Monday, June 22, 2020

பன்றிகள்முன் முத்துக்கள்

இன்றைய (23 ஜூன் 2020) நற்செய்தி (7:6,12-14)

பன்றிகள்முன் முத்துக்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:

அ. பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்

ஆ. பொன்விதி

இ. குறுகிய வழி

இதில், 'அ' வை மட்டும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்'

யாராவது பன்றிகள் முன் முத்துக்களை எறிவார்களா? பன்றிகள் முன் முத்துக்களை எறியும் அளவுக்கு யாரிடமாவது முத்துக்கள் இருக்குமா?

இந்த வாக்கியத்தை நேரடிப் பொருளிலும், உருவகப் பொருளிலும் புரிந்துகொள்வோம்.

நேரடிப் பொருள்:

'தூய்மையானது எதையும் நாய்களுக்குப் போட வேண்டாம்'
'முத்துக்களை பன்றிகள்முன் எறிய வேண்டாம்'

இவ்விரண்டு வாக்கியங்களும் ஒருபோகு இணை வாக்கியங்களாக உள்ளன. அதாவது, முன்னதன் பொருளே பின்னதிலும் சொல்லப்படுகிறது. இயேசுவின் சமகாலத்தில், 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்' என அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் அழைக்கப்பட்டனர். புறவினத்தார் என்றால் யாரோ ஒருவர் என நினைக்காதீர்கள். நீங்களும் நானும் புறவினத்தார்தான். யூதர்களைத் தவிர அனைவரும் 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்.' இயேசுவும் இதே உளப்பாங்கைக் கொண்டிருந்தார். ஆகையால்தான், தன் மகளின் பேயை விரட்டுமாறு அவள் தன்னிடம் கெஞ்சியபோது, 'பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது முறையல்ல' என்கிறார். மேலும், இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் நடுவே, 'உன் தங்க மோதிரத்தை பன்றியின் மூக்கில் அணிந்துவிடாதே!' என்ற வாக்கியமும் இருந்தது. இங்கே, 'தங்க மோதிரம்' என்பது 'இறைவாக்குகளை' குறிக்கிறது. ஆக, இறைவாக்குகள் புறவினத்தாருக்கு அறிவிக்கப்படக்கூடாது என்பதைச் சொல்வதாக இந்த வாக்கியம் இருக்கிறது.

உருவகப் பொருள்:

'முத்துக்களைப் பன்றிகள்முன் எறிதல்'

என்னிடம் விலைமதிப்பு என இருக்கின்ற ஒன்றை தூய்மையற்றதன்முன் எறிவது.

'நீ எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை மற்றவர்களுக்கு இலவசமாகச் செய்யாதே!' என்றும், 'பிறர் உன்னிடம் எதையும் கேட்காமல் நீ அவர்களுக்குச் செய்தால் நீ செய்ததற்கு மதிப்பு இருக்காது, நீயும் வேலை வெட்டி இல்லாதவன் எனக் கருதப்படுவாய்!' என்றும் நான் என் வாழ்வில் உணர்ந்த ஒன்று.

நீங்க கேட்கலாம்: 'அப்படின்னா! நல்ல சமாரியன் வந்து கீழே விழுந்துகிடந்தவனுக்கு அவன் கேட்காமல்தானே உதவி செய்தான்?'

அவன் கேட்காமல்தான் உதவி செய்தான். ஆனால், அந்தச் சூழல் வேறு. அந்தச் சூழலில் ஒரு கட்டத்தில் அடிபட்டவன்கூட நலமானபின், 'நீதானடா என்னைக் காப்பாற்றினாய்! நான் இப்போது வாழ்வதற்கு ஏதாவது வழி அமைத்துக்கொடு!' என்று கூட நல்ல சமாரியனிடம் கேட்டிருக்கலாம். லூக்கா அதைப் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.

மேலும், என் மதிப்புக்குரிய நேரத்தையும் ஆற்றலையும், நான் உழைத்துப் பெற்ற பொருளையும் அதன் மதிப்பு தெரியாதவர்களிடம் அல்லது மதிப்பற்றவைகளிடம் செலவழித்தால், நான் பன்றிகள்முன் முத்துக்களை எறியத்தான் செய்கிறேன்.

பன்றிகள் என் முத்துக்களைக் காலால் மிதித்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், சில நேரங்களில், முத்துக்களான் நான் அவற்றைத் தாக்க நினைத்ததாக எண்ணி என்மேல் பாயக்கூடும். அந்த நேரத்தில் எனக்கான அழிவை நானே தேடிக்கொள்பவன் ஆவேன்.

வாழ்க்கைப் பாடங்கள் இரண்டு:

அ. எனக்கு அடுத்திருப்பவரை நான் தாழ்வாக அல்லது இழிவாகக் கருதுவது தவறு.

ஆ. என்னிடம் மதிப்புக்குரியது என நான் கருதுவதையும், மதிப்புக்குரிய என்னையும் மதிப்பற்றவற்றின்முன் எறிவதும் தவறு.

ஆங்கிலத்தில், 'டியர்' (dear) என்ற ஒரு வார்த்தை உண்டு. இதற்கு, 'அரிது' என்ற பொருளும், 'நெருக்கம்' என்ற பொருளும் உண்டு. உலகில் 'அரிதாக' இருப்பவர்கள்தாம் நமக்கு 'நெருக்கமாக' இருக்க வேண்டும். நான் 'நெருக்கமாக' இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'அரிதாக' (மதிப்புள்ளதாக) இருக்க வேண்டும்.

1 comment:

  1. பன்றிகள் முன் முத்துக்களை எறிதல்...இதன் நேரடிப்பொருளையும்,உருவகப்பொருளையும் தாண்டி தனது உள்மன ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார் தந்தை.உண்மைதான்... பல நேரங்களில் நாமாக வலியச்சென்று செய்யும் ஒரு நற்செயல் பாராட்டப்படவில்லை எனினும் பரவாயில்லை....அது விமரிசனத்திற்குட்படுகிறதை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம்.வாழ்க்கையில் நம் வழி வரும் அனைத்துக்குமே ஒரு விலை உண்டு.அடுத்தவரின் இருப்பைக் குறைத்து மதிப்பிடுவதும்....என் மதிப்பை அடுத்தவரின் காலடியில் தூக்கிப்போடுவதும்......இரண்டுமே தவிர்க்க வேண்டிய செயல்கள் என்கிறார் தந்தை .......விவிலிய வரிகளின் துணைகொண்டு.அந்த ‘dear’ எனும் வார்த்தை கொண்டு தந்தைதரும் விளக்கம் அருமை! ஆம்! ‘அரிதாக’உள்ளவரே நமக்கு ‘நெருக்கமாக’ இருந்தால் மட்டும் போதாது; நான் ‘நெருக்கம்’ காட்டும் ஒவ்வொருவருமே ‘அரிதான வராக’ இருக்க வேண்டும்! இறைவன் படைப்பில் நான் ‘அரிதானவளா?’ என யோசித்துப்பார்க்கவும், “ அரிதானவர்களை( அரிதானவற்றை) எனதாக்கிக்கொள்ளவும் ஒரு அழைப்பு.

    மேலுலகைச் சார்ந்த ஒரு பதிவு! தந்தையின் விளக்கமும் அழகு! நன்றிகள்!!!

    ReplyDelete