Tuesday, January 8, 2019

மழுங்கிப் போயிருந்தது


மழுங்கிப் போயிருந்தது

'இரவில் அல்லது தனிமையான ஓர் அறையில் திடீரென ஓர் உருவத்தை நாம் கண்டால், 'பேய்' என்று அலறுகிறோமே தவிர, 'கடவுளே' என்று கும்பிடுவதில்லை' என்பது நான் அண்மையில் இரசித்த டுவிட்டர் கீச்சொலி. என்னதான் நாம் கடவுளை முழுக்க முழுக்க நம்பினாலும், அவர் நம் முன் தோன்றமாட்டார் என்பதே அதைவிடப் பெரிய நம்பிக்கையாக நிற்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படி ஒரு உருவத்தைக் கடலில் பார்த்த இயேசுவின் சீடர்கள், 'அது பேய்' என்று அலறுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நேற்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுகிப் பெருகி, பசும்புல் தரையில் அமர வைத்து மக்களைப் பசியாற்றும் இயேசு, மக்கள் கூட்டத்தையும், தொடர்ந்து சீடர்களையும் அனுப்பவிட்டு - 'கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு' எனப் பதிவு செய்கின்றார் மாற்கு - இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். இறைவேண்டல் முடித்துவிட்டு திரும்புகிறார். படகு நடுக்கடலில் இருக்கின்றது. அவர்கள் அங்கே தண்டு வலிக்கப் பெரிதும் வருந்த, இவர் தனியே ஒய்யாரமாகக் கடலில் நடந்து அவர்களைக் கடக்க விரும்புகிறார்.

அவர்களைக் கடந்து செல்ல அவர் ஏன் விரும்பினார்? என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் கடந்து செல்வதைக் கண்டு சீடர்கள், 'அலறுகிறார்கள்,' 'அஞ்சிக் கலங்குகிறார்கள்.' தங்கள் வயிற்றுக்கு உணவு கொடுத்தவர் பேயாகத் தெரிகின்றது அவர்களுக்கு. ரொம்ப சிம்பிள் லாஜிக். இயேசுவை அவர்கள் அங்கே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான்.

எதிர்பார்ப்பை உடைப்பதுதானே அற்புதம். 'ஐயாயிரம் பேர் பசியாறுவார்கள்' என சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்போது அற்புதம் நடந்தேறுகிறது. 'துணிவோடு இருங்கள்' என்று சொன்ன இயேசு அவர்களோடு படகில் ஏறிக்கொள்கின்றார். 

சீடர்களின் உணர்வுகளை ஐந்து வார்த்தைகளில் சொல்கின்றார் மாற்கு: (அ) 'அலறினார்கள்,' (ஆ) 'அஞ்சிக் கலங்கினார்கள்,' (இ) 'மலைத்துப் போனார்கள்,' (ஈ) 'புரிந்து கொள்ளவில்லை', (உ) 'உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.'

மாற்கு நற்செய்தியாளர் சீடர்களை கொஞ்சம் க்ரே ஸ்கேலில்தான் வரைகின்றார். சீடர்களின் முதல் புரிந்துகொள்ளாத்தன்மையை இங்கே பார்க்கின்றோம்.

'மழுங்கிய உள்ளம்' - 'மழுங்குதல்' என்ற வார்த்தையை பெரும்பாலும் நாம் கூர்மையானவற்றின் எதிர்ப்பதமாகப் பார்க்கின்றோம். மழுங்கிய கோடரி மரத்தை வெட்டுவதில்லை. மழுங்கிய கத்தி காய்கறிகள் வெட்டுவதில்லை. அப்படியே வெட்ட முயன்றாலும் அது நிறைய கைவலியைக் கொடுப்பதோடு, நாம் வெட்டுகின்ற பொருளையும் பாழாக்கிவிடுகிறது - தக்காளியைக் கூர்மையான கத்தியால் வெட்டினால் அழகாக இருக்கிறது, மழுங்கிய கத்தியால் வெட்டினால் நம் முகத்தில் பீய்ச்சி அடித்துவிடுகிறது - இல்லையா?

எப்போது கத்தி மழுங்குகிறது? அதிகப்படியாக பயன்பாட்டிற்கு உட்படும்போது, அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும்போது. பயன்பட்டு மழுங்கினால் பரவாயில்லை. தவறாகப் பயன்படுத்தப்பட்டு மழுங்கக்கூடாது.

'உள்ளம் மழுங்குதல்' என்பது 'புரிந்துகொள்ளும் தன்மை இழத்தல்' என்பதன் உருவகமே. இயேசுவை மிக எளிதாக, ஒரு சாதாரண நபராக எடுத்துக்கொள்கிறார்கள் சீடர்கள். அவர்கள் சில மணிநேரங்களுக்கு முன் கண்ட அற்புதம் அவர்களின் புரிதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் கண்ட அற்புதம் அவர்களின் புரிதலைக் கூர்மைப்படுத்தவில்லை. 'இது என்ன விந்தை!' என அவர்கள் ஆச்சர்யப்படவில்லை. 'ஆகா, இவரல்லவா ஆண்டவர்!' என்று இயேசுவை உச்சி முகரவில்லை. 'பேய்' என அஞ்சுகிறார்கள்.

இன்று நான் என் ஆன்மீக வாழ்வில் எப்படி இருக்கிறேன்? இறைவனையும், அவரின் அருஞ்செயல்களையும் நான் அன்றாடம் அனுபவித்தாலும், அவரைக் கண்டுகொள்ளாமல் என் மனம் சில நேரங்களில் மழுங்கியிருப்பது ஏன்?

இதை நம் மனித உறவுகளில் பொருத்திப் பார்த்தால், 'மழுங்கிய உள்ளத்தால்'தான் சந்தேகம், ஒப்பீடு, பொறாமை வருகிறது. வாழ்வின் நிறைவான பொழுதுகளைத் திரும்பிப் பார்த்தால், கடல் போன்ற அலையடிக்கும் பொழுதுகளில் என் உள்ளம் கூர்மையாகும்.

இறுதியாக, இயேசுவின் பதிலுணர்வு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் மழுங்கிய உள்ளத்தை, புரிந்துகொள்ளாத்தன்மையை, அலறலை, அச்சத்தைக் கடிந்துகொள்ளவில்லை. ஒரு புன்னகையோடு படகில் ஏறிக்கொள்கிறார். 

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு 'நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்' என்ற கதைதான் நடத்த முடியுமே தவிர, 'ஆஸ்கர் வைல்டின் பாடல்களை' நடத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

புன்னகை - நம் வாழ்வில் நாம் சந்திக்கும் மழுங்கிய உள்ளங்களைக் கடக்க உதவும் படகு.


2 comments:

  1. புன்னகைப்போம்!
    நன்றி!

    ReplyDelete
  2. "வாழ்வின் நிறைவான பொழுதுகளைத் திரும்பிப்பார்த்தால்,கடல் போன்ற அலையடிக்கும் பொழுதுகளில் என் உள்ளம் கூர்மையாகும்,".... வாழ்ந்து பார்த்தவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாய்ண்ட்.
    சீடர்களின் மழுங்கிய உள்ளத்தை,புரிந்துகொள்ளாத் தன்மையை, அலறவைத்த,அச்சத்தை இயேசுவின் ஒரு புன்னகை மாற்றிப்போடுமெனில்,அன்றாடம் நான் சந்திக்கும் என் சகோதரரின் பிரச்சனைகளுக்கு ஏன் என் புன்னகை ஒரு மாற்றாக,மருந்தாக அமையக்கூடாது? "புன்னகைப்படகு"...படகோட்டி தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete