Tuesday, October 9, 2018

சோதனைக்கு உட்படுத்தாதேயும்

நாளைய (10 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:1-4)

சோதனைக்கு உட்படுத்தாதேயும்

'ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம்' என்று சொல்லப்படும் 'பரலோகத்திலிருக்கிற எங்கள் தந்தையே' என்பது வழிபாட்டிலும், விவிலியத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும்போது, மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக கஷ்டப்படும் ஒரு வாக்கியம்:

'எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்!'

இதை நாம், 'எங்களை சோதனையிலிருந்து விடுவித்தருளும்!' என்றும் மொழிபெயர்க்கிறோம்.

'சோதனை வரக்கூடாது' என்று செபிக்க வேண்டுமா? அல்லது 'சோதனையில் விழுந்துவிடக்கூடாது' என்று செபிக்க வேண்டுமா? என்ற குழப்பம் இதன் பின்புலத்தில் இருக்கின்றது.

'எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று நாளைய நற்செய்தி வாசகத்தில் உள்ளதால் அப்படியே எடுத்துக்கொள்வோம்.

'சோதனை' - முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தபோது அவர்கள் இறைவனை சோதிக்கின்றனர். மேலும் அவர், நாற்பது ஆண்டுகளாக பாலைநிலத்தில் அவர்களை நடக்கச் செய்து அவர்களைச் சோதிக்கின்றார். சாலமோன் அரசரின் ஞானத்தை சேபா நாட்டு அரசி சோதிக்கின்றார். புதிய ஏற்பாட்டில் இயேசு அலகையால் சோதிக்கப்படுகின்றார்.

இவ்வாறாக, 'சோதனை' பற்றிய பல புரிதல்கள் விவிலியத்தில் காணக்கிடக்கின்றன.

'நாம் பாவத்தில் விழுவதற்காக கடவுள் நம்மை சோதிப்பதில்லை' என்கிறார் யாக்கோபு (1:13). 'அவர் நம் தகுதிக்குமேல் நம்மை சோதிப்பதில்லை' என்கிறார் பவுல் (1 கொரி 10:13).

மிட்டாய்கள் நிரம்பி வழியும் கடைக்குள் ஒரு தாய் தன் குழந்தையை அழைத்துச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்தத் தாய் செய்வது என்ன? அவளின் குழந்தையை சோதனைக்கு அழைத்துச் செல்கிறாள். இல்லையா?

தவறுவதற்கான (தவறு என்று ஒன்றை நினைப்பதே தவறு!) எல்லா வாய்ப்புகளையும் நம்மைச் சுற்றி உருவாக்கி இருக்கும் கடவுளிடம், 'என்னை சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று சொல்வது மேற்காணும் உதாரணம் போல இருக்கிறது. ஆனல், இதற்கு அடுத்து வரும் வரியையும் இணைத்துப் பார்க்க வேண்டும்: 'தீமையிலிருந்து விடுவித்தருளும்'

சோதனையிலிருந்து தப்பிக்க, அல்லது சோதனையில் விழுந்தவிடாமல் இருக்க நாளைய முதல் வாசகம் (கலா 2:1-2,7-14) இரண்டு வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தருகின்றது:

அ. இலக்குத் தெளிவு

பவுலின் இலக்குத் தெளிவு. தன் பணி புறவினத்தாருக்கு என்று உறுதி செய்கின்ற பவுல் அந்த இலக்கில் தெளிவாக இருக்கின்றார். அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தன் தடம் மாறாமல் செல்கின்றார். பல நேரங்களில் இலக்கு தெளிவில்லாதபோது நாம் சோதனையில் எளிதாக விழுகின்றோம்.

ஆ. அடுத்தவர்களை திருப்திப்படுத்தாமல் இருத்தல்

பேதுரு தன் உடன் இருக்கும் யூதர்களை திருப்திப்படுத்துவதற்காக வெளிவேடம் கொண்டிருந்ததை பவுல் தன் திருமடலில் எழுதுகின்றார். பவுலின் தைரியம் என்னைக் கவர்கிறது. 'நீ எல்லாரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் ஜஸ்க்ரிம்தான் விற்க வேண்டும்' என்பார் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். 'அடுத்தவர்கள் வருத்தப்படுவார்கள்' என நினைத்து தங்களுக்குத் தேவையற்றதை, தங்கள் உடலுக்கு ஒவ்வாததை உண்டு கஷ்டப்பட்டவர்களை நான் பார்த்துள்ளேன். 'அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்' என்று நினைத்து, அடுத்தவர்களை திருப்திப்படுத்திக்கொண்டே இருந்தால் நாம் தான் இறுதியில் கஷ்டப்படுவோம். ஏனெனில், அடுத்தவர்களை நாம் ஒருபோதும் திருப்திப்படுத்தவே முடியாது. பல நேரங்களில் நாம் அப்படி முனையும்போது, அவர்களை திருப்திப்படுத்துவதைவிட அவர்களை காயப்படுத்துகின்ற நிலைக்கும் ஆளாவோம். ஆக, 'நினைப்பது சரியா' அதைத் தெளிவாக - அடுத்தவர் திருப்திபட்டாலும், படவில்லையென்றாலும் - செய்து முடிக்கும்போது நாம் சோதனையில் விழ வாய்ப்பில்லை. பாவம், பேதுரு. யாக்கோபு வந்தபோது யாக்கோபை திருப்திப்படுத்த நினைக்கிறார். புறவினத்தார் வந்தபோது அவர்களைத் திருப்திப்படுத்த நினைக்கிறார். ஆனால், சில நேரங்களில் இப்படிப்பட்டவர்கள்தாம் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். 'எது தேவையோ அதுவே தர்மம்' என்பது இவர்களின் மந்திரமாக இருக்கும்.

நாளையும், என்றும் இயேசு கற்பித்த இறைவேண்டலை செபிக்கும்போது,

'சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று செபிக்கும் நேரத்தில், 'சோதனையில் விழுந்தவர்களை நாங்கள் தீர்ப்பிடாதேயும்' என்ற பரந்த மனமும் வேண்டுவோம்.


3 comments:

  1. நிச்சயமாக வேண்டுகிறோம்...
    தீர்ப்பிடாத பரந்த மனதிற்காய்
    வாழ்விக்கும்,.. வழிநடத்தும்.பகிர்வு...
    வாழ்த்துக்கள்! நன்றி

    ReplyDelete
  2. " சோதனை" யில் விழுவதும்,விழுந்த சோதனையினின்று எழுவதும்,பின் மீண்டும் விழுவதும்,மீண்டும் எழுவதும் ஆசாபாசம் மிக்க எந்த மனிதனுக்கும் தவிர்க்க இயலாதது. நோய் என்று ஒன்று வந்தால் தான் ஒரு மனிதனுக்கு ' நோய் எதிர்ப்பு சக்தி' வருகிறது என்பதுபோல் ஒருவன் சோதனைக்குட்படும் போது தான் அதைப்பற்றிய அறிதலும்,புரிதலும் ஏற்படுகிறது.ஆனால் அதற்காக நாமே அதை வருவித்துக்கொள்வது தீயில் விழுவது போலத்தான்.இதிலிருந்து நம்மைத்தற்காத்துக்கொள்ள நாம் கவனிக்க வேண்டிய இரு விடயங்களைத் தந்தை தெளிவாகச் சொல்கிறார்.1. சென்று சேர வேண்டிய இடத்திற்கான தெளிவு.2. எதிரில் இருப்பவர்களைத் திருப்தி படுத்த வேண்டும்தான். ஆனால் அதில் நமது திருப்தியோ,மகிழ்ச்சியோ அடகு போய்விடாமல் பார்த்துக்கொள்வது..எல்லாவற்றுக்கும் மேலாகத் தந்தையின் அந்த இறுதி வரிகள்.... "சோதனைக்கு உட்படுத்தாதேயும்" என்று செபிக்கும் நேரத்தில் " சோதனையில் விழுந்தவர்களை நாங்கள் தீர்ப்பிட விடாதேயும்" என்ற பரந்த மனமும் வேண்டும்.".... இதற்கு மேல் ஒரு செபம் தேவையா என்ன? எதையுமே வித்தியாசமாக யோசிக்கும் தந்தை இதையும் அப்படியே செய்திருக்கிறார்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. சோதனைக்கு உடபடுத்தாதேயும்'
    Symbol---- very apt...
    Great!

    ReplyDelete