Monday, October 1, 2018

காவல் தூதர்கள்

நாளைய (2 அக்டோபர் 2018) நற்செய்தி (மத் 18:1-5,10)

நாளை தூய காவல் தூதர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர்கள் யார்?

காவல் தூதர்கள் பற்றிய புரிதல் தமிழ் மரபிற்கு எளிதானது. ஏனெனில், நம் ஊர்க் கிராமங்களில், 'எல்லை தெய்வங்கள்' என்ற ஒரு சொல்லாடல் உண்டு. ஊரில் இறந்தவர்களின் நினைவாக, ஊருக்கு வெளியே சின்னச் சின்ன தூண்கள் நடப்பட்டு, இத்தூண்களுக்கு எல்லை தெய்வங்கள் என்ற பெயரும் உண்டு. சில இடங்களில் ஒட்டுமொத்த ஆண் முன்னோர்களின் அடையாளமாக, 'கருப்பசாமியும்,' பெண் முன்னோர்களின் அடையாளமாக, 'எல்லை அம்மன்', அல்லது 'அம்மன்' இருப்பர்.

இவர்களின் வேலை என்னவென்றால், ஊரைத் தீமையிலிருந்து காப்பாற்றுவது.

எங்கள் ஊராகிய நத்தம்பட்டியில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கருப்பசாமியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாரியம்மனும் வீற்றிருக்கின்றனர். இறந்தவர்களின் கல்லறைகள் எங்கள் ஊரின் வடக்கு-கிழக்கு பகுதியில் இருப்பதால், தீய ஆவிகளின் வழியாக ஊருக்கு எந்தவொரு தீங்கும் வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை. மற்றபடி ஊருக்கு தெற்கேயும், மேற்கேயும் தெய்வங்கள் இல்லை.

கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் சிலுவைகள் நடப்படுவது கூட, 'எல்லை தெய்வ தூண்களின்' மரூஉவாக இருக்கலாம்.

ஆக, இருப்பவர்களை இருந்தவர்கள் காப்பாற்ற வேண்டும் என்பது இந்நம்பிக்கையின் பின்புலத்தில் இருக்கிறது. ஏற்கனவே நம்மோடு இருந்தவர்கள் இன்று நம்மோடு இல்லாதபோது அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். ஆக, நம் கண்களுக்குக் காணாமல் நிற்கும் இவர்கள், நாம் காணாமல் இருக்கும் அனைத்து நல்லது மற்றும் கெட்டது ஆகியவற்றின் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள், இருப்பவர்களை தீமையிலிருந்து காப்பாற்றி நன்மை நோக்கி வழிநடத்திச் செல்பவர்கள்.

இன்றும் செல்டிக் என்ற சமய மரபில் இறந்தவர்கள் எல்லாரும் நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும், அல்லது அவர்கள் நாம் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, அமரும் மண், பயன்படுத்தும் நெருப்பு என இவற்றின் மூலக்கூறுகள் ஆகிவிடுகிறார்கள் என்பதும் நம்பிக்கை.

யூத மரபில் வானதூதர் நம்பிக்கை பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதுதான் வந்தது. இயேசுவுக்கும் இந்த நம்பிக்கை இருப்பதை நாம் நாளைய நற்செய்தியில் பார்க்க முடிகிறது: 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்'.

திருப்பாடல்களிலும் இந்த எண்ணம் சில இடங்களில் மின்னுவதை நாம் பார்க்க முடிகிறது:

'நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்' (திபா 91:11-12)

இதை உருவகம் செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் குட்டி குட்டி வானதூதர்கள் தம் பிஞ்சுக் கைகளால் நம் உள்ளங்கால்களைத் தாங்குகின்றனர்.

கல்லின் மேல் மோதுதல் என்பது நம் கவனக் குறைவின், மூளைக்கும் காலுக்கும் உள்ள செயல்திறன் இணைப்பு குறைவின் விளைவு. மூளை தவறாகக் கணக்கிட்டாலும், நம் கவனம் சிதறுண்டாலும் இந்தக் குட்டிப்பூக்கள் நம் விரல்களை, கால்களைத் தாங்கிப் பிடித்துக்கொள்கின்றனர்.

இந்த உருவகம் நமக்குச் சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது. என்ன?

நாம் கால் வைக்கும் இடத்தை, நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைப் பற்றி மிகக் கவனமாக நாம் இருக்க வேண்டும்.

தேவையற்ற இடங்களில், தேவையற்ற செயல்களில் நாம் ஈடுபடும்போது, நாம் இந்த குட்டி தேவதைகளையும் காயப்படுத்துவிடுகிறோம்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். விப 23:20-23) யாவே இறைவன் மோசேக்குத் தரும் செய்தியும் இதுவே:

'இதோ, நான் உனக்கு முன் என் தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு. அவர் சொற்கேட்டு நட. அவரை எதிர்ப்பவனாய் இராதே.'

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கு முன்னும், காவல் தூதர்களின் பிஞ்சுக் கரங்கள் இருப்பதாக நினைத்து எடுத்து வைத்தால், எந்தப் பாதையும் நல்ல பாதையே.

நம் வீட்டில் இறந்த நம் முன்னோர்களே தங்கள் கரங்களால் நம்மைத் தாங்குகிறார்கள் என்பதும் நல்ல புரிதலே.


1 comment:

  1. நம் கல்லறைகளில் உள்ள சிலுவைகளும்,ஊரின் கோடியிலுள்ள கருப்பசாமி மற்றும் அம்மன்களும் நமக்குச் சொல்வது..." இருப்பவர்களை இருந்தவர்கள் காப்பாற்ற வேண்டும் என்பது இந்த நம்பிக்கையின் பின்புலம்" என்பது நல்ல புரிதலைத்தருகிறது.விவிலியத்திலும்,திருப்பாடல்களிலும் வானதூதர்கள் குறித்துக் காணப்படும் வரிகள் ..."நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் வானதூதர்கள் தம் பிஞ்சுக்கரங்களால் நம் உள்ளங்கால்களைத் தாங்குகிறார்கள்" ..நம் இருப்பிடத்தை விட்டுத் தெருவில் இறங்கி நடக்கும்போது அந்தப் பிஞ்சுக்கரங்களை மனத்தில் இருத்தினால் எந்தப்பாதையும் நல்ல பாதையே! இறந்த நம் முன்னோர்களும் தங்கள் கரங்களால் நம்மைத்தாங்குகிறார்கள் என்பதும் நல்ல புரிதலே!. மறந்தும் கூட இந்த வானதூதர்களைக்...குட்டிப் பூக்களை முகம் சுளிக்க வைக்கக்கூடாது என்பதில் நம் கவனம் வைப்போம்.அழகானதொரு பதிவை,புரிதலைத் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete