Monday, January 21, 2019

செய்யக்கூடாததை

இன்றைய (22 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 2:23-28)

செய்யக்கூடாததை

'பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?' என்று இயேசுவிடம் அவருடைய சீடர்களைப் பற்றிக் குற்றம் சுமத்துகிறார்கள் பரிசேயர்கள் சிலர்.

இயேசுவும் பதிலுக்கு,

'பாருங்கள், செய்யக்கூடாத ஒன்றை தாவீது செய்யவில்லையா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார்.

மேலும், 'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர்கள் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை' என்ற புரிதலையும் தருகின்றார். ஆக, ஓய்வுநாள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியும். மனிதர்கள் இல்லாமல் ஓய்வுநாள் இருக்க முடியாது.

எபிரேயத்தில் 'ஷபாத்' என்றால் 'நிறுத்து' என்பது பொருள். வாரத்தின் ஏழாம் நாள் என்று சொல்லப்படும் 'சனிக்கிழமை' அன்று யூதர்கள் தாங்கள் செய்கின்ற வேலை அனைத்தையும் நிறுத்தினர். ஓய்வுநாளுக்கான காரணங்களாக இரண்டு சொல்லப்படுகின்றன: (அ) ஆண்டவராகிய கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். ஆக, நீங்களும் ஓய்வெடுங்கள், (ஆ) எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். அதை நினைவுகூர்ந்து நீங்கள் ஓய்வெடுங்கள்.

முதல் காரணத்தைவிட இரண்டாம் காரணமே ஏற்புடையதாக இருக்கிறது. 'வேலைக்கு மாற்று ஓய்வு' - இந்தப் புரிதல் மானுடப்புரிதலாக இருக்கின்றது.

பத்துக்கட்டளைகளில் ஓய்வுநாள் மூன்றாம் கட்டளைக்குள் வருகிறது. 1989ஆம் ஆண்டு போலந்து நாட்டு மொழியில், டெகலாக் - ஒன்ற ஒரு சீரிஸ் ஓடியது. ஒவ்வொரு கட்டளையையும் 'தூய்மை' என்ற வார்த்தையை மையமாக வைத்துப் புரிந்துகொள்கிறார் இதை இயக்கிய கீஸ்லோஸ்கி. 'நேரம் என்னும் தூய்மை. ஒரு நாள் என்பது பகல், இரவு என்றும், ஒரு வாரம் என்பது கிழமைகளாலும், ஒரு திங்கள் என்பது கிழமைகளாலும் பிரிக்கப்பட்டிருப்பது அர்த்தம் இல்லாமல் அன்று' என்கிறார் இவர்.

மனிதர்களை மற்ற விலங்குகள் அல்லது தாவரங்களிலிருந்து பிரித்துக்காட்டும் சில காரணிகளில் ஒன்று 'நேரம்.' இதையே சபை உரையாளர், 'காலத்தைப் பற்றிய உணர்வை கடவுள் மனிதருக்குத் தந்திருக்கிறார்' என்றார்.

ஆக, ஓய்வு, நேரம் - இவை இரண்டையும் பற்றிச் சிந்திப்போம்.

'ஓய்வு' - நமக்கு இன்றியமையாத ஒன்று. நம் வேலைப்பளுவின் நடுவில் சமரசம் செய்துகொள்ளப்படும் ஒரு அப்பாவி ஜீவன் இந்த ஓய்வுதான். இதையே டுவிட்டரில் ஒருவர், 'வேலையும் நிறைய இருக்கிறது. தூக்கமும் ரொம்ப வருகிறது. தூக்கத்தில் நடக்கிற வியாதி மாதிரி, தூக்கத்தில் வேலை செய்ற வியாதி இருந்தால் எத்துணை நலம்!' எனக் கேட்கிறார். ஓய்வு என்பது 'ஓய்ந்திருப்பது' அல்ல. அது, நம் இறப்பின் போதுதான் சாத்தியம். ஓய்வு என்பது மாற்று வேலை. வேலை என்பது மாற்று ஓய்வு அவ்வளவுதான். என் வேலை பாடம் சொல்லிக்கொடுப்பதாக இருந்தால் என் ஓய்வு படிப்பாக இருக்கலாம். என் வேலை படிப்பது என்றால் என் ஓய்வு பாடம் சொல்லிக்கொடுப்பதாக இருக்கலாம். ஓய்வு மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது. அதே நேரம் அதீத ஓய்வு உடல் நலத்திற்குத் தீங்காய் முடிகிறது. ஆக, ஓய்வுக்கும், வேலைக்குமான சமன் நிலை மிகவே அவசியம்.

'நேரம்' - இதை நாம் உருவாக்க முடியாது. இது நமக்குக் கொடுக்கப்படுவது. நமக்குக் கொடுக்கப்படும் இதை நாம் எப்படியும் பயன்படுத்தலாம். இன்று மேலாண்மையியலில் அதிகம் பேசப்படுவது நேர மேலாண்மையே. நேரத்தை மேலாண்மை செய்தால் நிகழ்வுகளை மேலாண்மை செய்துவிடலாம். கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் ஓடிக்கொண்டே இருக்க, அந்த நொடி கடந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஒன்று அப்படியே கடந்துவிடுகிறது. நேரத்தைப் பற்றிய அதீத அக்கறை சில நேரங்களில் நம்மை ஓய்வெடுக்க முடியாமல் செய்துவிடுகிறது.

'ஓய்வு' 'நேரம்' - இந்த இரண்டிலும் முதன்மைப்படுத்தப்படுவது மனிதரின் நலமே.

மனிதரின் நலம் கருத்தில் கொள்ளப்படாத 'ஓய்வு' என்பது வெறும் கட்டிலே. 'நேரம்' என்பது வெறும் கடிகாரமே.

2 comments:

  1. " ஓய்வு என்பது. ஓய்ந்திருப்பது அல்ல; அது இறப்பின் போது மட்டுமே சாத்தியம்" ....தந்தையின் புதிய கோணம் சிந்திக்க வைக்கிறது.
    'ஓய்வு' 'நேரம்' - இந்த இரண்டிலும் முதன்மைப்படுத்தப்படுவது மனிதரின் நலமே.
    மனிதரின் நலம் கருத்தில் கொள்ளப்படாத 'ஓய்வு' வெறும் கட்டிலே.'நேரம்' என்பது வெறும் கடிகாரமே! 'உழைப்பவருக்கே ஓய்வு சொந்தம்' எனக்கேட்டிருக்கிறேன்.ஆனால் அந்த ஓய்வக்குள்ளும் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதைப் புரிய வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete