Thursday, June 4, 2020

கடவுளின் தூண்டுதல்

இன்றைய (5 ஜூன் 2020) முதல் வாசகம் (2 திமொ 3:10-17)

கடவுளின் தூண்டுதல்

திருவிவிலியம் கற்றலின் முன்னுரையில் எழுப்பப்படும் ஒரு கேள்வி: 'திருவிவிலியம் கடவுளால் தூண்டப்பட்டதா? எப்படி? அதன் விவிலியச் சான்று என்ன?'

இந்தக் கேள்வியின் விடையைத் தாங்கி நிற்கிறது இன்றைய முதல் வாசகம்:

'மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.'

மறைநூலின் முக்கியத்துவம் பற்றியும், அதைக் கற்று அதன்படி வாழவும் போதிக்கவும் வேண்டிய அவசியம் பற்றியும் தன் அன்புப் பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதும் பவுல், மேற்காணும் முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார்.

'கடவுளின் தூண்டுதல்' - அதாவது, மனிதக் கரங்கள் எழுதினாலும், கடவுள் அந்த எண்ணங்களை மனிதர்களில் ஊதியிருக்கின்றார் என்பதே இதன் பொருள்.

இங்கே, 'மறைநூல் அனைத்தும்' என்று பவுல் குறிப்பிடுவது, நம் விவிலியத்தில் உள்ள 'முதல் ஏற்பாட்டு நூல்களை' குறிக்கின்றது. ஏனெனில், பவுல் இக்கடிதத்தை எழுதும் காலத்தில், 'புதிய ஏற்பாட்டு நூல்கள்' இன்னும் முற்றுப்பெறவில்லை. இருந்தாலும், புதிய ஏற்பாட்டு நூல்களுக்கும் இது பொருந்தும் என்பது சிலரின் கருத்து. ஏனெனில், இதை பவுல் எழுதியதே 'கடவுளின் தூண்டுதலால்தானே!'

தொடர்ந்து பவுல், இறைவார்த்தையின் பயன் என்ன எனப் பதிவு செய்கின்றார்:

அ. கற்பிக்க

ஆ. கண்டிக்க

இ. சீராக்க

ஈ. நேர்மையாக வாழப் பயிற்றுவிக்க

இறைவார்த்தையை வாசிப்பவர் அல்லது கற்பவர் இந்நான்கு பயன்களையும் பெற வேண்டும். அவர் தானும் கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுத்தர வேண்டும். ஆக, தொடக்கக் காலத்தில் திருஅவைச் சட்டம் உருவாகுமுன், மறைநூலே சட்டநூலாகவும் இருந்திருக்கிறது. மறைநூல்களைக் கொண்டே தப்பறை மற்றும் திரிபுக் கொள்கைகள் எதிர்க்கப்பட்டுள்ளன.

ஆக, 

இன்று நாம் இறைவார்த்தையை வாசிக்கும்போது, அங்கே நாம் காணும் கடவுளின் தூண்டுதலை மனத்தில் வைத்தும், இறைவார்த்தையின் பயன்களைப் பெறும் நோக்குடனும் வாசித்தல் அவசியம்.

இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தனர்' என மாற்கு பதிவு செய்கின்றார்.

'மனமுவந்து கேட்டல்' நிகழ்வில் ஒருவர் தன்னையே முழுமையாக மற்றவருக்கு அர்ப்பணம் செய்கின்றார்.


2 comments:

  1. அன்புப் பிள்ளை திமோத்தேயுவுக்குப் பவுல் எழுதிய மடல்கள் அனைத்தும் பாசம் சொட்டுபவை.; யாரையும் ஈர்க்கக் கூடியவை. ‘மனிதக்கரங்கள் எழுதியதேயானாலும் அவர்கள் எண்ணங்களனைத்தும் இறைவனால் ஊதப்பட்டதே’ என்கிறார் தந்தை.இன்று நாம் வாசிக்கும் அனைத்துமே இறைவனின் தூண்டலை மனத்தில் வைத்து வாசிக்கப்பட்டால் நமக்கு கற்பிக்கவும்,நம்மை சீராக்கவும்,நம்மைக்கண்டிக்கவும்,நம்மை நேர்வழியில் வாழப்பயிற்றுவிக்கவும் உதவும் என்பது நம் வாசித்தலை இன்னும் ஊக்குவிக்கிறது.மனமுவந்து கேற்போம்; நம்மை மற்றவருக்கு அர்ப்பணம் செய்வோம்.

    எந்த எதிர்பார்ப்புமின்றி தனக்குத்தெரிந்த விவிலியத்தை தன் அலுவல்களுக்கு மத்தியிலும் அனுதினமும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete