Tuesday, June 2, 2020

இலக்கியப் பேனா

இன்றைய (3 ஜூன் 2020) நற்செய்தி (மாற் 12:18-27)

இலக்கியப் பேனா

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் வருகின்ற சதுசேயர், 'ஒரு பெண்ணும் ஏழு சகோதரர்களும்' என்ற கேள்வியைத் தொடுத்து, இயேசுவைச் சிக்க வைக்க விரும்புகின்றனர்.

இந்த நிகழ்வை பெண்ணின் கோணத்திலிருந்து சிந்திப்போம்.

இந்த நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு இயேசுவின் மேலும், சதுசேயர்கள் மேலும் கோபம் வருவதுண்டு. ஏன்?

'ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் முடிக்கப்படுகிறது. கணவன் இறந்துவிடுகிறான். குழந்தை இல்லை. கணவனின் தம்பி அவளை மணக்க வேண்டும். இப்படி அவளை ஏழு முறை மணந்துகொண்டே இருக்க வேண்டும்.'

விவிலியத்தில் மட்டுமல்ல, இலக்கியத்தில் வரும் பெண்கள் எல்லாருமே - அதாவது, 'கெட்ட பெண்கள்'  அல்லது 'விநோத பெண்கள்' என்று சொல்லப்படுகின்ற ராகாபு, சூசன்னா, அல்லது விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் போன்றவர்கள் தவிர - ஆணோடு சேர்ந்த உறவில்தான் சொல்லப்படுவார்கள்.

'யோசேப்பின் மனைவியான மரியா'

'சக்கரியாவின் மனைவியான எலிசபெத்து'

'எல்கானாவின் மனைவி அன்னா'

'உரியாவின் மனைவி பெத்சபா'

'நகோமியின் மருமகள் (மகனின் மனைவி) ரூத்து'

'பிலாத்துவின் மனைவி'

'இப்தாவின் மகள்'

'சிம்சோனின் தாய்'

அது போல, எதிர்மறையாக,

'அவள் ஆண் தொடர்பு அறியாத கன்னி' போன்றவை.

ஏன்? பெண் என்றாலே ஆணைக் கொண்டுதான் அவளுடைய தான்மை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? மகள், மருமகள், மனைவி, தாய் என்ற உறவு நிலைகள் இல்லாமல், வெறும் 'பெண்' இருக்க முடியாதா?

இதை இயேசு சதுசேயர்களிடம் கேட்டிருக்கலாம்.

இரண்டாவதாக, பெண் என்றால் கணவனுக்கு அல்லது கணவனுக்காக குழந்தை பெறும் எந்திரமா? ஒருவேளை கொழுந்தனை அவள் மனதளவில் விரும்பவில்லை என வைத்துக்கொள்வோம். அந்தத் திருமணம் செல்லுபடியாகுமா? ஒரு திருமணத்தின் நோக்கம் குழந்தை பெறுதல் என்றால், திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாமே?

இதையும் இயேசு கேட்கவில்லை.

மூன்றாவதாக, அப்படி அந்தப் பெண்ணை கொழுந்தன் மணமுடிக்கலாம் என்று சொல்கின்ற சட்டம், பெண்ணின் சம்மதத்தைக் கேட்க வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை?

இதையும் இயேசு கேட்டிருக்கலாம்.

நான்காவதாக, மறுஉலகிலும் அவள் மீண்டும் அதே குடும்பத்தாருக்கு மனைவியாக வேண்டுமா? அப்படி என்றால், மறுவுலகத்திலும் அவளுக்கு அநீதிதான் இழைக்கப்படுமா?

இதையும் இயேசு கேட்கவில்லை.

நிற்க.

இந்நிகழ்வின் பதிவைப் புரிந்துகொள்ள, 'இலக்கியப் பேனா' ('Literary Pen') என்ற கருத்துருவைப் புரிந்துகொள்வோம். அது என்ன இலக்கியப் பேனா?

நான் ஒரு நல்ல புத்தகம் எழுதி, அந்தப் புத்தகத்திற்கு பாராட்டு விழா நடக்கிறது என வைத்துக்கொள்வோம். எனக்கு நடைபெற்ற பாராட்டு விழா பற்றி அடுத்த நாள் தி இந்து தமிழ் திசை என்னை வாழ்த்தி செய்திக்குறிப்பு வெளியிடுகிறது.

இங்கே, எனக்கு பாராட்டு இரண்டு முறை நடக்கிறது. ஒன்று, அந்த நிகழ்வில். இரண்டு, செய்தித்தாளில். செய்தித்தாளில் இந்த நிகழ்வை நடத்திக் காட்டுவது 'இலக்கியப் பேனா.' இதே 'இலக்கியப் பேனா' என்னை வாழ்த்தவும் செய்யலாம், என்னை திட்டவும் செய்யலாம், என்னைக் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம்.

'பெண்களுள் நீர் பேறுபெற்றவர்' - இதை முதலில் வாழ்த்தாகச் சொல்பவர் கபிரியேல். அதையே இரண்டாம் முறையாக வாழ்த்தாகச் சொல்வது லூக்காவின் இலக்கியப் பேனா.

'அவன் அவளை பன்னிரெண்டு துண்டுகளாக வெட்டினான்' (நீத 19) என்று சொல்லப்படும்போது, அந்த அபலைப் பெண்ணை முதலில் வெட்டுபவன் அவளுடைய கணவன். ஆனால், அதைவிட கொடூரமாக இரண்டாம் முறை வெட்டுவது ஆசிரியரின் இலக்கியப் பேனா.

ஆக, இலக்கியப் பேனா கொண்டு பெண்ணை வாழ்த்தவும் முடியும், வெட்டி வீழ்த்தவும் முடியும். எனவே, பேனா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வு வாசிக்கப்படும்போது, அதன் வாசகர் தன் மூளையில் அந்தப் பெண்ணை வெட்டுகின்றார்.

வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண் ஒவ்வொரு வாசகரின் மூளையிலும் வன்புணர்வு செய்யப்படுகிறாள். அப்படியே கொல்லப்பட்டவர், திருடப்பட்டவர் அனைவரும்.

இந்த 'இலக்கியப் பேனா' நமக்குச் சொல்வது என்ன?

நான் அடுத்தவரைப் பார்க்கும் பார்வைதான் என் இலக்கியப் பேனா. அதைக் கொண்டுதான் நான் என் மூளையில் அடுத்தவரைப் பற்றிய பதிவுகளை எழுதுகிறேன்.

'அவள் என்பவள் அவள்' - இது எதார்த்தம்.

'அவள் அப்படித்தான்' - இது இலக்கியப் பேனா.

நம் இலக்கியப் பேனாக்கள் மற்றவரின் தன்மதிப்பையும் மாண்பையும் குறைக்கிறது என்றால் அதை மூடி வைப்பதும், அல்லது அதன் நிப்பை உடைத்துவிடுவதும் நலம்.

நற்செயல்: யாரோ ஒருவரின் இலக்கியப் பேனாவில் நானும் ஒரு வில்லன் என்று உணர்தல்.

1 comment:

  1. மகிழ்ச்சியாக இருக்கிறது.பெண்கள் என்றாலே பாவப்பட்ட ஜென்மங்கள்,போதைப்பொருட்கள்...இப்படி எத்தனை எத்தனையோ எதிர்மறைப்பெயர்கள் இருக்க அவற்றைத்தவறு என அறுதி இட்டுக்கூறி இயேசுவுக்கு எதிராக கொடிபிடிக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்.” இலக்கியப்பேனா” முற்றிலும் புதிய வார்த்தை.எதார்த்தத்திற்கு நேர்மறையாக வருவது தான் இந்த இலக்கியப்பேனாவெனில் அது நித்தம் நித்தம் எத்தனை பெண்களை உயிரோடு சவமாக்கும் என்பது யோசிக்கப்பட வேண்டிய கட்டாயம்.

    ஆனால் ஒன்று....யாரோ ஒருவருக்கு எதிராக எழுவது மட்டுமே இலக்கியப் பேனாவா? எத்தனை எத்தனை முறை உண்மையைப்புரிந்து கொள்ளாமலே பெண்களையும் ஏன் ஆண்களின் தன்மதிப்பையும்,மாண்பையும் கூடக் குறைக்கிறோம்.அதையும் மனத்தில் கொண்டு நம் மனமென்னும் பேனாக்களையும் அப்பப்போ கொஞ்சம் மூடிவைப்போம்.
    இன்றையத் தேவையான ஒரு புது கருத்து.எல்லாவற்றையுமே மாத்தி யோசிக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete