Wednesday, June 3, 2020

உன்மேல் அன்பு

இன்றைய (4 ஜூன் 2020) நற்செய்தி (மாற் 12:28-34)

உன்மேல் அன்பு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்கின்றார். வாசகத்தின் இறுதியில், இறைஅன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகள் முதன்மையான கட்டளைகளாக வைக்கப்படுகின்றன.

ஆனால், இவ்விரண்டு கட்டளைகளுக்கும் இடையே ஒரு கட்டளை இருக்கிறது. அதை நாம் பல நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அது என்ன?

'உன்னை அன்பு செய்வது போல'

ஆக, அன்பு என்ற வார்த்தையின் அடிப்படையில் பார்த்தால், இங்கே, 'இறைஅன்பு,' 'தன்அன்பு,' 'பிறரன்பு' என மூன்று அன்புக்கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன.

கடவுளை எப்படி அன்பு செய்ய வேண்டும்? முழு இதயத்தோடு, உள்ளத்தோடு, மனத்தோடு, ஆற்றலோடு.

மற்றவர்களை எப்படி அன்பு செய்ய வேண்டும்? அவர்களையும் இப்படித்தான் அன்பு செய்ய வேண்டும். ஆனால், அதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார் இயேசு: 'உன்னை நீ அன்பு செய்வது போல.'

நான் என்னையே எப்போதாவது கொஞ்ச இதயத்தோடு, உள்ளத்தோடு, மனத்தோடு, ஆற்றலோடு அன்பு செய்வேனா? இல்லை. நம் உடல் இயல்பாகவே தன்னைக் காத்துக்கொள்ளும் திறன் கொண்டது. எப்படி?

எனக்கு நெருக்கமான நண்பன் என் கண்களை நோக்கி ஒரு குச்சியை நீட்டினால், என் கண்கள் இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஏன்? அது கண் தன்னைப் பாதுகாக்க செய்கின்ற ஓர் அனிச்சை செயல். குத்துவது நம் நண்பன், ஆக, நம் கண்கள் திறந்திருக்கட்டும் என்று அது நினைக்காது. இயல்பாகவே நாம் தன்மையம் கொண்டவர்கள். நம் உடலில் இருக்கின்ற ஜீன்கள் அனைத்தும் தன்னலம் நிறைந்தவை. இது தன்னலம் அன்று. தன்அன்பு.

நாம் விமானத்தில் பயணம் செய்யும்போது அங்கே செய்யப்படும் அறிவிப்பைக் கேட்டிருப்போம்: 'ஆகாயத்தில் பறக்கும்போது காற்றழுத்தம் மாறுபாடு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் குறைந்தால் உங்கள் தலைக்கு மேலிருந்து ஆக்ஸிஜன் மாஸ்க் விழும். முதலில் நீங்கள் அணிந்துவிட்டு, பின் மற்றவருக்கு அணிய உதவுங்கள்.'

ஆகாய விமானங்கள் தியாகம் பற்றியோ, தன்னலமற்ற அன்பு பற்றியோ பேசுவதில்லை. அவை ப்ராக்டிக்கலாக பேசுகின்றன. ஆக, தன்னை அன்பு செய்யும் ஒருவர்தான் பிறரை அன்பு செய்ய முடியும். எனக்கு எது தேவை என்று எனக்கே தெரியாமல் நான் இன்னொருவரின் தேவையை எப்படி அறியவோ, நிறைவேற்றவோ முடியும்?

ஆக, தன்அன்பு மிக மிக அவசியம்.
தன்அன்பு வேறு, தன்னலம் வேறு என்று சிலர் சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒருவர் தன்னலமாகவும், தன்அன்பு கொண்டவராகவும் இருந்தால் என்ன தவறு?

உளவியலில் 'உள்ளக் குழந்தை நலம்' (...) என்று ஒரு சிகிச்சை உண்டு. அதாவது, நம் உள்ளம் ஒரு குழந்தைபோல இருக்கும். அந்தக் குழந்தையை நாம் அன்பு செய்தால்தான், அதை நாம் மன்னித்தால்தான், அதை நாம் குணப்படுத்தினால்தான் நாம் நன்றாக வாழ முடியும்.

இந்தக் குழந்தையை நலப்படுத்துவதன் தொடர்முயற்சியே தன்அன்பு.

தன்அன்பு செய்வது எப்படி?

1. தன்னறிவோடு இருத்தல்

நான் இப்போது என்ன சிந்திக்கிறேன், உணர்கிறேன், பேசுகிறேன் என்ற விழிப்புநிலையும், தன்னறிவும் அவசியம். தன்அன்பு கொண்டிருப்பவர்கள் தங்களை முழுமையாக அறிந்திருப்பர்.

2. உன் ஆசையைப் பொறுத்து அல்ல, உன் தேவையைப் பொறுத்துச் செயல்படு.

ஆசை நம்மை அலைய வைக்கும். தேவை நம்மை ஒருமுகப்படுத்தும். இதைச் செய்யணும், அதைச் செய்யணும், அங்கே போகணும், இங்கே போகணும் என்பவை எல்லாம் ஆசைகள். இவற்றின் பின் சென்றால் நாம் அலைக்கழிக்கப்படுவோம், நம் ஆற்றல் விரயமாகும். ஆனால், 'இது தேவையா எனக்கு?' என்று கேட்பது நம் பயணத்தை ஒருமுகப்படுத்துவதோடு நம் ஆற்றலையும் சேமிக்கும்.

3. தன்மேல் அக்கறை

என் தேவைகள் பற்றி நான் அக்கறையாக இருக்க வேண்டும். எனக்குத் தேவையான உணவு, உடை, உறக்கம், உடல்நலம், உடற்பயிற்சி பற்றி நான் அக்கறையாக இருக்க வேண்டும்.

4. வரையறைகளை வைத்துக்கொள்ளுங்கள்

எனக்கென்று ஒரு எல்கை அல்லது வரையறையை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்த எல்கை அல்லது வரையறைக்குள் நான் யாரையும் அத்துமீறல் செய்ய விடக்கூடாது. அப்படிச் செய்தால் என் தன்னுரிமையும், என் சுதந்திரமும் போய்விடும். மேலும், நான் மற்றவரின் எல்கையையும் மதிக்க வேண்டும். தனக்கு எல்கை வகுக்கத் தெரிந்த ஒருவரால்தான் அடுத்தவரின் எல்கையையும் மதிக்க முடியும். என்னை மீறி என்னைக் காயப்படுத்த நான் யாருக்கும், எதற்கும் அனுமதி தரக்கூடாது.

5. தன்னையே பாதுகாத்தல்

ஆங்கிலத்தில், 'ஃரனிமிஸ்' என்று ஒரு வார்த்தை உண்டு. இவர்கள் ஃரண்ட்ஸ் போல இருப்பார்கள். ஆனால, நாம் எப்போது எதிலாவது சிக்கிக்கொள்வோம் என்று காத்திருந்து மகிழ்வார்கள். இவர்களிடமிருந்து விலகி நிற்பதுதான் தன்னையே காத்துக்கொள்தல்.

6. தன் மன்னிப்பு

நான் மற்றவர்களை மன்னிக்குமுன் என்னை முழுமையாக மன்னிக்க வேண்டும். எனக்கு நானே வரையறைகளை வகுத்து, அதை மீறியதற்காக என்னையே தண்டித்துக்கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டாக, நாளை நான் விரதம் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். ஆனால், ஏதோ ஒரு மறதியில், அல்லது சூழலில் விரதத்தை மீறிவிடுகிறேன். உடனே நான், 'ஐயோ! நான் எதற்கும் தகுதியில்லாதவன். சிறிய விடயத்திலேயே என்னால் பிரமாணிக்கமாக இருக்க முடியவில்லை. பெரிய விடயத்தில் எப்படி இருப்பேன்? எனக்கு தன்நம்பிக்கை இல்லை' என்று சொல்லி, கத்தியால் கீறிக்கொள்ளவோ, என்னையே மீண்டும் வருத்திக்கொள்ளவோ கூடாது. 'நான்தான மீறினேன். நான் என்னை மன்னிக்கிறேன்' என்று நான் என்னை நானே மன்னிக்க வேண்டும்.

7. இலக்குடன் வாழ்தல்

ஒவ்வொன்றைச் செய்யுமுன், நான், 'ஏன்?' என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். 'இவரிடம் நான் ஏன் பேசுகிறேன்?' 'இப்போது கடைக்கு ஏன் செல்கிறேன்?' 'ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறேன்?' 'ஏன் அமைதியாக இருக்கிறேன்?' இதுதான் இலக்குடன் வாழ்தல். வாழ்வின் இலக்குகள் சிறியவற்றில்தான் இருக்கின்றன. 'முட்டாள்தனம் என்பது ஒரே செயலை திரும்பச் செய்து வேறு விளைவை எதிர்பார்ப்பது' என்பார். அதாவது, என்னை ஒருவர் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்றால், 'இனிமேல் காயப்படுத்த மாட்டார்' என நினைத்துக்கொண்டு, அவருடன் தொடர்ந்து இருந்து, அவர் காயப்படுத்த மாட்டார் என நினைப்பது முட்டாள்தனம். இங்கே, 'ஏன்' என்ற கேள்வி இருந்தால் இந்த மடமை மறைந்துவிடும்.

'பிறர் உனக்குச் செய்ய விரும்பாததை நீ அவருக்குச் செய்யாதே' என்று என்னையே அளவுகோலாக வைக்கிறது இயேசுவின் பொன்விதி.

'தம்முடைய உடலை யாரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார்' (காண். எபே 5:29).

இறையன்பு முதன்மை. அந்த அன்பிலிருந்து ஊற்றெடுப்பது தன்அன்பு. இந்த தன்அன்பின் நீட்சியே பிறரன்பு.


2 comments:

  1. இதுவரை பலரும் நினைத்துப்பார்த்திராத ...இறையன்பிற்கும்,பிறரன்பிற்குமிடையே தன்னை ஒளித்துக் கொண்டிருக்கும் “தன் அன்பு”. இது குறித்த புரிதலை எத்தனை அழகாக,சாதுரியத்துடன் எடுத்து வைக்கிறார் தந்தை.இதில் எனக்கு நானே வரையறைகளை வகுத்து,அதை மீறியதற்காக என்னைத் தண்டித்தல் சரியல்ல என்பதும், எந்த காரியத்தைச் செய்யும் முன் நான் என்ன செய்கிறேன்? ஏன் செய்கிறேன்? இது தேவையா? எனும் கேள்விகளை நமக்குள் எழுப்பி நமக்கு நாமே ஒரு இலக்கு எனும் சுவரெழுப்ப வேண்டும் என்பதும் எனக்கு நெருக்கமாகப் பட்டது. “இலக்கு எழுப்புதல்” என்பது பல நேரங்களில் என்னை ஆபத்து வருமுன் காத்துள்ளது.
    “பிறர் உனக்குச் செய்ய விரும்பாத எதையும் நீ அவருக்குச் செய்யாதே” ....என்னையே அளவு கோலாக வைக்கும் இயேசுவின்
    பொன்விதி... அருமை!
    ‘இறையன்பு’ மலையெனில் அதிலிருந்து ஊற்றெடுக்கும் அருவியை ‘தன் அன்பு’ எனவும், அந்த அருவி உருவாக்கும் சிறிய சாகரத்தை ‘பிறரன்பு’ எனவும் கொள்வாமே!
    ஒவ்வொருவரும் வாழ்ந்துபார்க்க வேண்டிய...வாழ்ந்து காட்ட வேண்டிய விதிகளைக் கொண்டுள்ள பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete