Thursday, June 18, 2020

இயேசுவின் இதயம்

இன்றைய (19 ஜூன் 2020) திருவிழா

இயேசுவின் இதயம்

இன்றைய நாளில் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

ஒரு கேள்வி:

'நீங்க கடைசியா உங்க இதயத்தை என்றைக்கு நினைத்துப் பார்த்தீர்கள்?'

'இதயம்' என்பது இங்கே 'அன்பு செய்பவர்' அல்லது 'காதலி' அல்லது 'காதலன்' அல்லது 'நண்பர்' என்னும் உருவகப் பொருளில் அல்ல. மாறாக, நேரடிப் பொருளில் கையாளப்பட்டுள்ளது.

நாம் என்னைக்காவது நம் இதயத்தை நினைச்சுப் பார்க்கிறோமா?

மிக மிக அரிது என்றே நினைக்கிறேன். ஆனால், அந்த ஓர் உறுப்பு இல்லை என்றால் உயிர் இல்லை என்றாகிவிடுகிறது.

இயேசுவின் இறுதிநாள்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் என்னை எப்போதும் ஈர்ப்பதுண்டு:

ஒன்று, தன்னுடைய நினைவாக இயேசு நற்கருணையை ஏற்படுத்துகின்றார். அந்த நற்கருணையை உணவில் ஏற்படுத்துகின்றார். இந்தக் கலரில் அல்லது இந்த இடத்தில் அல்லது இந்த செய்முறையில் அல்லது இந்த அடையாளத்தில் என அல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவை முன்னிறுத்தி நற்கருணையை ஏற்படுத்துகின்றார்.

இரண்டு, சிலுவையில் அவர் தொங்கியபோது, தன்னுடைய இறுதிச் சொட்டு இரத்தத்தையும் தண்ணீரையும் நமக்காக விட்டுச் சென்று, நம்மேல் அவர் கொண்ட இறுதிவரை அன்பை உறுதி செய்கின்றார்.

யோவான் நற்செய்தியாளர் மட்டுமே இந்நிகழ்வைப் பதிவு செய்கின்றார்:

'படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.' (காண். யோவா 19:34)

இரத்தமும் தண்ணீரும் பற்றி நிறைய விளக்கம் தரப்படுவதுண்டு.

இயேசுவின் இதயம் இறுதியில் திறக்கப்பட்டபோது அங்கிருந்த இரத்தமும் தண்ணீரும் வெளியேறியதால் என்ன ஆயிற்று?

கடவுளின் இதயம் வெறுமை ஆயிற்று. ஆகவே, அங்கே உங்களுக்கும் எனக்கும் இடம் இருக்கிறது.

மீட்பரின் திறந்த இதயத்தை நாம் காணும் போதெல்லாம் அதை நோக்கி இழுக்கப்படுகின்றோம். ஏனெனில், நம் இறுதி இலக்கு அதுவே.

புனித அகுஸ்தினார் குறிப்பிடுவதுபோல, 'நாங்கள் செய்கின்ற அன்பு எல்லாமே உம்மை அன்பு செய்வதற்காகவே. நாங்கள் மேற்கொள்ளும் எல்லாப் பயணங்களுமே உம்மை வந்தடைவதற்கே. உம்மில் அமைதியைக் காணும் வரை அமைதியற்ற எங்கள் இதயங்கள் அமைதியைக் காண்பதில்லை.'

இயேசுவின் திருஇருதயத் திருநாள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் இதுதான்:

அவருடைய இதயத்தை நோக்கி நான் செல்ல வேண்டும். என் இதயமும் அவருடைய இதயம் போல வெறுமையாக்கப்பட்டு இறைவனுக்காகவும் மற்றவர்களுக்காகவும் திறக்கப்பட வேண்டும்.

1 comment:

  1. என்னே தந்தையின் விளக்கம்! “இறுதியில் இயேசுவின் இதயத்திலிருந்து இரத்தமும்,தண்ணீரும் வெளியேறியதால்....அந்த வெறுமையான இதயத்தில் நமக்கு இடம் உண்டாயிற்று.” நமது இறுதி இலக்கான அந்த இதயத்தை நாம் தினமும் நினைவு கூற...நாம் உண்ணும் உணவு வடிவில் நற்கருணையை ஏற்படுத்தியது கிறிஸ்துவத்துக்கு மட்டுமே சொந்தமான ஒரு விஷயம். அவரின் இதயத்தை நோக்கி நான் செல்ல வேண்டுமெனில் ஒரே கண்டிஷன்.... என் இதயமும் வெறுமையாக்கப்பட்டு இறைவனுக்காகவும்,மற்றவர்களுக்காகவும் திறக்கப்பட வேண்டும் என்கிறார் தந்தை.

    இதை உறுதி செய்கின்றன புனித அகுஸ்தினாரின்” நாங்கள் செய்கின்ற அன்பு எல்லாமே........எங்கள் இதயங்கள் அமைதியைக் காண்பதில்லை”... எனும் வரிகள்...

    இயேசுவின் திரு இருதயமே! என் இதயமும் உம் இதயம் போலாகத் துணைபுரியும்!.....இனி இதுவே என் வேண்டலாக இருக்கட்டும்!

    தந்தைக்கும்,அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete