Wednesday, October 31, 2018

புனிதர் அனைவர்

புனிதர் அனைவர் பெருவிழா

யார் புனிதர்கள்?

நாம் எல்லாருமே புனிதர்கள், இப்போது வரை. ஆனால் இன்னும் நாம் புனிதர்களாக நம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை - நமக்கு, பிறருக்கு, இந்த உலகத்திற்கு. ஆனால் கடவுளுக்குத் தெரியும் நாம் எந்த சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று. அவருக்குத் தெரியும் நாம் யாரைப்போல உருப்பெற்றவர்கள் என்று. அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரியும் நாம் புனிதர்களென்று!

இதோ! கொஞ்சம் கொஞ்சமாக நாம் புனிதர்களாக வளர்கிறோம். நம்மிலிருந்து நாம் வெளியே வருகிறோம். நம்  கூட்டை நாமே கொத்திக் கொத்தி உடைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே படைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளே நம் உள்ளிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்மால் மட்டும் தான் அதை உணர முடியும் - கொஞ்சம் கொஞ்சமாக, நம் இயல்பு நிறைவு பெறும் போது!

அப்படியென்றால், யார் புனிதர்?

புனிதர் என்பவர் மனச்சுதந்திரம் பெற்றவர். தன் வாழ்வின் ஆதாரத்தோடு தொடர்பு கொண்டிருப்பவர். தன் மையம் எது என்ன என்பதைக் கண்டுகொண்டவர்.

புனிதருக்குத் தெரியும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதும் எங்கே செல்கிறோம் என்பதும்! தான் வலுவற்றவன் தான் என்றாலும், தான் படைக்கப்பட்டது நிரந்திரத்திற்கு என்பதை அவருக்குத் தெரியும்!

புனிதர் என்பவர் ஒரு சுதந்திரப் பறவை!

அவர் தன் வேர்களிலிருந்தும், தன் குணாதிசயத்திலிருந்தும், தன் வரையறைகளிலிருந்தும், தன் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் அல்ல - இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டால் தான் அவர் புனிதரா? - புனிதர் என்பவர் இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவைகள் வழியாகவும், இவைகளிலும் சுதந்திரமாகக் கடந்து செல்பவர்.

புனிதர் தன் உள்ளார்ந்த போராட்டங்களை வென்று வெற்றிகரமாக வெளியே வந்தவர்!

புனிதர் எந்த நிலையிலும் தன்னை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினையாதவர்!

புனிதர் கடவுளை நோக்கி கதறியழத் தெரிந்தவர். சின்னக் குழந்தை போல எல்லாவற்றையும் நம்பத் தெரிந்தவர்.

ஆனால் புனிதர் எதார்த்தமானவர். வாழ்வின் எதார்த்தங்கள் அவருக்குப் பிடிக்கும். வாழ்வின் மாயைகளையும், பதின்பருவத்துக் கனவுகளையும், இலக்குகளையும் அறவே விலக்கியவர். தன்னோடும், தன் அருகில் இருப்பவரோடும் சமாதானம் செய்து கொள்பவர். புனிதர் தன்னிடம் இல்லாததை நினைத்து வருந்துபவர் அல்ல. இருப்பதை வைத்து மகிழ்பவர்.

புனிதருக்கு நடிக்கத் தெரியாது. முகமூடி அணியத் தெரியாது. மற்றவரின் வாழ்வைப் போல தன் வாழ்வை அவர் அமைத்துக் கொள்ள ஒருபோதும் அவர் நினைப்பதில்லை. மற்றவரைப் போல வாழ வேண்டும் என்றும் எண்ணுவதில்லை. தன்னைப் போல இருப்பதே தனக்குப் போதும் என்று உறுதியாக நம்புபவர்.

புனிதருக்கு தன் உண்மை என்ன என்று தெரியும்!

தான் யாரென்று தெரியும்!

காற்று நிரப்பப்பட்ட பலூன் அல்ல அவர். காற்றே இல்லாத பலூனும் அல்ல அவர். ஆற்றலோ, ஆசைகளோ, ஆண்மையோ இல்லாதவர் அல்ல அவர்.

புனிதர் ஒரே கடவுள் இருப்பதாக நம்புபவர். விதியின் மேலும், மற்றொரு உயர்ந்த சக்தி மேலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. வாழ்வில் நடக்கும் அனைத்தும் கடவுளின் பொம்மலாட்டம் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, தானே உலகைப் படைத்து அதை பரிசாக தன் கடவுளுக்குப் படைப்பவர் அவர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், சந்திக்கும் ஒவ்வொரு நபரிலும், சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும், வியர்வையிலும் கடவுள் ஒளிந்திருப்பது அவருக்குத் தெரியும்.

புனிதர் பொருட்களையும், உடலையும், உடலின் மணத்தையும், சுகத்தையும், அதன் நிறத்தையும், வழுவழுப்பையும் அன்பு செய்பவர். வாழ்வின் எதார்த்தங்கள் ஒரு இசை போல ஒழுங்கானவை என்றும் அதே நேரத்தில் கடினமானவை என்பதையும் உணர்ந்தவர்.

புனிதர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி நிற்பவர் அல்ல. சாதாரணமானவர்களோடு சாதாரணமாக நிற்பவர்.

வாழ்வோடு முழுமையாகக் கலந்தவர். தன் உடலின் உணர்வுகளோடு வாழத் தெரிந்தவர்.

ஆனால் அவர் எதையும் மிகைப்படுத்துவதில்லை.

புனிதர் சாந்தமானவர். ஆகையால் தான் இந்த உலகை அவர் உரிமையாக்கிக் கொள்கிறார். அங்கே மகிழ்ச்சியாக அவர் வாழ்கிறார்.

புனிதர் தனக்குத் தானே சிரிக்கத் தெரிந்தவர். தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தயங்காதவர்.

புனிதர் தன்னால் இயன்றவற்றை முழுமையாகச் செய்பவர் - தன் முழு ஆற்றலோடு செய்பவர். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார். இந்த உலகத்தைத் தான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்றும் மீட்க முடியும் என்றும் அவர் நினைப்பதில்லை. புனிதர் தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை.

புனிதர் மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாதவரையும் அன்பு செய்பவர். அவைகளோடு தான் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தவர் அவர்.

புனிதர் உண்மையானவர்.

புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை மறந்து விடுவார்கள்! அவர்கள் கடவுளை திட்டுவார்கள்! அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று. ஏனெனில் அவரும் ஒரு கடவுளே!

இனிய திருநாள் வாழ்த்துக்கள்!

புனிதர்களாகிய உங்கள் அனைவருக்கும்!

3 comments:

  1. மாண்பு மிகு புனிதரே! அடியேனின் பணிவான வாழ்த்துகளும், வணக்கங்களும்!🙏..
    மேற்சொன்ன அனைத்து கருத்துகளையும் வாழ்வில் அனுபவித்த ஒருவரால் தான் இத்துணை சிறப்பாக எடுத்தியம்ப முடியும்.
    So Reverend Yesu... YOU are really great & wonderful!
    Once again A Very Happy Feast!
    B'coz you deserve the more...
    Thank you.

    ReplyDelete
  2. ' புனிதர்' என்பவரைத்தான் எத்தனை வகையாக வரையறுக்கிறார் தந்தை!( definitions) ஒவ்வொன்றுமே ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது மட்டுமல்ல; ஒவ்வொன்றையும் என்னோடு இணைத்துப்பார்க்கவும் முடிகிறது. எப்படித்தான் தந்தையால் இத்தனை விடயங்களைப் பட்டியலிட முடிந்ததோ தெரியவில்லை.தந்தை கொடுத்துள்ள அத்தனை விடயங்களையும் அமைதியாகப்படித்து உள் வாங்கிக்கொண்ட பிறகு நான் என்னோடு இணைத்துப்பார்த்தது அந்த இறுதி வரிகளைத்தான்..." புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை மறந்து விடுவார்கள்!அவர்கள் கடவுளைத்திட்டுவார்கள்! அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத்தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று. ஏனெனில் அவரும் ஒரு கடவுளே!" இந்த வரிகள் எனக்கு நெருக்கமாகப்பட்டதற்கு காரணமுண்டு. திருச்சபை "புனித.ஃபிலோமினா"அவை புனிதை எனும் நிலையிலிருந்து இறக்கிவிட்டது என எனக்கு ஒரு வருத்தமுண்டு.ஆனால் இன்று, நான் இறக்கும் முன்னரே தந்தை " என்னையும் ஒரு கடவுளே" என்று சொல்லிவிட்டார்.தந்தைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் புனிதர்களாகிய நம் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்!!!

    ReplyDelete
  3. மாண்பு மிகு புனிதரே! அடியேனின் பணிவான வாழ்த்துகளும், வணக்கங்களும்!🙏..
    மேற்சொன்ன அனைத்து கருத்துகளையும் வாழ்வில் அனுபவித்த ஒருவரால் தான் இத்துணை சிறப்பாக எடுத்தியம்ப முடியும்.
    So Reverend Yesu... YOU are really great & wonderful!
    Once again A Very Happy Feast!
    B'coz you deserve the more...
    Thank you.

    ReplyDelete