Tuesday, January 15, 2019

கன்சிஸ்டன்ஸி

இன்றைய (16 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 1:29-39)

கன்சிஸ்டன்ஸி

மனித தகைமை பற்றிப் பேசப்படும்போது அதிகமாக வலியுறுத்தப்படும் சில பண்புகளில் ஒன்று 'கன்சிஸ்டன்ஸி' ('இசைவு,' 'ஒவ்வுமை,' 'சீர்மை,' 'அக இசைவுடைமை,' 'நிலைப்புத்தன்மை,' 'நிலைத்தன்மை').

அதாவது, சாலையில் என் நண்பனோடு நடந்துகொண்டிருக்கிறேன் நான். வழியில் வயதான ஒருவர் உதவி கேட்டு வருகின்றார். உடனே நான் அவருக்கு 10 ரூபாய் கொடுக்கிறேன். சில நாள்கள் கழித்து அதே நண்பனோடு நடந்துகொண்டிருக்கும் என் எதிரே மற்றொரு வயதானவர் உதவி கேட்டு வருகின்றார். அவருக்கு நான் பணம் கொடுக்க மறுக்கின்றேன்.

'என்னடா! அன்று நீ கொடுத்தாய்! இன்று முகம் திருப்பிக் கொண்டாய்! ஒரே மாதிரி இருக்கணும்டா! மாறிக்கொண்டே இருக்கக்கூடாது!' என என் நண்பர் என்னைக் கடிந்துகொள்கிறார்.

மேற்காணும் 'கன்சிஸ்டன்ஸி' தான் நாம் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கும் நட்பிற்கு மிக அவசியமாகிறது. 'நேற்று ஒன்று, இன்று வேறு, நாளை இன்னும் வேறு' என்று நான் பேசினால், செயல்பட்டால் நட்பு முறிந்துவிடும்.

கடவுளுக்கு இது பொருந்துமா?

கடவுள் என்றும் ஒரே மாதிரி இருக்கிறாரா? இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயெசுவின் கலிலேயப் பணி சுருக்கத்தை வாசிக்கின்றோம்.

இதில் இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கிறோம்:

அ. சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப்பிடித்து அவரைத் தூக்கினார்.

இது முதல் நாள் நிகழ்வு.

ஆ. இயேசு விடியற்காலையில் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் ... சீமோன் அவரைக் கண்டதும், 'எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்' என்றார். அதற்கு அவர், 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம் ...' என்றார்.

இது இரண்டாம் நாள் நிகழ்வு.

முதல் நாள் சீமோன் சொன்னவுடன் உடன் சென்ற இயேசு, இரண்டாம் நாள் ஏன் செல்லவில்லை?

இயேசுவிடம் ஏன் கன்சிஸ்டன்ஸி இல்லை?

இயேசுவின் இச்செயல் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கிறது:

1. கடவுள் தான் விரும்பியதைச் செய்கிறார். அவரிடம் கன்சிஸ்டன்ஸி தேவையில்லை. மோசேயின் சிறு குற்றத்திற்காக அவரைக் கொடியதாகத் தண்டிக்கவும் முடியும். தாவீதின் பெரிய குற்றத்திற்காக அவரை முழுவதும் மன்னிக்கவும் முடியும். ஆக, நம் இறைவேண்டல்களால் அல்லது நேர்ச்சை செயல்களால் கடவுளை நாம் 'கையாள' முடியாது. அவர் நாம் 'கீ' கொடுக்கின்ற பொம்மை அல்ல. அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்கிறார் அவ்வளவுதான்.

2. இதையே நம் வாழ்விற்குப் பொருத்திப் பார்ப்போம். வாழ்வில் நம்முடைய முதன்மைகள் மாறக்கூடியவை. முதல் நாள் நான் முதியவருக்கு உதவி செய்தபோது 'இரக்கம்' என்னுடைய முதன்மையானதாக இருந்தது. இரண்டாம் நாள் நான் முதியவருக்கு உதவி செய்யாதபோது 'பணம் மிச்சப்படுத்துவது' என்னுடைய முதன்மையானதாக இருக்கிறது. ஆக, முதன்மைகள் மாறக்கூடியவை. முதல் நாள் இயேசுவின் பணி அனைவருக்கும் நலம் தருவதாக இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் அதுவே இறைவேண்டல் என முதன்மை மாறுகின்றது. ஆக, முதன்மைகள் மாறும்போது 'கன்சிஸ்டன்ஸி' உடைகிறது.

3. 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்' - இது நமக்கு வரும் பெரிய சோதனை. 'எல்லாரும்' என்பதை மிகை வார்த்தை. 'நாலஞ்சு பேர்' இயேசுவைத் தேடியிருப்பார்கள். ஆனால், 'எல்லாரும்' என்று சொல்கின்றார் சீமோன். 'மிகைப்படுத்துதல்' மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆபத்தானது அந்த மிகைப்படுத்துதலுக்கு செவிகொடுத்து அதை அப்படியே நம்பி விடுவது. இயேசுவுக்கு சீமோனின் மிகைப்படுத்துதல் புரிந்தது. அதே நேரத்தில், 'எல்லாரும் தேடுகிறார்கள்' என்ற வார்த்தைகள் தரும் புகழ்ச்சியில் அவர் மயங்கிவிடவில்லை. எந்த நேரத்திலும் 'நாம் இன்றியமையாதவர்கள்' என்ற எண்ணம் நமக்கு வரவே கூடாது. அந்த எண்ணம் வரும்போது உடனடியாக நம் கன்சிஸ்டன்ஸியை உடைத்துவிட வேண்டும்.

மேலும், இயேசுவின் மாறுபட்ட செயல்களை, முரண்பாடு என்று பார்க்காமல், 'மக்கள் அனுபவம்,' 'இறை அனுபவம்' என்று முழுவதுமாக எடுத்தால் அங்கே முரண்பாடு இல்லை.

ஏனெனில், இறைவனிடம் எப்போதும் 'கன்சிஸ்டன்ஸி' உண்டு.

இதையே பவுல், 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' (2 திமொ 2:13) என்கிறார்.


3 comments:

  1. தந்தையின் இன்றையப்பதிவில் சீர்தூக்கிப்பார்க்கப்படுவது ' கன்சிஸ்டன்ஸியா' இல்லை 'ப்ரயாரிட்டியா' எனச்சரியாகப் புரியவில்லை.இரண்டிற்கும் மயிறிழை வித்தியாசமே என நினைக்கிறேன்.முதல் நாள் முதியவருக்கு உதவி செய்தபோது 'இரக்கம்' முதன்மையாக இருப்பதாகவும், அடுத்த நாள் 'பணம் மிச்சப்படுத்துவது' முதன்மையாக இருப்பதாகவும் கூறும் போது அங்கே தெரிவது 'ப்ரயாரிட்டி' என்றே தோன்றுகிறது. மனிதனை மாமனிதனாக உயர்த்துவது அவன் சொல்லிலும்,செயலிலும் உள்ள ஸ்திரத்தன்மையே! அதாவது கன்சிஸ்டன்ஸியே! இதை இயேசுவின் வாழ்க்கையோடு இணைத்துப்பேசும் தந்தை அதில் உள்ள வாழ்க்கைப் பாடங்களை
    முன் வைக்கிறார்.சில விஷயங்கள் முரண்பாடாகத் தெரிந்தாலும், 'மக்கள் அனுபவம்' , 'இறை அனுபவம்' என்று பார்த்தால் 'முரண்பாடு' இல்லை என்கிறார். அதையும் " நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்;.ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது." எனும் வார்த்தைகளால் மெய்ப்பிக்கிறார். கண்டிப்பாக நம்ப வேண்டிய விஷயம்.ஏனெனில் பல விஷயங்கள் மனித மூளைக்கு அப்பாற்பட்டன..ஆனாலும் "கன்சிஸ்டன்ஸி"... அது நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று மாதிரி...எடுத்துச்சொன்ன தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. "Consistency"
    10 முறை திரும்ப, திரும்ப வாசித்தால் தான் எனக்கு சரியாக புரியும் போல் உளது.
    Whatever it is " You are great"
    In my words, Among the persons, I met..." rev. Yesu is the one who could rightly ( not aptly) interpret , reflect & live Jesus Christ.
    Thank you.

    ReplyDelete