Wednesday, January 9, 2019

இன்று நிறைவேறிற்று

இன்றைய (10 ஜனவரி 2019) நற்செய்தி (லூக் 4:14-22)

இன்று நிறைவேறிற்று

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் இயேசு தன் சொந்த ஊரான நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்தில் தன் பணியைத் தொடங்கியதை நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் பணித் தொடக்கத்தைக் கலிலேயாவில் உள்ள பொதுவிடத்தில் வைக்கின்றார். லூக்காவோ அதை தொழுகைக்கூடத்தில் நடப்பதாக எழுதுகிறார். லூக்காவின் நற்செய்தி இறைமைய அல்லது செப மைய நற்செய்தி. ஆக, இங்கே நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஆலயத்தில் (எ.கா. செக்கரியாவின் அழைப்பு), செபக்கூடத்தில் (எ.கா. இயேசுவின் பணித்தொடக்கம்), செப நேரத்தில் (எ.கா. இயேசுவின் திருமுழுக்கு) நடைபெறுவதுபோல பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இன்றைய நற்செய்தியை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. இயேசு செபக்கூடத்திற்கு வருகிறார். அதுவும் 'வழக்கத்தின்படி' வருகின்றார். அப்படி வந்த அவரிடம் வாசிக்குமாறு இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு தரப்படுகின்றது.

ஆ. அதைப் பிரித்து அவர் வாசிக்கின்றார்.

இ. வாசித்து இருக்கையில் அமர்ந்த அவர்மேல் அனைவரின் கண்களும் பதிந்திருக்க, 'நீங்கள் கேட்ட வாக்கு இன்று நிறைவேறிற்று' என்கிறார். அனைவரும் அவரின் மொழிகளைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர்.

இந்த மூன்று பகுதிகளும் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைச் சொல்கின்றன:

அ. 'வழக்கம்'

இயேசுவுக்கு இருந்த சில 'வழக்கங்களில்' ஒன்று 'ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் செல்வது' அல்லது 'தன் சொந்த மக்களோடு இணைந்து இறைவேண்டல் செய்வது.' ஆக, இறைவேண்டல் செய்வதையும், அதை மற்றவர்களோடு சேர்ந்து செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இயேசு. மேலாண்மையியலில் மேன்மைக்கான வழிகாட்டியாகச் சொல்லப்படும் கருத்துக்களில் ஒன்று, 'வழக்கமாக்குவது.' நாம் ஒன்றிரண்டு நாள்கள் செய்யும் செயல்கள் நம்மைப் பாதிப்பதில்லை. நம்மிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், வழக்கமாக்கிக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் நம்மில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நான் என்றாவது ஒரு நாள் கருணையாக இருந்தால் அது என் ஆளுமையைப் பாதிப்பதில்லை. ஆனால், நான் அன்றாடம் கருணைச் செயல்கள் செய்யும்போது அது என் வழக்கமாக மாறிவிடுகிறது. அப்படி மாறுகின்ற வழக்கம் என்னைக் கருணை உள்ளவராக உருவாக்கிவிடுகிறது.

ஆ. 'இலக்குத் தெளிவு'

'என்னுடைய இலக்கு இதுதான்' என்று நீங்கள் எதையாவது யாரிடமாவது சொல்லிப் பாருங்களேன். உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். 'வாழ்க்கை இயல்பானது. அதை இலக்கு நிர்ணயித்து நாம் கட்டுப்படுத்தக்கூடாது. இலக்கு நிர்ணயம் செய்யும்போது நம் படைப்புத்திறன் பாதிக்கும். அந்தந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும்' என பிரசங்கம் வைப்பார்கள். இவர்கள் சொல்வது சரிதான். ஆனால், 'இரு மான்களை விரட்டுபவர் ஒரு மானையும் பிடியார்' என்பது பழமொழி. ஆக, இலக்கு என்பது நான் 'எந்த மானை விரட்டப் போகிறேன்' என்ற தெளிவுதான். இயேசு தன் பணியைத் தொடங்க நிறைய இலக்குகள் இருந்தன. அவர் 'பத்துக்கட்டளைகளை' வாசித்து, 'இந்தக் கட்டளைகள் போல் அனைவரும் வாழ வேண்டும்' எனச் சொல்லியிருக்கலாம். அல்லது 'ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை' வாசித்து, 'நிலத்தை கடவுள் கொடுப்பார்' என்று சொல்லியிருக்கலாம். அல்லது 'திருப்பாடல் 23'ஐ வாசித்து, 'நானே அந்த ஆயன்' எனச் சொல்லியிருக்கலாம். அல்லது 'எரேமியாவின் புதிய உடன்படிக்கையை' எடுத்து, 'என்னில்தான் புதிய உடன்படிக்கை நிறைவேறுகிறது' எனச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் தெரிவு செய்கின்ற இலக்கு வித்தியாசமாக இருக்கிறது. 'எளியவரோடும், சிறைப்பட்டவரோடும், பார்வையற்றவரோடும், அந்நியப்படுத்தப்பட்டோரோடும், விளிம்பு நிலையில் இருக்கிறவரோடும்' கைகோர்க்கின்ற, 'ஆண்டவரின் அருளை' அறிவிக்கின்ற ஒன்றைத் தன் இலக்காக எடுத்துக்கொள்கின்றார். முற்சொன்ன அனைத்தும் - பத்துக்கட்டளைகள், நாடு, ஆயன், உடன்படிக்கை - தேவைதான். ஆனால், 'என் இலக்கு இது' என நிர்ணயம் செய்கின்றார். 'இந்த நேரத்தில் நான் என்ன செய்யப் போகிறேன்?' 'இவரிடம் நான் எப்படி பேசப் போகிறேன்?' என சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் இலக்குகள் நிர்ணயிக்கப்படும்போது நிகழ்வுகளும் இனிதாகின்றன, நம் ஆற்றலும் சேமிக்கப்படுகிறது.

இ. 'நிறைவேறிற்று'

சின்ன வயதில் நம்மைப் பார்த்தவர்கள், நம்மைக் கைகளில் ஏந்தியவர்கள், நம் கரம் பிடித்து 'அ-ஆ' சொல்லிக்கொடுத்தவர்கள் என பல நல்லவர்கள், 'எதிர்காலத்தில் நீ இப்படி இருப்பாய்!' என நம்மைப் பற்றி இறைவாக்குரைத்திருப்பார்கள். அல்லது நம் பெற்றோரிடம், 'இவன் இப்படி இருப்பான் - இவள் இப்படி இருப்பாள்' என்று நம்மைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள். இவைகளை நாம் பல நேரங்களில் மறந்திருப்போம். இவற்றை இன்று எண்ணிப்பார்ப்போம். இவைகளில் ஒன்றையாவது நாம் நிறைவேற்றியிருந்தால், நாமும், 'இன்று நிறைவேறிற்று' என்று சொல்ல முடியும்.

இறுதியாக, 'பணி நடைபெற வேண்டும்' என்றால் 'பணியைத் தொடங்க வேண்டும்.' 'பணியைத் தொடங்க வேண்டும்' என நினைத்தால் மட்டும் 'பணி நடந்துவிடாது,' 'பணியைத் தொடங்க வேண்டும்.' வெறும் எண்ணங்கள் வாழ்வாகாது. ஏனெனில், 'வெறுங்கை முழம் போடாது.'

2 comments:

  1. நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே!
    நல்லவற்றை, வழக்கப்படுத்திக்கொண்டு, இலக்கை திறம்பட நிர்ணயம் செய்து,
    நலமாய் நிறைவேறிற்று எனும் அளவிற்கு எம் பணி தொடர, உரமேற்றிய நும் பாங்கு...
    நன்றி நன்று நண்பரே, நன்றி!

    ReplyDelete
  2. இன்றைய வாசகம் ஒரு அருட்பணியாளரைக் குறிவைத்து எழுதப்பட்டது போல் தோன்றினாலும்,தந்தையின் பதிவு அது 'அருள் நிலையில் வாழவிரும்பும் அனைவருக்குமே பொதுவானது' என்று கூறுகிறது. " நான் அன்றாடம் செய்யும் கருணைச் செயல்கள் எனது வழக்கமாகி,பின் அதுவே என்னைக் கருணை உள்ளவனாக மாற்றிவிடுகிறது." அருமை.என் சின்ன நிகழ்வுகளிலும் இலக்குகள் நிர்ணயிக்கப்படும்போது இலக்குகள் இனிதாகின்றன என்பதும்,நம் வாழ்வு பற்றித் தீர்க்கதரிசனம் உரைத்தவர்களின் வார்த்தைகளை வாழ்வாக்குவதும்,எதையும் நன்றே செய்ய வேண்டும்; அதையும் இன்றே செய்ய வேண்டும் போன்ற பொன் மொழிகளுக்கேற்ப வாழ்ந்து காட்டுவதுமே ஆவியின் உடனிருப்பும்,வழிநடத்துதலும் நம்முடன் கரம் கோர்த்து செயல்படுகின்றன என்பதற்குச் சான்று என்பதையும் வாழ்க்கைப்பாடமாக்கித் தந்த தந்தைக்கு என் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete