்கப்படுக!' என்றல்லவா இயேசு சொல்லியிருக்க வேண்டும்?

'இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள்' என்று தன் உடலை ஆலயமாக்கியவர், 'நீங்கள் இந்த மலையிலோ, அந்த மலையிலோ அல்ல, மாறாக, ஆவியிலும் உண்மையிலும் வழிபட வேண்டும்' என்று சொன்னவர், ஏன் இந்த வழிபாட்டுத்தலத்தில் காணிக்கைகள் இடப்படுவதை எதிர்க்கவில்லை?

என்னைப் பொறுத்தவரையில், கைம்பெண் காணிக்கையிடும் நிகழ்வை, பிற்காலத்தில் யாரோ ஒரு குரு எழுதி, 'காணிக்கை போடுவதை, அதிலும் முழுவதும் போடுவதை' நியாயப்படுத்த அதை நற்செய்திப் பகுதிக்குள் நுழைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மேலமடை நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.

'பிரதம மந்திரி அக்கறை கொள்கிறார்' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட உண்டியலில் எவ்வளவோ கோடிகள் விழுந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரதமரும், நிதியமைச்சரும் இருபது இலட்சம் கோடிகளை அள்ளி இறைக்க, ஒரு இளவல் தன் படிப்புக்கென சேர்;த்து வைத்ததையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய இந்த அரசு எந்திரத்தையும், சமூக அமைப்பையும் நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா?

ஒரு அபலைப் பெண் தனக்கென வைத்திருந்த அனைத்தையும் இழந்துதான் இந்த நாட்டின் வறுமை போக்க வேண்டும் என்றால், வறுமை போக்கப்படுதல் என்ன நாம் கேட்க வேண்டிய இரவலா? அது நம் உரிமை இல்லையா?

ஏழைகள் கொடுத்தலை உயர்த்திப் பேசுதலும், அவர்களின் தியாகத்தை உயர்த்திப் பேசுதலும் கார்ப்பரெட் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவும் அதே அரசியலை எருசலேம் ஆலயத்தில் செய்தார் என்று நினைக்கும் போது நமக்கு வேதனை அளிக்கிறது.

எருசலேம் ஆலயத்தில் ஆடு, மாடு, புறா விற்பவர்களை விரட்டி அடித்த இயேசு, இந்தப் பெண்ணை ஏன் விரட்டியடிக்கவில்லை? 'போம்மா! போய்! இந்தக் காசை வைத்து உன் பிழைப்பைப் பார்!' என்று ஏன் சொல்லவில்லை? அல்லது காணிக்கைப் பெட்டியை உடைத்துப் போட்டு, அதில் உள்ளவற்றை எல்லாம் அள்ளிக் கொடுத்து, 'இந்தா! இதை வைத்துக்கொண்டு நீ நல்லா இரு!' என்று ஏன் சொல்லவில்லை?

கொரோனா காலத்தில், எங்கள் இல்லத்தில் தனியாகவோ, குழுவாகவோ திருப்பலி நிறைவேற்றும்போதெல்லாம் எனக்குள் ஒரு எண்ணம் நெருடலாகவே இருக்கின்றது:

திருப்பலியின் நடுவில், காணிக்கை ஒப்புக்கொடுக்கும்போது, 'நிலத்தின் விளைவும், மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தையும், திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்' என்று சொல்லும்போது, 'இங்கே என் உழைப்பு இல்லையே!' என்ற எண்ணமும், 'ஏதோ ஒரு கைம்பெண்ணின் கடைசிக் காசு உழைப்பை நான் இங்கே ஓய்வாக அமர்ந்துகொண்டு ஒப்புக்கொடுக்கிறேனே!' என்ற எண்ணமும் எனக்கு நெருடலைத் தருகின்றன.

கைம்பெண்ணின் செயல் கடவுளின்மேல் உள்ள கோபமாகக் கூட இருக்கலாம்: 'இந்தா! என் கணவனை என்னிடமிருந்து பிடுங்கினாய்! என் வீட்டை உன் மறைநூல் அறிஞர்கள் பிடுங்கிக் கொண்டனர்! இதோ! என் கடைசிக் காசுகள்! இவற்றையும் நீ எடுத்துக்கொள்!' என்று அவள் தூக்கி எறிந்திருக்கலாம்.

மேலமடை இளவலும், 'இந்தா! அரசே! வரி விதித்தாய்! ஏழைகளை நசுக்கினாய்! பொய்யான வாக்குறுதிகள் தந்தாய்! கொரோனாவிலும் ஊழல் செய்தாய்! இதோ! நீ என்னிடமிருந்து இதையும் பறிக்குமுன், நானே உனக்கு கொடுக்கிறேன்!' எனக் கொடுத்திருக்கலாம்.

இருவரும் பாராட்டுதற்குரிவர்கள்!

இவர்களை இப்படிச் செய்யும் நிலைக்குத் தள்ளிய சமய மற்றும் அரசியல்அமைப்புக்கள் கண்டனத்திற்குரியவை!


2 comments:

  1. இப்படி ஒரு கோணத்தில் எப்படி யோசிக்க முடியும்? எனக்கேள்வி எழுகிறது தந்தையின் பதிவை வாசித்த பிறகு. தங்களின் வாழ்வாதாரத்திற்கே வெறுங்கையை முழம் போடுபவர்களை அடுத்தவரின் பசி போக்கத் தங்களின் கைகளை நீட்ட வைத்ததற்காக கொரோனாவையும்,அரசாங்கங்களையும் தந்தை கடிந்து கொள்வது நியாயம் தான்; ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.. ஆனால் தன் மீதும் தன் ஆளுமையின் மீதும் நம்பிக்கை வைத்தது மட்டுமின்றி,”தன் எதிர்காலத்திற்கு தன்னால் உழைத்து சேர்த்துக்கொள்ள முடியும்; இன்று கவனிக்கப்பட வேண்டியவர்கள் என் மக்களே” என்று தனக்காக சேமித்த பெற்றோரைத் தூக்கிக்கொடுக்க வைத்த மேலமடை இளவலையும், தன் கணவன் தன்னைவிட்டுப்போன நிலையிலும் தன்னிடமிருந்த கடைசி சல்லியையும் உண்டியலிட்ட கைம்பெண்ணின் செய்கையையும் நாம் எவ்வாறு வேறு கோணத்தில் பார்க்க இயலும் தெரியவில்லை.

    காணிக்கையின்போது குருவானவர் குறிப்பிடும் ‘உழைப்பின் பயன்’ அந்த நேரத்தில் குருவின் கையில் இல்லை என்பதற்காக உழைப்பே இல்லை என ஆகிவிடுமா என்ன? அது மட்டுமில்லை...அந்த உழைப்பு என்பது திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அனைவரையும் மனத்தில் வைத்து சொல்வதல்லவா? தந்தையின் மனத்தில் நிநாயமான கோபங்கள் இருக்கலாம்.ஆனால் அதைப் பிரதிபலிப்பதற்குத் தகுதியானவர்கள் மேலமடை இளவலும்,விவிலியத்தின் கைம்பெண்ணுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது..தந்தை என்னை மன்னிப்பாராக! ஆனாலும் ஒரு உண்மை பொய்யாவதும்...பொய் உண்மையாவதும் நம் சிந்தனைத்திறனில் தான் இருக்கிறது என எடுத்துக்காட்டிய தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. யதார்த்தமான......
    உருக்கமான பதிவு.....🙏

    ReplyDelete