Tuesday, June 23, 2020

திருமுழுக்கு யோவானின் பிறப்பு

இன்றைய (24 ஜூன் 2020) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு

நண்பர் ஒருவர் வெளிநாட்டில் தன்னுடைய கல்லூரியின் தங்கும் இல்லத்தில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். கோவித்-19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நேரம். வயதான அருள்பணியாளர் (90 வயது) ஒருவரோடு இவர் அமர்ந்து காலை உணவருந்திக்கொண்டிருந்தார். உணவருந்தி முடித்தவுடன் அருள்பணியாளர், 'நான் நூலகத்திற்குச் செல்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அவரோடு அமர்ந்த மற்றவர்கள் ஒருசேர அவரிடம், 'உலகமே அழியப் போகிறது. நூலகத்திற்கு ஏன் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: 'நான் இறந்தால் தான் எனக்கு அது உலக அழிவு. அது வரை எனக்கு உலகம் இருக்கத்தான் செய்யும்.' சொல்லிவிட்டு அந்த அருள்பணியாளர் நூலகம் நோக்கி நடந்தார்.

'எதிர்காலத்தைக் கணிப்பதற்கான ஒரே வழி அதை உருவாக்குவதுதான்' என்பார்கள்.

தன்னுடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று முன்னறவிக்கப்பட்டாலும், 'இதுதான் என் உலகம்' என்று வாழ்ந்து மறைந்தவரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம்.

திருஅவை மூவரின் பிறந்தநாள்களைத் தான் கொண்டாடுகிறது: இயேசு, இயேசுவின் தாய் மரியா, இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான்.

இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:57-66,90) திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வையும், பெயரிடுதல் நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

- இதுதான் சக்கரியா-எலிசபெத்து இல்லத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரே கேள்வி.

இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சக்கரியாவின் பாடலிலிருந்து வாசகர் தெரிந்துகொள்ள முடியும்: 'நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்!'

மூன்று காரணங்களுக்காக இயேசுவைவிட எனக்கு திருமுழுக்கு யோவானை ரொம்பப் பிடிக்கும். ஏன்?

அ. தன் இலக்கு எது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் செயல்கள் அவருடைய இலக்கை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லவில்லை. 'இவர் யாரோ?' என்று மக்கள் எண்ணும்படியாகவே அவர் வைத்திருந்தார். ஆனால், திருமுழுக்கு யோவான் யார் என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். ஏனெனில், அவருடைய செயல்கள் அவருடைய இலக்கை அப்படியே வெளிப்படுத்தின.

ஆ. இரண்டாம் இடத்தில் இருப்பது

இன்றைய உலகில் நாம் நம்மிடம் இல்லாத ஒன்றையும் இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். ஆனால், அவர், 'நீர் மெசியாவா?' என்று மக்கள் கேட்டபோது, 'இல்லை' என்றும், 'மிதியடி வாரை அவிழ்ப்பவர்' என்றும் சொல்கின்றார். மேலும், மணமகனுக்கு அருகில் நிற்கும் தோழன் என்கிறார். திருமண நிகழ்வுகளில் மணமகனின் மேல் அள்ளி எறியப்படும் வெளிச்சம் தோழன்மேல் விழுவதில்லை. மணமகன் தோழர்களை யாரும் பார்ப்பதில்லை - ஆனால், மணமகள் தோழிகளை எல்லாரும் பார்ப்பர்! தன்னை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்வதன் வழியாக, 'இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன தவறு?' என்று நம்மைக் கேட்கத் தூண்டுகின்றார் யோவான்.

இ. செயல்கள் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன

இதையே நம் இன்றைய வாழ்வியல் பாடமாக எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில், Actions Express Priorities என்ற ஒரு சொல்அடை உண்டு. எடுத்துக்காட்டாக, இன்று காலை நான் தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இதுதான் என் முதன்மை என வைத்துக்கொள்வோம். ஆனால், காலையில் நான் தாமதமாக எழுகிறேன். நண்பர்களோடு நிறைய நேரம் கதை பேசுகிறேன். செய்தித்தாள் வாசிக்கிறேன். காரை எடுத்துக்கொண்டு கோயில் கோயிலாக சுற்றுகிறேன். மருத்துவமனைக்கு ஒருவரை அழைத்துச் செல்கிறேன். மதிய உணவு அருந்துகிறேன். கொஞ்ச நேரம் தூங்குகிறேன். கதைப் புத்தகம் வாசிக்கிறேன். ஆனால், நாளின் இறுதியில் நான் தபால் நிலையத்திற்குச் செல்லவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பிக்கவில்லை. நான் நாள் முழுவதும் வேறு வேறு வேலைகள் செய்தேன். தபால் நிலையம் செல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக மட்டுமே இருந்தது.

என்னுடைய இலக்குகள் என் வெறும் எண்ணங்களாக மட்டுமே இருந்தால் நான் இலக்கை அடைய முடியாது. நான் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறேன் என்றால், நான் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். எழுதவே செய்யாமல் நான் எழுத்தாளன் ஆக முடியாது. ஆக, 'எழுத்தாளன் ஆக வேண்டும்' என்ற என்னுடைய எண்ணம் 'எழுதுதல்' என்னும் செயலில் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால்தான் அது என்னுடைய முதன்மை என்பது தெளிவாகும்.

நாம் இன்று ஒரு வாரம் முழுவதும் செய்கின்ற செயல்களைப் பட்டியலிடுவோம். இன்னொரு பக்கம் நம் இலக்குகளைப் பட்டியலிடுவோம். இவை இரண்டிற்கும் பொருத்தம் இருந்தால் நாம் இலக்குகளை அடைவோம். பொருத்தம் இல்லை என்றால் நாம் இலக்குகள் வெறும் கனவுகளாகவே மறைந்துவிடும்.

திருமுழுக்கு யோவானின் செயல்கள் அவருடைய இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பாலைநிலத்தில் 'மறைந்து' வாழ்கின்றார். ஏனெனில், அது அவருடைய பணி. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, ஒட்டக மயிராடையை அணிகின்றார். அதுதான் அவருடைய எளிய வாழ்க்கை முறை. திருமுழுக்குக் கொடுக்கின்றார். அதுதான் அவருடைய பணி. தலை வெட்டுண்டு இறந்து போகின்றார். அதுதான் அவருடைய நியதி. தான் மெசியாவின் முன்னோடி எனக் கனவு காணவில்லை அவர். முன்னோடியாகச் செயல்படுகிறார்.

ஆக, செயல்கள் நம் முதன்மைகளை (priorities) வெளிப்படுத்துகின்றன.

நான் என் இல்லத்தில் கணவன்-மனைவி உறவில் இனியவராக இருக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிறேன் என வைத்துக்கொள்வோம். நான் இனிய வார்த்தைகள் பேசவும், செயல்கள் செய்யவும் வேண்டும். அப்படி இல்லாமல், 'நான் இனியவராக இருப்பேன்' என்று நினைத்தால் மட்டும் இனிய உறவு அமைந்துவிடாது.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு திருவிழாவில் நம் முதன்மைகளைச் சரிசெய்வதோடு, இலக்குகளுக்கு ஏற்றச் செயல்களைச் செய்ய முற்படுவோம்.


2 comments:

  1. திருமுழுக்கு யோவான்.....” அவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” எனத் தன் தலைவனை முன்வைத்து,அவர் நிழலில் ஒதுங்கிய திருமுழுக்கு யோவான்...நாம் நம் இலக்குகளைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல....,நாம் இருக்கவேண்டிய இடமறிந்து செயல்படவும்,என் முதன்மைகள் என்னவென்று என் செயல்கள் வழியாகப்பேசவும் நமக்குக் கற்றுத்தருகிறார்.நம் முதன்மைகளைத் தெரிவு செய்வதில் நாம் தெளிவாக இருப்பின் அந்த முதன்மைகளே நம்மை வழிநடத்தும் என்பது பெரியவர்கள் நமக்குக் கற்றுத்தந்த பாடம்.”நினைப்பு செயல் வடிவம் அடையும் போதுதான் நம் உறவு சிறக்கும்” என்று தன் பங்குக்கும் ஒரு வாழ்க்கைப்பாடத்தை முன் வைக்கிறார் தந்தை.விடியப்போகும் திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழா நம்மில் இந்த
    நல்ல விஷயங்களை விதைக்கட்டும்! இயேசுவுக்கு ஏறக்குறைய நிகராக வாழ்ந்த ஒருவரின் சிறப்பை வாழ்வியல் பாடங்களாகத் தந்த தந்தைக்கு நன்றிகள்!

    “ நான் இறந்தால் தான் எனக்கு அது உலக அழிவு”....அதுவரை நான் என் வேலையைச்செய்து கொண்டேதான் இருப்பேன்.......இறுதிவரை தன் வாழ்க்கையை வாழ நினைத்த அருள்பணியாளருக்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete
  2. இயேசுவைப் புகழும்,திருமுழுக்கு யோவான்;
    திருமுழுக்கு யோவானைப் புகழும்,அருட்பணி யேசு....

    Nice

    ReplyDelete