Thursday, January 31, 2019

எதுவும் செய்யாமலே

இன்றைய (1 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 4:26-34)

எதுவும் செய்யாமலே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'தானாக வளரும் விதை,' 'கடுகு விதை' என்ற இரண்டு உவமைகளை முன்வைக்கின்றார். இரண்டு உவமைகளிலும் விதைத்தவரின் வேலை விதைப்பதோடு நின்றுவிடுகின்றது. மற்றவை விதைக்குள்ளே இருந்து தானாக நடந்தேறுகின்றன.

இறையரசைப் பற்றி இது சொல்வது என்ன?

இறையரசின் விதைகளை இயேசு விதைத்துவிடுகின்றார். அவ்விதைகள் தங்களிலேயே வீரியம் கொண்டவை. ஆக, யாரும் எதுவும் செய்யாமலே அவைகள் வளர்ந்துவிட வாய்ப்பு உண்டு.

இயேசுவின் இவ்வுவமைகள் இறையரசின் பண்பைக் குறிக்கின்றனவே தவிர, நாமும் ஒன்றும் செய்யாமல் இருக்கலாம் என்ற பொறுப்பற்ற நிலையை அவை சொல்லவில்லை.

ஒரு சாதாரண விதையே தன் இயல்பாக மாறும் ஆற்றல் பெற்றிருக்கின்றது என்றால், நம் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருக்கும் இறைவனின் இயல்பை நோக்கி நாம் வளர்கிறோமா? என்பதுதான் இங்கே கேள்வி.

தானாக வளரும் விதையானது, தளிர், கதிர், தானியம் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது.

'உரோமை நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அது ஒரே நாளில் கட்டப்படவில்லைதான். ஆனால், அன்றன்றைக்கு உள்ள வேலையை அவர்கள் செய்திருக்கத்தான் செய்வார்கள். அன்றன்றைய வேலையைச் செய்யாமல் ஒரே நாளில் நகரமாக நாமும் உருவெடுத்துவிட முடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் தன் திருச்சபையினர் சிக்கல்களை எதிர்கொண்ட விதத்தைப் பாராட்டுகின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், அவர்களின் அந்தச் செயல்பாட்டை ஒரு மாபெரும் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றார்.

ஒவ்வொரு நாளும் எப்படி வளர்வது என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் அழகாச் சொல்கிறது:

'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே - அதாவது, எடுத்த காரியத்தில் நிலையாய் - குடியிரு. நம்பத் தக்கவராய் வாழ். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு.'

கொஞ்சம் கொஞ்சமாய், மெதுமெதுவாய் வாழ்வதே வாழ்க்கை.

அரக்கப் பரக்க, வேகமாக ஓடுவது வாழ்க்கை அல்ல. அது வளர்ச்சியும் அல்ல.

பிறக்கின்ற இந்தப் பிப்ரவரியில் இன்னும் கொஞ்சம் வேகம் குறைப்போம்.


3 comments:

  1. Good Reflection Yesu

    ReplyDelete
  2. ஆம் கொஞ்சம் கொஞ்சமாய்,
    மெது மெதுவாய் வாழ்வதே வாழ்க்கை!
    நன்றி.அருட்பணி.யேசு.

    ReplyDelete
  3. தானாக வளரும் விதை போன்று யார் கையையும் எதிர்பாராமல் தன்னை மட்டுமே நம்பி வளர்பவரும் உண்டு; விதைப்பவன் விதைக்கும் விதைபோன்று தன் பெற்றோரால் பாலும்,தேனும் பக்குவமாக ஊற்றிப்பேணப்பட்டு வளர்பவரும் உண்டு.எப்படி வளர்ந்திடினும் சிக்கல்களோடு வளரும் ஒரு வளர்ப்பே தீவிரத்தைக்காட்டுகிறது. என்கிறார் தந்தை.இந்த வளர்ப்பைத்தான் " ஆண்டவரை நம்பு.......உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு" என்று பதிலுரைப்பாடலும் சொல்கிறது.அரக்கப்பரக்க ஓடி மரநிழலில் தூங்கிப்போன முயலாயிராமல்,அடியடியாய் எடுத்துவைத்து பந்தயத் திட்டைத் தொட்ட ஆமையாக வாழ்வதே வாழ்க்கை; அதுவே வளர்ச்சி.மாதத்தின் முதல் நாளில் மங்கள நாதமாக வரும் தந்தையின் வார்த்தைகளுக்கு நன்றிகளும்; வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete