Wednesday, October 17, 2018

லூக்கா மட்டுமே

நாளைய (18 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:1-9)

லூக்கா மட்டுமே

நாளைய புனிதரோடு (புனித லூக்கா) சேர்த்து நாளைய நற்செய்தி வாசகத்தை சிந்திப்போம்.

டேய்லர் கால்ட்வெல் அவர்கள் எழுதிய, 'டியர் அன்ட் க்ளோரியஸ் ஃபிஸிஷியன்' என்ற நூல் புனித லூக்கா பற்றிய ஒரு வரலாற்றுப் புதினம். மூன்றாம் நற்செய்தியின், திருத்தூதர் பணிக் நூலின் ஆசிரியராக அறியப்பெறும் லூக்கா, ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரேக்க, அறிவியலாளர், மருத்துவர் 'லூக்கானுஸ்' என்று அறியப்பட்டார். மற்ற எல்லாரையும்போல் நட்பு, காதல், தேடல் என நகர்ந்த லூக்கானுஸ் வாழ்வில் ஒரு நாள் அவர், 'என் ஆண்டவர் எப்படிப்பட்டவர்?' என்ற கேள்வியை எழுப்புகின்றார். தன் மருத்துவப் பணியில், பயணத்தில் இயேசுவின் வாழ்வு, பணி, மற்றும் இறப்பு பற்றிக் கேட்டறிந்த லூக்கா, தான் தேடும் கடவுளை இயேசுவில் காண்கிறார். இயேசுவை நேருக்கு நேர் பார்க்காத லூக்கானுஸ் இயேசுவைச் சந்தித்த அனைவரையும் - அவரின் தாய் மரியாள் உள்பட - சந்திக்கின்றார். தான் சந்தித்தவர்கள் பகிர்ந்துகொண்ட தரவுகளின் பின்புலத்தில் தன் நற்செய்தி நூலைப் படைக்கின்றார். இந்நூல் ஒரு புதினமாக இருந்தாலும் லூக்காவின் சமகால சமய, வரலாற்று, அரசியல், பண்பாட்டு சூழலைப் புரிந்துககொள்ள நமக்கு உதவுகிறது.

லூக்காவைப் பற்றிய ஒரு குறிப்பை நாளைய முதல் வாசகத்தில் (காண். 2 திமொத்தேயு 4:9-17) வாசிக்கின்றோம்: 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார்.'

இந்த ஒற்றை வாக்கியம் லூக்காவின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.

அ. லூக்கா அனைவருக்கும் பரிச்சயமானவர்

நம்பிக்கையில் தான் பெற்றெடுத்து தன் அன்புப் பிள்ளைக்கு கடிதம் எழுதுகின்ற பவுல், அதில் லூக்காவைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஆக, லூக்கா திமொத்தேயுவுக்கும் அறிமுகமானவராக இருக்கின்றார். இன்று. அறிமுகம் மிகப்பெரிய சொத்து. அறிவை விட அறிமுகம் பெரிய சொத்து என நான் நிறைய முறை நினைத்ததுண்டு. லூக்காவின் ஆளுமை எப்படிப்பட்டதாக இருக்கிறதென்றால், அவரால் பவுலோடும் உறவு கொள்ள முடிகிறது. இளவலான திமொத்தேயுடனும் உறவு கொள்ள முடிகிறது. ஆக, பெரியவர், சிறியவர் என எல்லாரோடும் எல்லாமாக இணைந்துகொள்ள லூக்காவின் ஆளுமை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

ஆ. நீங்காத நண்பர்

தன் உடன் இருந்த 'தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி, என்னைவிட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர்' என, தன் உடன்பணியாளர்களின் நீக்கத்தை எழுதும் பவுல், 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார்' என எழுதுவது, லூக்காவின் நீங்காத உடனிருப்பைக் காட்டுகிறது. சின்னச் சின்ன புரிதல்சிக்கல்கள் வந்தால் பல நேரங்களில் உறவுகள் பிரிந்துவிடுகின்றன. அப்படியான நேரத்தில், நாம் சிக்கல்களைப் பார்க்கிறோமே தவிர, உறவைப் பார்ப்பதில்லை. சின்னக் கல்லை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தால் அது உலகத்தையே மறைத்துவிடுகிறது இல்லையா? தனக்கும் பவுலுக்கும் சில நேரங்களில் புரிதல்சிக்கல்கள் வந்தாலும், மற்றவரைப் போல இல்லாமல், உறவை மேன்மையானதாக நினைத்து, தான் செய்ய வேண்டிய வேலையை மேன்மையானதாக நினைத்து தொடர்ந்து உடனிருக்கிறார் லூக்கா. இது லூக்கா நமக்குக் கற்றுத்தரும் இரண்டாம் பாடம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் திருத்தூதர்களுக்கு அறிவுறுத்தியதை தன் வாழ்வில் செய்துகாட்டினார் லூக்கா.

தான் இருக்குமிடத்தில் தங்கி, அதைவிட்டு நீங்காது, மருத்துவராக உடல்நலம் குன்றியவரைக் குணமாக்கி, நற்செய்தியை இறையாட்சியின் செய்தியாக எழுதுகின்றார் லூக்கா.

லூக்காவின் கிரேக்கமே புதிய ஏற்பாட்டின் மேன்மையான கிரேக்கம் என கருதப்படுகிறது. அவர் கதைகளை, உவமைகளைக் கையாளும் விதம், திருத்தூதர்பணிகளில் பவுல் மற்றும் பேதுருவின் உரைகளை எழுதும் விதம் ஆகியவற்றிலிருந்து அவரின் இலக்கியத்திறத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

தன்னிடம் உள்ளதை தான் தேடிய தன் இறைவனுக்கு முழுவதுமாகக் கொடுக்கிறார் லூக்கா.

இதுவே உயர்ந்த திருத்தூதுப்பணி.

2 comments:

  1. நம்பிக்கையில் பவுல் பெற்றெடுத்த அன்புப்பிள்ளை திமோத்தேயுவுக்கு தான் எழுதிய கடிதங்களில் லூக்கா என்று குறிப்பிடப்படும் " லூக்கானுஸ்" என்னையும் கூட நிறைய் பாதித்திருக்கிறார். ஒரு திருத்தூதராக,மருத்துவராக,எழுத்தாளராக, இலக்கியவாதியாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல மனிதராக....ஒரு மனிதனுக்கு எத்தனை பரிமாணங்கள் இருக்கமுடியுமோ அத்தனையிலும் பரிமளித்தவர் இவர்.சிறிய சிக்கல்களுக்கிடையே உடைந்து போகும் உறவுகளுக்கு மத்தியில் இவர் நீங்காத " உடனிருப்புக்கு" நமக்குப் பாடம் புகட்டுவதாக இவருக்குப் பட்டயம் வாசிக்கிறார் தந்தை.எல்லாரோடும் எல்லாமுமாக இருக்கும் ஆளுமைக்கும்,உறவின் மேன்மையை எடுத்துச்சொல்லும் உடனிருப்புக்கும்,தன்னிடம் உள்ளதை தான் தேடிய தன் இறைவனுக்கு முழுவதுமாக்க் கொடுக்கும் தாராள மனத்துக்கும் சொந்தக்காரரான இவரை நம் வாழ்விலும் நம் கைகோர்த்து வர வேண்டுவோம்.ஒரு கவிதைக்கே கவிதை வாசித்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. When we submit ourselves fully to our lord,HE supplies what is necessary for us.
    அனைவருக்கும் பரிசயமான, உடனிருக்கும்,நட்பை நிலைநிறுத்தும், தூய லூக்காவை பின்பற்றுவோம்
    Well done rev.Yesu

    ReplyDelete