Saturday, June 13, 2020

பசியும் உணவும்

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

பசியும் உணவும்

கடந்த மாதம் 8ஆம் தேதி, மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் அருகில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 16 பேரை சரக்கு ரயில் ஏறிக் கொன்றதை நாம் கேள்விப்பட்டோம், காணொளிகளில் கண்டோம். கொரோனோ தொற்றின் பக்க விளைவுதான் இவர்களின் மரணம். 20 வயது முதல் 30 வயது வரை உள்ள இளவல்கள்தாம் இவர்கள். மகாராட்டிர மாநிலத்தின் இரும்பு பட்டறையிலிருந்து மத்திய பிரதேசத்தில் இருக்கிற தங்கள் இல்லம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். இவர்கள் தண்டவாளத்தில் தூங்கினார்களா அல்லது பசியால் வாடி விழுந்து கிடந்தார்களா அல்லது பயணக் களைப்பால் சோர்ந்து அமர்ந்து, அப்படியே தூங்கிப் போனார்களா என்று நமக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு அருகில் கிடந்த சில சப்பாத்திப் பொட்டலங்களையும் நாம் படத்தில் பார்த்திருப்போம்.

ஒரு பக்கம் மனித உடல்கள், இன்னொரு பக்கம் மனித உடலுக்கு ஊட்டம் தருகின்ற சப்பாத்தி.

நிற்க.

கொரோனா தொற்றின்போது அனைவருக்கும் அரசே உணவு வழங்கலாம் என்றும், நம் நாட்டின் சேமிப்பு கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் நிறைய சேமித்துவைக்கப்பட்டு எலிகளுக்கு உணவாகிக்கொண்டிருக்கின்ற வேளையில் அவற்றை அரசே அனைவருக்கும் வழங்கலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டபோது, அரசு, 'இல்லை! நாங்கள் அவற்றிலிருந்து எத்தனால் எடுத்து நிறைய சானிடைசர் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப் போகிறோம்!' என்றது. உணவுக்கே வழி இல்லாதபோது சானிடைசரை நம் உடலில் தடவினால் என்ன, தடவாவிட்டால் என்ன? இங்கே ஒருவனுக்கு உணவு இல்லாதபோது, எங்கோ ஒருவன் நன்றாக உணவருந்தி படுக்கையில் சாயும்போது அவன் கைகளில் இரு துளிகள் சானிடைசரைப் பூசுவதில் அரசு அக்கறை காட்டுவது ஏன்?

ஒரு பக்கம் பசி, இன்னொரு பக்கம் வீணடிக்கப்படும் உணவு.

நிற்க.

நம் ஆலயங்களில் திருப்பலி கொண்டாடி, நற்கருணை உண்டு ஏறக்குறைய எண்பது நாள்கள் ஆகின்றன. ஆடம்பர ஆடைகள் அணிந்து, சாம்பிராணி போட்டு, சுற்றி வந்து, நெற்றியில் குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து, பாடல் குழுவினர் உச்ச தொனியில் பாடிய நற்கருணைக் கொண்டாட்டங்கள் இனி நம் ஊர்களில் நடக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. அருள்பணியாளர்கள் ஒருவர் பயன்படுத்திய திருவுடையை அடுத்தவர் பயன்படுத்தலாமா? சாம்பிராணி போடுவதால் தும்மல் வரும்போது என்ன செய்வது? நெற்றியில் குங்குமம் இடலாமா? இடும்போது இடுபவர் கையுறை அணிந்திருக்க வேண்டுமா? ஆரத்தி எடுக்கும் தட்டுகள் சேனிட்டைஸ் செய்யப்பட வேண்டுமா? பாடல் குழுவினர் இணைந்து பாடும்போது எச்சில் தெறிக்காதா? அல்லது அவர்கள் முகக்கவசம் அணிந்து பாட வேண்டுமா?

இன்று நாம் சௌகரியமாக நற்கருணையை மையமாக வைத்து திருச்சபையைச் சுருக்கிவிட்டோம். நற்கருணை இல்லை என்றால் வழிபாடு இல்லை என்று ஆக்கிவிட்டோம்.

'இதோ! எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்!' என்று இயேசு சொன்னதை, நாம் நற்கருணைக்கு பொருத்தி, அவர் நற்கருணையில் இருக்கிறார் என்றும், நற்கருணையில் இறைவனின் பிரசன்னத்தைக் கொண்டுவருபவர் குரு அல்லது ஆயர் என்றும், ஆக, இவர்கள் முக்கியம் என்றும் சொல்லி, இறைவனே மையம் என்பது மாறி நற்கருணையே மையம் என்றும், நற்கருணையே மையம் என்பது மாறி அருள்பணியாளர்களே மையம் என்றும் நிலை மாறிவிட்டது. இந்த எண்பது நாள்களில் நாம் யாரும் அருள்பணியாளர்களையோ, ஆயர்களையோ தேடவில்லை. நமக்கு முடிவெட்டுபவர்களைத் தேடினோம், நம் இல்லங்களைத் தூய்மையாக்குபவர்களைத் தேடினோம், தெருக்களின் துப்புரவுப் பணியாளர்களைத் தேடினோம், நம் மருத்துவர்களைத் தேடினோம். அருள்பணியாளர்களும் ஆயர்களும் தேடப்பட்டாலும் அவர்கள் மற்ற தேவைகளுக்காகத்தான் தேடப்பட்டார்களே தவிர, ஆன்மீகத் தேவைகளுக்காகத் தேவைப்படவில்லை. அருள்பணியாளரின் துணை இல்லாமல், இறுதி அருளடையாளங்கள் இல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டோம், இறக்கப் பழகிக் கொண்டோம். அவர்கள் இல்லாமல் இறந்தவர்களை அடக்கம் செய்யப் பழகிக் கொண்டோம். 'கடவுள் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டோம்' என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.

இந்தக் கொரோனா காலத்தில் என்னையே நான் இப்படி திறனாய்வு செய்துகொள்கிறேன்.
காணொளிகளில் திருப்பலி பார்க்கும்போதெல்லாம், தொலைக்காட்சியில் யாரோ உணவு தயாரிக்க சொல்லிக் கொடுக்கும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி நடப்பதுபோலவே எனக்கு சில நேரங்களில் தோன்றும். என் வீட்டில் குழந்தைகள் பட்டினியாக இருக்க, நான் அவர்கள் முன் டிவியில் தோன்றி, நான் மட்டும் உணவருந்திவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்க, அக்குழந்தைகள் டிவியின் அந்தப் பக்கத்திலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாலோ, நான் உணவருந்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாலோ அவர்கள் பசியாறி விடுவார்களா? ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அப்படிச் செய்வாரா?

ஆனால், இப்படிச் செய்வதையும் நம் திருஅவையின் நற்கருணை இறையியல், 'ஆசை நன்மை' என வரையறுத்துள்ளது. அதாவது, நான் என் கற்பனையிலேயே இயேசுவை உட்கொண்டதாக எண்ணிக்கொள்ள முடியும். இது ஏறக்குறைய மருத்துவத்தில் உள்ள 'பிளாஸிபோ இஃபெக்ட்' போல. அதாவது, காய்ச்சல் உள்ள ஒருவருக்கு அல்லது அது இருப்பதாக நினைக்கும் ஒருவருக்கு, வெறும் மாவுக்கட்டியை மாத்திரையை என்று கொடுத்தால், அவர் அந்த மாத்திரை தன்னைக் குணமாக்கிவிட்டது என்று நம்புவதோடு, குணமும் ஆகின்றார். ஆக, அங்கே மாவுக்கட்டி ஒன்றும் செய்வதில்லை. அவருடைய மனம் அல்லது உடல் தன்னையே குணமாக்கிக்கொள்கிறது.

எல்லாரும் சொல்கிறார்கள்: 'இனி பழைய நிலை திரும்பாது'

என்னைப் பொறுத்தவரை, பழைய நிலை திரும்பக் கூடாது.

இல்லங்களில் இல்லத் தலைவரும், தலைவியும் இணைந்து அமர, இறைவார்த்தை அல்லது நல்ல வார்த்தை ஏதாவது வாசிக்கப்பட, அவர்கள் குழந்தைகள் நற்பயிற்சி தரப்பட, அவர்களும் அண்டை வீட்டாரும் அமர்ந்து பசியாறினால் அது நற்கருணை.

தொடக்கத் திருஅவையில் இப்படித்தான் நற்கருணை கொண்டாடப்பட்டது. அங்கே யாருக்கும் ஆரத்தி எடுக்கப்படவில்லை. ஏன்? இயேசு கொண்டாடிய கல்வாரிப் பலியே நற்கருணைப் பலி என்கிறோம். இயேசுவுக்கு யார் ஆரத்தி எடுத்தார்கள்? இயேசு நிர்வாணமாக சிலுவையில் தொங்க இங்கே நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு பட்டாடைகள் தேவையா? புளித்த காடியை அவர் ஈசோப்புத் தண்டில் வைத்துச் சுவைக்க, இங்கே இரசப் பாத்திரத்தில் சிலுவை அடையாளம் இருக்கிறதா, முத்து பதித்திருக்கிறதா என்று நாம் அங்கலாய்ப்பது ஏன்?

நிற்க.

எங்கே பசி இருக்கிறதோ, எங்கே அந்தப் பசிக்கு உணவு இருக்கிறதோ அங்கே நற்கருணை இருக்கிறது.

இப்படித்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நற்கருணையை வரையறுக்கிறது.

பசி இல்லாமல் உணவு மட்டும் இருந்தாலோ, அல்லது உணவு இல்லாமல் பசி மட்டும் இருந்தாலோ அங்கே நற்கருணை இல்லை.

மகாபாரதத்தில் ஆரண்ய பருவத்தில் பின்வரும் நிகழ்வு உண்டு. துர்வாச முனிவர் ஒரு கோபக்கார முனிவர். முனிவர்களுக்கு எல்லாம் ஏன் கோபம் வருகிறது? என்றும், அனைத்தையும் துறந்த முனிவர்கள் தங்கள் கோபத்தை ஏன் துறப்பதில்லை? என்றும், ஏன் அவர்கள் தவம் கலைக்கப்படும்போதெல்லாம் சாபம் இடுகிறார்கள்? என்றும் நான் கேட்பதுண்டு. அதை விட்டுவிடுவோம். துர்வாச முனிவர் தன்னுடைய பத்தாயிரம் சீடர்களோடு கௌரவர்களின் அரண்மனைக்கு வருகின்றார். மகாபாரதக் காலத்தில் பத்தாயிரம் பேர் இருந்தார்களா என்பது இன்னொரு கேள்வி. துர்யோதனன் நன்றாக விருந்து கொடுக்கின்றார். விருந்தில் திருப்தி அடைந்த துர்வாச முனிவர், 'துர்யோதனா! உன்னுடைய உபசரிப்பில் மகிழ்ந்தோம். ஏதாவது ஒரு வரும் கேள்!' என்கிறார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, பாண்டவர்களை அழிக்க நினைக்கின்றார் துர்யோதனன். காட்டில் வனவாசத்திலிருக்கும் பாண்டவர்களிடம் இவரை அனுப்பினால், அவர்கள் இவருக்கு உபசரிப்பு செய்ய முடியாமல் சபிக்கப்பட்டு அழிந்து போவர் என்ற எண்ணத்தில், 'நீங்களும் உங்கள் சீடர்களும் பாண்டவர்களிடம் சென்று சில நாள்கள் தங்கி அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கபடமாகச் சொல்கின்றார். முனிவரும் அவருடைய குழாமும் புறப்பட்டுச் செல்கின்றனர். பாண்டவர்கள் ஒரு குடிசையில் வாழ்கின்றனர். அவர்கள் அப்போதுதான் மதிய உணவருந்தி முடித்துள்ளனர். அவர்களுடைய அட்சய பாத்திரம் அன்றைய தேவையை நிறைவு செய்துவிட்டது. அதற்கு மேல் அங்கே ஒன்றுமில்லை. 'தர்மா! நாங்கள் குளித்துவிட்டு வருமுன் உணவு தயாரித்து வை!' என்று சொல்லிவிட்டு முனிவர் குளிக்கச் செல்கின்றார். திரௌபதி கண்ணனிடம் மன்றாட, கண்ணன் அவர்களுக்குப் பசி எடுக்காமலே செய்துவிடுகின்றார். அதாவது, இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு எழுந்த ஓர் உணர்வைத் தருகின்றார். அந்த நிறைவில் பாண்டவர்களை சபிப்பதற்குப் பதிலாக, ஆசீர்வதித்துச் செல்கின்றார் துர்வாச முனிவர்.

ஆனால்,

முதல் ஏற்பாட்டில் யாவே இறைவன் அப்படிச் செய்யவில்லை. நாணற்கடலை பிளக்கச் செய்து இஸ்ரயேல் மக்களை பாதம் நனையாமல் எகிப்திலிருந்து வெளியேற்றியவருக்கு, அவர்கள் பயணம் முழுவதும் பசி எடுக்காமல் செய்திருக்க இயலாதா? இயலும். கானாவூரில் வெறும் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இரண்டாம் ஏற்பாட்டு இயேசுவுக்கு, எல்லாருடைய கைகளிலும் உணவுப் பொட்டலம் வந்து விழுமாறு செய்திருக்க இயலாதா? இயலும்.

ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

பசியைக் கொடுக்கிறார்கள். பின் உணவைக் கொடுக்கிறார்கள்.

பசி என்ற ஓர் உணர்வும் தேவையும் இருந்தால்தான் உணவு என்ற ஒரு பொருளுக்கு மதிப்பிருக்கும்.

மகாராட்டிரத்தில் இறந்துபோன தொழிலாளர்கள் பசித்திருக்கிறார்கள்.

இன்று எவ்வளவோ பேர் நம் ஊர்களில் பசித்திருக்கிறார்கள்.

நம் திருஅவை முழுவதும் ஆன்மீகப் பசியுற்றிருக்கிறது.

இந்த நேரத்தில், உணவு தேவை. அந்த உணவுதான் நற்கருணை.

இயேசு தன்னுடைய நினைவாக விட்டுச் செல்ல, மனித வாழ்வின் அடிப்படை உணர்வான பசியைத் தேர்ந்தெடுக்கிறார். உச்சிப் பொழுதில் எடுக்கும் பசி நம் மனித நொறுங்குநிலை மற்றும் வலுவின்மையின் அடையாளம். இத்தகைய பசி இறைவனை நோக்கி எழுந்தால்தான் நற்கருணை நமக்கு விருந்தாக முடியும். அல்லது அது ஒரு வெறும் சடங்காக மாறிவிடும்.

அப்படிச் சடங்காக மாறிவிட்ட நிலையிலிருந்து கொரிந்து நகர திருஅவையை விடுவிக்க விழைகின்றார் பவுல். ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுபவர்கள் நடுவே பிரிவினை இருக்கக் கூடாது எனக் கற்பிக்கின்றார்.

நற்கருணை புதுமைகள், நற்கருணை புனிதர்கள், நற்கருணை அற்புதங்கள் என எண்ணற்றவை நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவர்களுக்குப் பசித்தது. ஆகையால், நற்கருணை அவர்களுக்கு நிறைவு தந்தது.

இன்றைய நாள் எனக்கு வைக்கும் சவால் என்ன?

நான் அருள்பணியாளராக நற்கருணையைக் கொண்டாடவோ, அல்லது பொதுநிலையினராக நற்கருணையை உட்கொள்ளவோ இருக்கிறேன் என்று என் வரையறையைச் சுருக்கிக்கொள்தலை விடுத்து, நானே நற்கருணையாக, உணவாக மாற வேண்டும்.

இதைத்தான் இயேசு செய்தார்: 'நானே உணவு' என்றார்.

என்னைக் காணும் எவரும், உங்களைக் காணும் எவரும், 'நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?' என்று கேட்டால், நாம் இன்று கொண்டாடும் திருநாள் பொருள் பெறும்.

ஏனெனில்,

'எப்படிக் கொடுக்க இயலும்?' என்பது கேள்வி மட்டுமல்ல.

'எப்படிக் கொடுக்க இயலும்!' என்பது வியப்பும் கூட.

கேள்வியிலிருந்து வியப்புக்குக் கடந்து சென்றால், அங்கே அப்பம் இயேசுவின் உடலாகவும், இரசம் இயேசுவின் இரத்தமாகவும் மாறும்.

திருநாள் வாழ்த்துக்கள்.

1 comment:

  1. இன்றைக்குத் தேவை வயிற்றுப்பசிக்கு உணவா இல்லைக் கைகளைக் கழுவ சானிட்டைசரா? ஒரு போராட்டத்தையே உருவாக்கிவிட்டது இந்தக் கொரோனா தொற்று.மூடிய ஆலயங்களுக்குள் ஒன்றுமே நடக்கவில்லை; அப்படியே நடந்தாலும் அரசாங்கத்தின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த முடியுமா? என ஆதங்கப்படும் தந்தை இறைவனும்,நற்கருணையும், அருட்பணியாளரும் இன்று மையப்புள்ளியிலிருந்து தனித்துவிடப்பட்டிருக்கின்றனர் என்கிறார். என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.அருட்பணியாளரே மையம் என்பது மாறியிருக்கலாம்; ஆனால் ஆலயங்கள் மற்றும் அருட்பணியாளர்களின் சேவை எத்துணை தேவையென மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.’கடவுள் இல்லாமல் வாழப்பழகிக்கொண்டோம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.ஏனெனில் ஏதோ ஒரு சிலரால் மட்டுமே கண்டுகொள்ளப்பட்ட ‘ மாதா டி.வி’ போன்ற விஷயங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதே இறைவன் எங்கேயும் போகவில்லை; மக்களிடம் தான் இருக்கிறார்’ என்பதற்கு சாட்சி.தொலைக்காட்சியின் திருப்பலியையும்,ஆசை நன்மையையும் கூட தந்தை விமரிசனத்துக்கு ஆளாக்கியுள்ளார். “ ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்பது அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது. பழைய நிலை தேவையா? திரும்புமா? என்பதைத் தாண்டி தந்தையின் ஒரு கருத்து எனக்கு இசைவாகத் தெரிகிறது” நானே நற்கருணையாக மாறுவதுவே” அது. இல்லத்தில் தலைவனும்,தலைவனும் குடும்பமாக அமர்ந்து இறைச்செய்தியைப்பகிர்ந்து பின் பசியாறுதலே இன்றைக்கு நாம் கொண்டாடும் நற்கருணையாக இருக்க வேண்டுமென்பதை உணருவதே இன்றையத் தேவை. பசி எடுக்கும் இடத்தில் உணவு கண்டிப்பாகத் தேவை.என்னால் என் உடலையும், இரத்தத்தையும் என்னிடம் பசியாற வருபவர்களுக்குக் கொடுக்க முடியாமல் போகலாம்.ஆனால் கண்டிப்பாக அவர்களின் வயிற்றுப்பசியை என்னால் போக்க இயலும். அப்படி நான் கொடுக்கையில் யாரும் என்னைப்பார்த்து கேள்விகேட்க வில்லை எனினும்......வியக்கவில்லை எனினும் கூட நானும் ஒரு “ நற்கருணையே” எனும் எண்ணம் என்னை வாழவைக்கும்! தந்தைக்கும்,அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete