Friday, January 4, 2019

இதைவிட பெரியவற்றை

இன்றைய (5 ஜனவரி 2018) நற்செய்தி வாசகம் (யோவா 1:43-51)

இதைவிட பெரியவற்றை

யோவான் நற்செய்தியில் இயேசு பிலிப்பு ஒருவரைத்தான் 'என்னைப் பின்தொடர்ந்து வா!' என்று அழைக்கின்றார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்தவர். இவர், அந்திரேயா, பேதுரு எல்லாரும் ஒரே ஊர்க்காரர்கள்.

இயேசுவைச் சந்தித்த பிலிப்பு தன் நண்பர் நத்தனியேலைத் தேடிச் செல்கின்றார். பார்த்தலோமேயு என்ற திருத்தூதரைத்தான் யோவான் நத்தனியேல் என்று குறிப்பிடுகின்றார். 'நத்தனியேல்' என்றால், 'நாத்தான்,' 'ஏல்' - 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள். இவர் பிலிப்புக்கு நல்ல நண்பராக இருக்கின்றார். ஆகையால்தான், 'இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சார்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்' என்று சொன்னவுடன், 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று கிண்டலாகக் கேட்கின்றார்.

அதாவது, ஒரே ஊர்க்காரர்களான இவர்கள் மற்ற ஊரான நாசரேத்தைப் பற்றிக் கேலி பேசுகின்றனர். இது ஒரு கபடற்ற, எதார்த்தமான கேலி. இங்கே இவர் மற்ற ஊரைத் தாழ்த்திப் பேசுவதன் வழியாக தன் ஊரை உயர்த்திப் பேசுகின்றார். இது நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடலில் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. இந்த எதார்த்தத்தையே இயேசு 'கபடற்ற உள்ளம்' என்று பாராட்டுகின்றார்.

'இவர் உண்மையான இஸ்ரயேலர் ... கபடற்றவர்...'

இஸ்ரயேலர். ஏனெனில், மற்ற இஸ்ரயேலர் போல இவரும் மெசியாவின் வருகை நாசரேத்தில் இருக்காது என நம்பினார்.

கபடற்றவர். ஏனெனில், தன் உள்ளத்தில் பதித்த ஒன்றை மிக எதார்த்தமாக தன் நண்பரிடம் பகிர்கின்றார்.

இதை ஒரு வகையான வெகுளித்தனம் என்றுகூடச் சொல்லலாம்.

நம்ம ஊர் கிராம மக்களின் உரையாடல்களிலும் இந்த வெகுளித்தனத்தை இயல்பாகப் பார்க்க முடியும். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத ஒருவர்தான் கபடற்ற நிலையில் இருக்க முடியும். ஏனெனில், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கின்ற மனம் பொய் சொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக, ஆசிரியர் இன்று சரியாகப் பாடம் நடத்தவில்லை என வைத்துக்கொள்வோம். அதுதான் உண்மை. விளைவுகள் பற்றிக் கவலைப்படாத மாணவன், 'சார், இன்னைக்கு நீங்க நடத்திய பாடம் புரியவில்லை' என்று நேருக்கு நேராகச் சொல்வான். ஆனால், விளைவுகள் அல்லது பரிசுகள் எதிர்பார்க்கும் மாணவன், 'சார், வர வர நீங்க ரொம்ப நல்லா நடத்துறீங்க!' என்பான். விளைவுகளை யோசித்த அடுத்த நொடி கபடு மனத்தில் வந்துவிடுகிறது.

இயேசுவிடம் வருகின்ற நத்தனிNயுல், 'ரபி, நீரே இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என மொழிகிறார். இயேசுவைக் கண்ட அந்த நொடியில் அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்கின்றார். கபடற்றவர்கள் தாங்கள் காண்பதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வார்கள். கபடற்ற இடையர்கள் வானதூதர்களின் வார்த்தைகளை நம்பித் தங்கள் ஆடுகளை விட்டுவிட்டு பெத்லகேம் செல்கின்றார்கள். ஆனால், ஏரோதால் விண்மீனைப் பின்தொடர்ந்தும், ஞானியரைப் பின்தொடர்ந்தும் செல்ல முடியவில்லையே?

இன்று, 'இதைவிடப் பெரியவை' என்று இயேசு சொல்பவை எவை?

அ. கபடற்ற உள்ளம்

ஆ. மனதில் உள்ளதை அப்படியே பகிரக்கூடிய நண்பரின் உடனிருப்பு

இ. இயேசுவைக் கண்டவுடன் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 யோவா 3:11-21), 'நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்' என்றும், 'கடவுள் முன்னிலையில் உண்மையால் நம் மனத்தை அமைதியுறச் செய்ய முடியும்' என்றும் சொல்வதன் வழியாக, நம் உள்ளத்தில் இருக்கும் அன்பு நம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்றும், நம் மனத்தை உண்மையால் (கபடற்ற தன்மையால்) மட்டுமே அமைதியாக்க முடியும் என்றும் சொல்கிறார் யோவான்.

2 comments:

  1. புத்தாண்டின் தொடக்க நாட்களில் இருக்கும் நமக்கு,நமது வாக்குறுதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பல விஷயங்களைப் பகிர்கிறார் தந்தை.முதல் வாசகத்தில் யோவானின் வாய்வழியே உண்மையான அன்பை வெளிப்படுத்தும் முறையையும்,நம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள தேவையான அமைதி பற்றியும் கூறும் தந்தை,நற்செய்தி வாசகத்தில் யோவானின் வாய்வழியாக மனிதனுக்குத் தேவையான கபடற்ற உள்ளம்,ஒளிவு மறைவற்ற ஒரு நண்பனின் உடனிருப்பு, மற்றும் இயேசுவைக்கண்டவுடன் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பற்றிக்கூறுகிறார்.இத்தகைய பண்புகளைத் தன்னிடத்தில் கொண்ட ஒருவரே அடுத்தவரின் பின் புலம் குறித்து தாழ்வாகப்பேசாமல்,அவரை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்பதை இப்பதிவின் வழியே சொல்ல வரும் தந்தையும் கூட இறைவனின் கொடையே! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. " இதைவிட ப்பெரியவை" பொதிந்த எளிய
    உள்ளத்தை, இறைவா! எமக்குத் தா!
    "கட்டற்ற தன்மை" விளக்கம் காவியமானது... நன்றி சகோதரரே!

    ReplyDelete