Thursday, January 17, 2019

இயேசு தம்முள் உணர்ந்து


இன்றைய (18 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 2:1-12)


இயேசு தம்முள் உணர்ந்து

'உள்ளுணர்வு' - இதைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். 'உள்ளுணர்வில்' இரண்டு வகை உண்டு: ஒன்று, கடந்த காலம் பற்றிய உள்ளுணர்வு. இரண்டு, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு. நம்மில் சிலருக்கு சில ஊருக்கு அடிக்கடி போவது பிடிக்கும். சில நேரங்களில் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் இதே போல என்றோ நடந்ததுபோல இருக்கும். இதை 'கடந்த காலம் பற்றிய உள்ளுணர்வு' என்கிறார்கள். அதாவது, கடந்த பிறப்பில் நாம் இருந்த இடமோ, பழகிய இடமோ, நடந்த நிகழ்வோ மீண்டும் நடப்பது போல இருப்பதே இவ்வுணர்வு. இரண்டாம் வகை உள்ளுணர்வு, இப்போது நடக்கும் நிகழ்வுகள் பற்றியது. 'இவரை இன்று கூப்பிடலாமே!' என்று ஃபோனைக் கையில் எடுப்போம். அந்த நேரம் அவரிடமிருந்து ஃபோன் வரும். கையில் தட்டைச் சுமந்து கொண்டு செல்லும்போதே, 'இது இன்று உடையும்' என்று உள்ளுணர்வு சொல்லும். அதே போல தட்டு உடையும். சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களின் இறப்பையும் இந்த உள்ளுணர்வு சொல்லிவிடும்.

'உள்ளுணர்வு' - நம் 'ஆழ்மனதோடு' (சப்கான்சியஸ்) தொடர்பு கொண்டது. விழிப்பு நிலையில் இருக்கும்போது உள்ளுணர்வு செயலாற்றுவதில்லை. மாறாக, ஆழ்மனது விழித்து இருக்கும்போதுதான் அது செயலாற்றுகிறது. ஆழ்மனது நிறைய ஆற்றல் வாய்ந்தது. அது நினைத்தால் எதையும் செய்து முடித்துவிடும். அது பிரபஞ்சத்தோடு தொடர்பு உடையது. 'நான் பணக்காரன் ஆக வேண்டும்' என்று ஆழ்மனம் முடிவெடுத்துவிட்டால் பணத்தை அப்படியே கொண்டு வந்து கொட்டிவிடும் என்றெல்லாம் உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஏன் இந்தப் பின்புலம்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர் சுமந்து வருகின்றனர். அவரை அவர் குணமாக்க சிலர் முணுமுணுக்கின்றனர். அந்த நேரத்தில், 'அவர்கள் தமக்குள் எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து' என்று பதிவு செய்கின்றார் மாற்கு.

அதாவது, அடுத்தவர்கள் தமக்குள் உணர்வதை இயேசு தம்மில் உணர்கிறார். இதுதான் ஆழ்மனத்தின் ஆற்றல். என் ஆழ்மனது மற்றவரின் ஆழ்மனதோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அப்படியே அங்கிருக்கும் டேட்டாவை நாம் இங்கே இழுத்துக்கொள்ள முடியும்.

இந்த ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ளலாம். எப்படி?

முதலில், விழிப்புநிலை. நம்மைப் பற்றிய, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய விழிப்பு நிலை.

இரண்டாவது, காணுதல். பார்த்தல் வேறு, காணுதல் வேறு. பார்த்தல் இயல்பாக நடக்கக் கூடியது. காணுதல் தெரிவுடன் செய்யப்பட வேண்டியது. நான் நிறையவற்றைப் பார்க்கலாம். ஆனால், சிலவற்றையே காண்கிறேன். 

மூன்றாவது, உணர்வுகளுக்குப் பெயர் இடுவது. சில நேரங்களில் நாம் மொட்டையாக, 'எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. மனசு சரியில்லை' என்று சொல்லி மௌனம் காப்போம். இந்த நேரத்தில், 'என் உணர்வு என்ன?' என்பதை என்னால் சரியாகச் சொல்ல நான் கற்க வேண்டும். வருத்தமா? ஏமாற்றமா? விரக்தியா? சோர்வா? விலகுதலா? - இப்படி ஒவ்வொரு நொடியும் நம் வெளிப்புற செயல்களைச் சொல்வது போல, உள்ளே நாம் உணரும் உணர்வுகளையும் அறிந்துகொள்ளல் அவசியம்.

இயேசுவின் இவ்வாற்றல்தான் அவரை எதிரிகளையும் எதிர்கொள்ள அவருக்குக் கற்றுத்தருகின்றது. 


2 comments:

  1. "Intuition"
    Great! Dear rev.fr.Yesu.
    I have experienced this a lot in my life.
    Albert Einstein-- my most adorable scientist.
    Extremely happy to read your today's version.
    Thank you.

    ReplyDelete
  2. கண்டிப்பாக தந்தையின் உள்ளுணர்வு, விழிப்பு நிலை போன்ற சொற்களை நாம் அடிமனத்திலிருந்து யோசித்துப்பார்க்காமல் இருந்திருக்கலாம்.ஆனாலும் அந்த சொற்களின் அர்த்தம் ஓரளவு நமக்குப் புரிந்ததே! வெளிப்புற செயல்களைச் சொல்வதுபோல, உள்ளே உணரும். உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்ள விழிப்பு நிலையிலிருப்பதைத் தாண்டி, சம்பவங்களைத் தெரிவுடன் காணவும் வேண்டுமென்கிறார் தந்தை.யேசுவுக்கு அவரின் எதிரிகளை எதிர்கொள்ளக் கற்றுத்தந்த இந்த ஆற்றல் நமக்கும் துணை நிற்குமா? இன்னொரு இயேசுவாக மாறினால் முடியும்...முயல்வோம்.நம்பிக்கையின் விதைகளைத்தூவிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete