Tuesday, January 29, 2019

விதைகள் உவமை

இன்றைய (30 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 4:1-20)

விதைகள் உவமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைகள் உவமை அல்லது விதைப்பவர் உவமையையும், அதற்கு இயேசு தரும் விளக்கத்தையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) உவமை, (ஆ) உவமைகளின் நோக்கம், (இ) உவமையின் விளக்கம்.

அ. உவமை

இந்த உவமையில் நான்கு காரணிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

1. விதைப்பவர்
2. விதைகள்
3. நிலம்
4. புற எதிரிகள்

1. விதைப்பவர் - இவர் ஒரே ஆள்தான். ஆனால், விதைகள் சரியாகப் பலன் கொடுக்காததற்கு இவரும் ஒரு காரணரே. இவர் அகலக் கை படைத்தவர். பணக்காரர். ஆகையால்தான், விதைகளை அள்ளி அவர் விருப்பம்போல தெளிக்கிறார். சிக்கனக்காரர் என்றால் சரியாக விதைகளை அளந்து, நல்ல நிலத்தில் மட்டும் தெளித்திருப்பார். இவரின் அகலக்கையே இவரைக் கடவுள் எனச் சொல்லிவிடுகிறது. ஏனெனில் கடவுள்தான், 'நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவன் ஒளிரவும் மழை பொழியவும் செய்கின்றார்.'

2. விதைகள் - விதைகள் அனைத்தும் ஒரே வகை வீரியம் கொண்டவையாகத் தெரிகின்றன. ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஒரே பலனைத் தராமல் சில முப்பது, சில அறுபது, சில நூறு எனத் தருவதைப் பார்த்தால் விதைகளின் வீரியத்திலும் வித்தியாசம் இருப்பது போல இருக்கிறது. ஆனால், இறைவார்த்தையை விதைகளுக்குப் பொருத்திப் பார்த்தால் இறைவார்த்தையின் வீரியம் ஏற்றத்தாழ்வாக இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

3. நிலம் - வழியோரம், பாறை, முட்புதர், நல்ல நிலம்.

மக்கள் நடக்கும் வழி வழக்கமாக இறுகிப்போய் இருக்கும். அதில் விழும் விதை நிலத்திற்குள் செல்லாது. மேலும் பறவைகளின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும். பாறை நிலம். மேலோட்டமாக மண். கொஞ்சம் தாண்டினால் பாறை. பாதி வழி செல்லும் வேர் மீதி வழி செல்ல முடியாது. முட்புதர். பசுமையான இடம்தான். ஆனால், விதைக்குத் தேவையான ஊட்டத்தை முள் எடுத்துக்கொள்வதோடு ஒரு கட்டத்தில் விதைக்கு இடம் இல்லாமல் நெருக்கிவிடும். நல்ல நிலம். நன்றாக உழப்பட்டு, உரமிடப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட நிலம். விரிந்துகிடக்கும் மண் அப்படியே விதையை விழுங்கி விடுகிறது. பலன் தர ஆரம்பிக்கிறது விதை. எல்லா விதைகளையும் நல்ல நிலம் ஒன்று போல வாங்கினாலும் பலன் கொடுப்பது என்னவோ விதைகளைப் பொறுத்தே இருக்கிறது.

4. புற எதிரிகள் - வழியோரத்தில் பறவைகள், பாறை நிலத்தில் பாறை, முட்புதர் நடுவில் முட்செடிகள் என புற எதிரிகளும், நல்ல விதைக்கு புற எதிரிகளும் இல்லை.

ஆ. உவமைகளின் நோக்கம்

காண இயலாத ஒன்றைக் காண்பதிலிருந்து சுட்டிக்காட்டுவதே உவமையின் இயல்பு. எடுத்துக்காட்டாக, 'சிம்சோன் சிங்கத்தைப்போல வலிமையானவன்' என்ற வாக்கியத்தில். சிங்கத்தின் வலிமை நமக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாத ஒன்றான சிம்சோனின் வீரத்தைப் பதிவு செய்வதாக இவ்உவமை அல்லது உருவகம் அமைகிறது.

இ. உவமைகளின் விளக்கம்

மாற்குவின் குழுமத்திற்கு இறைவார்த்தையைப் பற்றிய ஒரு போதனை தேவைப்பட்டது. ஆகையால், இந்த உவமையைப் பதிவு செய்து இயேசுவின் சொற்களாலேயே விளக்குகிறார் மாற்கு. இறைவார்த்தையை ஏற்றுப் பலன் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனையாக விளக்கம் அமைகிறது.

இந்த நற்செய்தி வாசகம் நமக்கு என்ன சொல்கிறது?

இன்றைய கால கட்டத்தில் இறைவார்த்தையை நாம் பல வழிகளில் ஏற்கிறோம். நம் வாழ்வு ஏறக்குறைய மூன்றாம் நிலம்போலத்தான் இருக்கிறது. நிறைய சிக்கல்களுக்குள் விழுகிறது இறைவார்த்தை. எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் விளையாடும்போது நாம் அடிக்கும் பந்து முட்புதருக்குள் விழுகிறது என வைத்துக்கொள்வோம். நம்மால் பந்தைப் பார்க்க முடியும். ஆனால், பந்தை நெருங்க முடியாது. அப்படி நெருங்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தடையாகக் கடக்க வேண்டும். பந்தைப் பார்த்தவுடன் நேரடியாக நாம் அதை நோக்கிக் கையை நீட்டினால் முட்கள் நம் கைகளையும், முகத்தையும், கால்களையும் காயப்படுத்திவிடும். அப்படி அனைத்தையும் விலக்கி அருகில் சென்றாலும் அந்த பந்து ஏற்கனவே அங்கிருந்த முள் ஒன்றால் காற்றிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

முட்புதர் இருக்கின்ற நிலம் நல்ல நிலம்தான். நல்ல நிலமாய் அது இருப்பதால்தான் அங்கே முள் வளர்கிறது. ஆனால், தேவையற்ற அந்த முள் விதையின் தேவையைத் திருடிவிடுகிறது.

ஆக, இன்று இறைவார்த்தை என்னில் விழ, எதெல்லாம் அதை நெறித்துவிடுகிறது? என எண்ணிப் பார்ப்போம். அவற்றை ஒவ்வொன்றாக எடுக்க முற்படுவோம்.

எடுத்துக்காட்டாக, மரியாளின் வாழ்வு. கபிரியேல் தூதர் இறைவார்த்தையை விதைக்கிறார் மரியாவில். மரியாளிடமும் ஒரு முள் இருந்தது. தயக்கம். 'இது எங்கனம் ஆகும்?' என்கிறார். தூதர், 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. உன் உறவினள் எலிசபெத்தும்...' என்று அடையாளம் தர, தயக்கம் என்ற முள்ளை அகற்றி, 'ஆம்' என்கிறார். வளனாருக்கு, சந்தேகம் என்ற முள். பேதுருவுக்கு தன் பாவம் என்ற முள், பவுலுக்கு தன் பழைய வாழ்வு என்ற முள், அகுஸ்தினாருக்கு மேனிக்கேயம் என்ற முள் - முள்களை அகற்றியவர்கள் நல்ல நிலம் ஆனார்கள்.

நிலம் அங்கே பலன் தந்தது.


1 comment:

  1. எத்தனையோ முறை கேட்டதொரு உவமைதான்.எனினும் விளக்கம் கொடுக்கும் ஆட்களைப் பொறுத்து விஷயமும் மாறுகிறது என்பது உண்மை. தினம் ஆலயம் சென்றிடினும்,தினம் இறை வார்த்தை கேட்டிடினும் அவை போனமுறை நமக்குத் தந்த செய்தியை இம்முறை தருவதில்லை.காரணம் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நம் மன நிலையே! இந்த மனதென்ற நிலத்தில் போன முறை இருந்த முள் அகற்றப்பட்டு இம்முறை ஒரு புது முள் தோன்றி இருக்கலாம். முள்ளே இல்லாமல் இருக்க வழியுண்டா? இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் ஓவர் என்றே எண்ணுகிறேன்.தந்தை குறிப்பிட்டுள்ள தயக்கம்,சந்தேகம்,பயம்,பாவம்,மேனிக்கேயம்... அத்தனையின் ஒட்டுமொத்தக் கலவையும் ஒருவரிடமிருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.நம் முன்னோடிகள் பலர் முட்கள் நிரம்பிய நிலங்களை நல்ல நிலங்களாக்கிச் சென்றுள்ளார்கள்.அவர்கள் வழி நடப்போம், நம்பிக்கையின் கை கோர்த்து. அழகானதொரு படைப்பு.ஒரு மாணவனைத் தேர்வுக்குத் தயார் செய்யும் முறையில் கொடுத்ததொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete